லாலு பிரசாத் யாதவ் மகள் மிசா பாரதி வேட்புமனு தாக்கல்
Share
பீகாரில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் 7 கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7ம் தேதி தொடங்கி நாளை நிறைவு பெறுகிறது. இதனால் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், பீகாரின் பாடலிபுத்ரா மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்- அமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி மற்றும் கட்சி உறுப்பினர்கள் உடன் இருந்தனர். மிசா பாரதி தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த பாரதி கூறியதாவது, “கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடிக்கு மக்கள் 2 வாய்ப்புகளை கொடுத்துள்ளனர். ஆனால் அவர் நாட்டுக்காக ஏதாவது செய்திருந்தால், வாகன பேரணி நடத்த வேண்டியதில்லை. அவர் தனது காலத்தில் செய்த அனைத்தையும் பட்டியலிட்டு மக்களுக்கு சொல்லியிருக்க வேண்டும், ஆனால் அவர் கைகளை அசைத்து ஊடகங்களில் சில தலைப்பு செய்திகளை உருவாக்குகிறார். இது பீகாருக்கு எந்த வேலை வாய்ப்பையோ, சிறப்பு அந்தஸ்தையோ வழங்காது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்காது.” இவ்வாறு அவர் கூறினார்.