தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணி; கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்
Share
தாமிரபரணியை சுத்தப்படுத்தும் திட்டத்தினை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்.
கோமாட்சு இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் முயற்சியில் தாமிரபரணி நதி மறுசீரமைப்புத் திட்டம் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு தாமிரபரணி நதியை மீட்டெடுத்து புத்துயிர் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.மாவட்டத்திலுள்ள மற்ற நீர்நிலைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத் து வருகிறது.
கடந்த மாதம் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் தொடங்கிய இந்த பணி தற்போது தூத்துக்குடி மாவட்டத்துக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க விழா கலியாவூர் மருதூர் அணைப்பகுதியில் நடந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் லெட்சுமி பதி தலைமை வகித்தார். தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் தலைவர் செந்தூர் பாரி, வரவேற்றார். இதற்கான இயந்திரத்தினை இயக்கி வைத்து கனிமொழி எம்.பி பேசினார்.
அப்போது அவர், “தாமிரபரணி நதியை சுத்தமாக வைத்துக் கொள்ள நாமும் உதவ வேண்டும். குப்பைகளை நதியில் கொட்டி விடக்கூடாது. துணிகளை பத்திரமாக வைத்து மற்றவர்களுக்கு உதவும் வகையில் அதை வழங்கலாம். மாறாக நீர் நிலையில் கொட்டி மாசு படுத்தி விடக்கூடாது. கடந்த டிசம்பர் மாதம் மழை வெள்ளத்தினால் நமக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்ந்து ஏற்படாமல் இருக்கும் வண்ணமாக தாமிரபரணியை சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மருதூர் அணையில் இருந்து பழைய காயல் வரை இந்த பணி நடைபெறும்” என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், உதவி ஆட்சியர் ஜஸ்வர்யா, மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் வசந்தி, உதவி செயற் பொறியாளர் ஆதி மூலம், ஒன்றிய ஆணையாளர் அரவிந்தன், கோமாட்சு மேலாளர் கைலாசம், எக்ஸ்னோரா ராதா சீனிவாசன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, பஞ்சாயத்து தலைவர் தலைவர் கலியாவூர் சின்னசாமி, அங்கமங்கலம் பால முருகன், காலங்கரை கந்தசாமி, மதர் சமூக சேவை நிறுவன கென்னடி, லீடு டிரஸ்ட் இயக்குநர் பானுமதி, பனைப் பாதுகாப்பு தொழிலாளர் மேம்பாட்டு இயக்க ஒன்றிய தலைவர் பாலா, ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். எக்ஸ்நோரா பொருளாளர் சுப்ரமணி நன்றி கூறினார்.