நெல்லை காங். மாவட்ட தலைவர் மரணம் – முன்னாள் மத்திய அமைச்சரிடம் விசாரணை!
Share
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் மரணம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனிடம் தனிப்படை காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர் தனக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வருவதாகவும், தனது வீடு மற்றும் அலுவலகத்திற்கு முன்பாக அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடுவதாகவும் காவல்துறையில் புகார் அளித்திருந்த நிலையில், அவரை 2 நாட்களாக காணவில்லை என்று அவரது மகனும் காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஜெயக்குமாரை தேடிவந்த காவல்துறை, அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் கிடந்த ஜெயக்குமாரின் உடலை மீட்டனர். பாதி எரிந்த நிலையில் அவர் மீட்கப்பட்டதை அடுத்து கொலை என வழக்குப்பதிவு செய்த காவல்துறை 8 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனிடம் தனிப்படை காவல்துறை விசாரணை நடத்தினர். பாளையங்கோட்டை பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள அவரது வீட்டில் காவல் ஆய்வாளர் சஜிகுமார் தலைமையிலான காவல்துறை கிட்டதட்ட 30 நிமிடங்கள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஜெயக்குமாரின் உறவினரும், நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் கரைச்சுத்துப்புதூரைச் சேர்ந்த மயக்கவியல் மருத்துவருமான செல்வகுமார் என்பவரிடமும் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து ஜெயக்குமாரின் வீடு முன்பு அமைந்திருக்கும் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறை சோதனையிலும் ஈடுபட்டனர்.