பாஜக ஆளும் மாநிலங்களில் இளைஞர்கள் வேலையில்லாமல் தவிப்பு – ராகுல் காந்தி
Share
நாட்டிலேயே, பாஜக ஆளும் மாநிலங்கள் வேலையின்மை என்ற நோயின் மையமாக மாறியுள்ளதாக மக்களவை எதிர்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதாக தரவுகள் அவ்வவ்போது வெளியாகி வருகின்றன. இதனால், இளைஞர்கள் பலர் நிரந்தர வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். இதனால், ஒரு பணியிடத்திற்கு 100 பேர் போட்டிபோடும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. 10 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பின்மை சிக்கல் உச்சம் தொட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்ச்சாட்டி வருகின்றன. ஆளும் அரசு அதற்கு மறுப்பும் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் குஜராத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் 10 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு ஏராளமானோர் குவிந்ததால், அந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலம் அங்கலேஷ்வர் லார்ட்ஸ் பிளாசா ஹோட்டலில் உள்ள தெர்மாக்ஸ் நிறுவனத்தில் 10 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையறிந்த இளைஞர்கள் பலர், அந்த நிறுவன வாசலில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காணொளியில் காணலாம். இந்தப் பணியிடங்களுக்காக, கட்டுக்கடங்காத இளைஞர்கள் கடந்த ஜூலை 9-ம் தேதி குவிந்துள்ளனர். சுமார் 1800 பேர் வந்திருந்ததாக கூறப்படுகிறது. இப்படி இளைஞர்கள் முண்டியடித்து வேலைக்காகக் குவிந்ததால், அங்கு தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு வேலி உடைந்தது. என்றாலும், இந்தச் சம்பத்தில் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த காணொளியை மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங். முக்கிய தலைவருமான ராகுல் காந்தி பகிர்ந்து, நாட்டின் வேலைவாய்ப்பின் நிலை இதுதான் என்பதுபோல் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில், “இந்தியாவில் ‘வேலையின்மை என்ற நோய்’ ஒரு தொற்றுநோயாக உருவெடுத்துள்ளதோடு, பாஜக ஆளும் மாநிலங்கள்தான் இந்த நோயின் மையமாக மாறியுள்ளன. ஒரு வேலைக்காக வரிசையில் நிற்கும் ‘இந்தியாவின் எதிர்காலம்’ நரேந்திர மோடியின் ‘அமிர்தகால’த்தின் யதார்த்தமாக உள்ளது” என பதிவிட்டுள்ளார்.