கனமழையால் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகள் – நேபாளத்தில் 11 உடல்கள் மீட்பு!
Share
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 2 பேருந்துகள் கடந்த 12ம் தேதி அதிகாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பேருந்து ஓட்டுநர்கள் உள்பட மொத்தம் 63 பேர் பயணம் செய்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதில் 7 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் சிக்கிய ஒரு பேருந்து காத்மாண்டு சென்று கொண்டிருந்த ஏஞ்ஜெல் பேருந்து என்பதும், அதில் 24 பயணிகள் இருந்ததாகவும், மற்றொரு பேருந்து காத்மாண்டுவிலிருந்து ரௌதஹத் அருகே கௌர் பகுதிக்கு வந்துகொண்டிருந்ததாகவும், அதில் 41 பயணிகள் இருந்ததாகவும் ஏஎன்ஐ செய்தி தெரிவித்துள்ளது. இந்நிலையில், நேபாளத்தில் நிலச்சரிவால் 2 பேருந்துகள் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானவா்களில் இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்தித்து பேசினர்.
அப்போது பேசிய அதிகாரிகள் கூறியதாவது: “நிலச்சரிவால் திரிசூலி ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகளில் இருந்தவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 11 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பல்வேறு ஆற்றங்கரைப் பகுதிகளில் அந்த உடல்கள் மீட்கப்பட்டன. அவற்றில் 3 இந்தியர்கள் உள்ளிட்ட 7 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுதவிர, ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட மேலும் 4 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாதால் அவர்கள் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகளில் இருந்தவர்களா என்பதை உறுதி செய்ய முடியவில்லை” இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.