LOADING

Type to search

இந்திய அரசியல்

வாக்குப்பதிவு சதவீதங்களில் குளறுபடி – தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்கிறது இந்தியா கூட்டணி!

Share

வாக்குப்பதிவு சதவீதங்களில் ஏற்படும் குளறுபடிகள் குறித்து புகாரளிக்க இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ளனர்.

      இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், ஏப்ரல் 26-ம் தேதி 2ம் கட்ட வாக்குப்பதிவும், மே 7-ம் தேதி 3ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 4ம் கட்ட வாக்குப்பதிவு மே 13-ம் தேதியும், 5ம் கட்ட வாக்குப்பதிவு மே 20-ம் தேதியும், 6ம் கட்ட வாக்குப்பதிவு மே 25-ஆம் தேதியும், 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஏற்கெனவே நடந்து முடிந்த தேர்தல் வாக்குப்பதிவுகளில் பல்வேறு குளப்படிகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. வாக்குப்பதிவு நடைபெற்ற மாநிலங்களில் தேர்தல் அதிகாரியால் வெளியிடப்பட்ட வாக்குப்பதிவு சதவிகிதமும்,  இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வாக்குப்பதிவு சதவிகிதமும் வேறுபட்டு இருந்ததும், வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட கால தாமதமானதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், வாக்குப்பதிவு சதவிகிதங்களில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரை, மாலை சந்தித்து, இந்தியா கூட்டணி தலைவர்கள் புகார் அளிக்க உள்ளனர். மாலை 4 மணியளவில் நடைபெற உள்ள இந்த சந்திப்பில் காங். பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். தேர்தல் விதிகளை மீறும் பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் எனவும் தேர்தல் ஆணையரை வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.