காஸா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல் – 26 பேர் உயிரிழப்பு!
Share
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது. தொடர்ந்து இரு தரப்பினரும் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். இந்நிலையில், மத்திய காஸாவின் நுசீரத்தில் அமைந்துள்ள அல்-ஜாவ்னி பள்ளி மீது நேற்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் காரணமாக இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீன குடும்பங்கள், ஐ.நா. அமைப்பால் நிர்வகிக்கப்படும் இந்த பள்ளிக்கூடத்தில் தங்கியிருந்த நிலையில், தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த கொடூர தாக்குதல்களில் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டுத் திடலில் குழந்தைகள் உடல் சிதறி உயிரிழந்து கிடந்த காட்சிகள் நெஞ்சை உலுக்கியுள்ளதாக பாலஸ்தீன அதிகாரி ஒருவர் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஹமாஸ் படையினர் மேற்கண்ட நிவாரண முகாம் அமைந்துள்ள இந்த பகுதியில் பதுங்கியிருந்து, இஸ்ரேல் வீரர்கள் மீதான தாக்குதல்களை நடத்தி வந்ததாகவும், அவர்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.