அநியாயத்திற்கு ‘நல்லவரான’ அர்ச்சுனா, எம்.பி.பதவியிலிருந்து விலகுவாரா? அல்லது விலக்கப்படுவாரா?

Share

‘ யாழ்ப்பாணம் தென்மராட்சி மக்களின் முட்டாள்தனத்தினால் தமிழ் தேசிய அரசியலில் கடந்த 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் மூலம் ஒரு ”புதுவடிவமாக” உருவெடுத்து இன்று தமிழ் தேசிய அரசியலையே நாறடித்துக் கொண்டும் தமிழினத்தையே தலைகுனிய வைத்துகொண்டுமிருக்கும் இந்த அர்ச்சுனா இராமநாதன் என்னும் அரசியல்(வாந்தி)வாதி தற்போது ஒரு சட்ட சிக்கலில் மாட்டியுள்ளார். இதனால் அவரின் எம்.பி.பதவி பறிபோகக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ள சூழலில்கூட தனது பொய்,பித்தலாட்டங்கள் மூலம் தமிழ் மக்களை குறிப்பாக புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி பணம் பறிக்கவே அவர் முயற்சிக்கின்றார். ‘நீதிமன்றத் தீர்ப்பினால் தனது எம்.பி. பதவி பறிபோவது உறுதி என்ற நிதர்சனம் புரிந்ததும்,”நானே எம்.பி.பதவியிலிருந்து இராஜிநாமா செய்யப்போகின்றேன் ” என பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் அறிவிக்கும் அவர்.மறுபுறம் “எம்.பி.பதவியைக் காப்பாற்ற வழக்காடப் பணம் தாருங்கள்” என புலம் பெயர் தமிழர்களிடம் கேட்கின்றார். எம்.பி பதவியிலிருந்து விலகப்போவதாக அறிவிக்கும் ஒருவருக்கு வழக்காட எதற்குப் புலம்பெயர் தமிழரின் பணம்?

—–கே.பாலா

இலங்கைத் தமிழ் அரசியலின் அண்மைய பக்கங்களில், மக்களுக்கான ஆக்க பூர்வமான குரலாக ஒலிப்பதற்குப் பதிலாக, அருவருப்பான குரலாக ஒலிப்பவராக ,ஊடக வெளிச்சத்தையும் பரபரப்பையும் , பணத்தையும் மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கும் ஒருவராக , பாராளுமன்றத்தின் கண்ணியத்தையும், மக்கள் அளித்த வாக்குகளின் பொறுப்பையும் மறந்து,அரசியல் முதிர்ச்சியற்ற கோமாளித்தனங்கள், பகைமை வெறுப்பை விதைக்கும் வன்ம உரைகள், ஆதாரமற்ற பொய்கள் மற்றும் திட்டமிடப்பட்ட பித்தலாட்டங்கள் செய்யும் ஒருவராக சுயேட்சைக்குழு 17 இன் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான அர்ச்சுனா இராமநாதனின் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

யாழ் மாவட்ட மக்களின் குறிப்பாக தென்மராட்சி மக்களின் முட்டாள்தனத்தினால் தமிழ் தேசிய அரசியலில் கடந்த 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் மூலம் ஒரு ”புதுவடிவமாக” உருவெடுத்து இன்று தமிழ் தேசிய அரசியலையே நாறடித்துக் கொண்டும் தமிழினத்தையே தலைகுனிய வைத்துகொண்டுமிருக்கும் இந்த அர்ச்சுனா இராமநாதன் என்னும் அரசியல்(வாந்தி)வாதி தற்போது ஒரு சட்ட சிக்கலில் மாட்டியுள்ளார். இதனால் அவரின் எம்.பி.பதவி பறிபோகக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ள சூழலில்கூட தனது பொய்,பித்தலாட்டங்கள் மூலம் தமிழ் மக்களை குறிப்பாக புலம்பெயர் தமிழர்களை ஏமாற்றி பணம் பறிக்கவே அவர் முயற்சிக்கின்றார்.

