விக்கிரவாண்டி வாக்குசாவடியில் வாக்களிக்க நின்ற பெண்ணுக்கு கத்திகுத்து
Share
விக்கிரவாண்டி அருகே அன்னியூரை அடுத்த கொசப்பாளையத்தை சேர்ந்தவர் கனிமொழி(வயது42) இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் ஏழுமலை என்பவருடன் கனிமொழிக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் திருமணம் செய்யாமலேயே இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். இதற்கிடையே கனிமொழிக்கு மற்றொருவருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஏழுமலை கனிமொழியை கண்டித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் கனிமொழி தொடர்பை கைவிடவில்லை என கூறப்படுகிறது.
இதனால் கனிமொழி மீது ஏழுமலை ஆத்திரத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி கனிமொழி கொசபாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் 11.30மணியளவில் வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஏழுமலை மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கனிமொழியை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கனிமொழியை அங்கிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கனிமொழிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாக்குசாவடியில் வாக்களிக்க வந்த பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.