அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை முதலைமைச்சர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். இடைத்தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே இருப்பதால், பிரதான கட்சி வேட்பாளர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவு கேட்டு அந்த கட்சியின் தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான விஜய் இன்று (புதன்கிழமை) தாராபுரத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். இதற்காக தாராபுரத்தில் இருந்து உடுமலை செல்லும் சாலையில் கொண்டரசம்பாளையம் மாருதி நகரில் 54 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக மைதானம் தயார் செய்யப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் ஆதரவு திரட்டுகிறார். பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 10 ஆயிரம் பேருக்கு ‘கியூஆர்’ கோடுடன் கூடிய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதல்-அமைச்சர் விஜய் புறப்பட்டு கோவை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து கார் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைப்பகுதிக்கு தற்போது வந்தடைந்தார். பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைப்பகுதி அருகே குவிந்துள்ள த.வெ.க. தொண்டர்கள் முதல்-அமைச்சர் விஜய்யை ஆரவாரம் செய்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை இணைந்தார். முதல்-அமைச்சர் விஜய், செம்மலை கொண்டு வந்த தவெக கட்சியின் துண்டை வாங்கி அவர் கழுத்தில் போட்டு கட்சியில் சேர்த்துக் கொண்டார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக சட்ட சபையில் தற்காலிக சபாநாயகராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.