அரசு மருத்துவ அதிகாரி பதவியை முறைப்படி இராஜிநாமா செய்யாமலே 2024 பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு யாழ் மாவட்ட எம்.பி.யாக வெற்றி பெற்றமை சட்டவிரோதமானது என்ற சட்டச் சவாலும், அதனால் அவரது பதவி எந்நேரமும் பறிபோகலாம் என்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தொங்குவாளும் ஒருபுறம் அவரை இறுக்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் “நான் எம்பி பதவியை தியாகம் செய்யத் தயார், எனக்குப் பின் என் தங்கம் கௌசல்யா நரேந்திரன் அந்த இடத்திற்கு வருவார்” என்று அவர் தொடர்ந்து உதிர்க்கும் வார்த்தைகள், கொள்கைப் பிடிப்புள்ள ஒரு தியாகத்தின் குரலாக ஒலிப்பதாகத் தோன்றினாலும் அதன் பின்னால் அவரின் ”நரிக்குணம்”தான் உள்ளது.

எம்.பி.பதவிக்கு ஏன் ஆபத்து?

அர்ச்சுனா இராமநாதன் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்ட காலத்தில், சுகாதார அமைச்சின் கீழ் பொது மருத்துவ அதிகாரியாக பணியாற்றியதன் மூலம் அரசுடன் ஒப்பந்த அடிப்படையில் தொடர்பில் இருந்தார். அரசியலமைப்பின் விதிகளின்படி அரசு அதிகாரியாக இருக்கும் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தகுதியற்றவர் என்பதால், அவ்வாறு ஏதேனும் தேர்தல் ஒன்றில் அவர் போட்டியிட விரும்பினால் முதலில் தனது அரச பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும்.

ஆனால் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் நடைபெற்ற காலத்தில் ஒரு விசாரணைக்காக அர்ச்சுனா இராமநாதன் சுகாதார அமைச்சினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் ,இவ்வாறான நிலையில் தான் அவர் சுயேட்சைக்குழு 17 இன் தலைவராக ” ஊசி”சின்னத்தில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு 20,487 வாக்குகள் பெற்று யாழ் மாவட்ட எம்.பி.யாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.இவரின் சுயேட்சைக்குழு யாழ் மாவட்டத்தில் மொத்தமாக 27,855 வாக்குகளைப் பெற்றிருந்தது

இவ்வாறான நிலையில் யாழ் மாவட்ட எம்.பி.யான அர்ச்சுனா இராமநாதனின் எம்பி பதவியின் செல்லுபடியாகும் தன்மையை சவாலுக்கு உட்படுத்தி அவரை எம்.பி. பதவியிலிருந்து நீக்கக் கோரி ”எந்த உரிமையில் இப்பதவியை வகிக்கிறீர்கள்”என்ற பேராணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 2025 மே 14 இல் சமூக ஆர்வலரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்தார். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மாயாதுன்ன கொரயா மற்றும் மஹேன் கொபல்லவ ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தற்போது பல கட்டங்களாக விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் மிக விரைவில் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.

அர்ச்சுனா பதவி விலகுவதாக அறிவிப்பது ஏன்?

நீதிமன்ற விசாரணைகளில் ”2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் நடைபெற்ற காலத்தில் ஒரு விசாரணைக்காக அர்ச்சுனா இராமநாதன் சுகாதார அமைச்சினால் பணி இடைநீக்கம் மட்டுமே செய்யப்பட்டிருந்தார். அவர் பணி நீக்கம் செய்யப்படவில்லை. அத்துடன் அவர் பணியிலிருந்தும் இராஜிநாமாவும் செய்யவில்லை ஆகையினால் அவர் ஒரு அரச அதிகாரி என்ற பதவியில் இருந்தவாறே தேர்தலில் போட்டியிடடார்”என சுகாதார அமைச்சும் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளதால் ”அர்ச்சுனா இராமநாதன்.அரச பதவியை இராஜிநாமாசெய்யாமல் தேர்தலில் போட்டியிட்டதால் அவர் எம்.பி.பதவி வகிக்க தகுதியற்றவர்”என்ற தீர்ப்பு வருவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.

அவ்வாறாக அர்ச்சுனா இராமநாதன்.அரச பதவியை இராஜிநாமாசெய்யாமல் தேர்தலில் போட்டியிட்டதால் அவர் எம்.பி.பதவி வகிக்க தகுதியற்றவர்”என்ற தீர்ப்பு வந்தால் அர்ச்சுனா நாட்டில் பின்னர் நடைபெறும் தேர்தல்கள் எவற்றிலும் போட்டியிட முடியாது. அதேவேளை அவ்வாறு தீர்ப்பு வருவதற்கு முன்னர் அவர் தனது எம்.பி. பதவியை தானாக விரும்பி இராஜிநாமா செய்தால். சில வேளைகளில் நீதிமன்றம் தீர்ப்பை வழங்காது வழக்கை தள்ளுபடி செய்யும்.அப்படி தள்ளுபடி செய்தால் நாட்டில் பின்னர் நடக்கும் தேர்தல்களில் அர்ச்சுனாவால் போட்டியிட முடியும்.

அதனால் தான் விரைவில் நடை பெறலாமென எதிர் பார்க்கப்படும் மாகாணசபைகளுக்கான தேர்தலில் வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதவியை இலக்கு வைத்து நீதிமன்றத்தீர்ப்பு வருவதற்கு முன்னரே எம்.பி. பதவியிலிருந்து தானாக இராஜிநாமா செய்ய அர்ச்சுனா திட்டமிடுகின்றார். அந்த திட்டத்தில்தான் “நானே பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகப் போகின்றேன் எனக்குப் பின் எனது பாராளுமன்ற ஆசனத்திற்கு கௌசல்யா நரேந்திரன் தெரிவாகி எம்.பி.யாவார்” என்ற தொடர் அறிவிப்புகளை விடுத்து வருகின்றார்.

கௌசல்யா எம்.பி.யாக முடியுமா?

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி.பதவியிலிருந்து இராஜிநாமா செய்தால் அவரின் சுயேட்சைக்குழு 17 ஐ சேர்ந்த கௌசல்யா நரேந்திரன் எம்.பி.யாக முடியுமா என்ற கேள்விக்கு ”ஆம் முடியும்” என்பதே பதில். அரசியலமைப்பின் படி ஒரு கட்சியை சேர்ந்த எம்.பி. ஒருவர் எம்.பி,.யாக பதவி வகிக்கும் காலத்தில் அவர் இறந்தாலோ அல்லது ஏதேனும் ஒரு காரணத்திற்காக எம்.பி.பதவியிலிருந்து இராஜிநாமா செய்தாலோ அவரின் பாராளுமன்ற ஆசனத்திற்கு அவரின் கட்சியை சேர்ந்த அவர் போட்டியிட்ட மாவட்டத்தில் போட்டியிட்டு அவருக்கு அடுத்தபடியாக விருப்பு வாக்குகளைப்பெற்ற ஒருவர் வர முடியும்.

அந்த வகையில் சுயேட்சைக்குழு 17 இன் தலைவராக ”ஊசி” சின்னத்தில் அர்ச்சுனா இராமநாதன் போட்டியிட்ட நிலையில் அவரின் குழு யாழ் மாவட்டத்தில் 27,855 மொத்த வாக்குகளைப் பெற்றது.இதில் அர்ச்சுனா இராமநாதன் 20,487 விருப்பு வாக்குகளைப் பெற்ற நிலையில் (பாராளுமன்றத்தேர்தல் வாக்களிப்பின்போது விரும்பிய கட்சிக்கு ஒரு வாக்கும் அதில் போட்டியிடும் வேட்பாளர்களில் விரும்பிய3 பேருக்கு 3 விருப்பு வாக்குகளும் அளிக்க முடியும்) 15789 விருப்பு வாக்குகளை ப்பெற்று அவருக்கு அடுத்த இடத்தில் கௌசல்யா நரேந்திரன் இருக்கின்றார். அந்த வகையில் அர்ச்சுனா இராமநாதன் பதவி நீக்கப்பட்டாலும் தானாக இராஜிநாமா செய்தாலும் அவரின் பாராளுமன்ற ஆசனத்திற்கு கௌசல்யா நரேந்திரனே தெரிவாவார்.

பணத்திற்கு இலக்கு வைக்கும் அர்ச்சுனா

இங்குதான் அர்ச்சுனாவின் பணத்தாசை அவரைபோட்டு ஆட்டுகின்றது. “எம்.பி.பதவியிலிருந்து நானே பதவி விலகப் போகிறேன்; எனக்குப் பின் கௌசல்யா நரேந்திரன் எம்பியாவார்” என்ற அவரது தொடர் அறிவிப்புகள் சில மாதங்களாக வந்து கொண்டிருந்தாலும் அவரது ‘இராஜிநாமா’ மட்டும் எழுத்து வடிவத்தைப் பெறவே இல்லை. அதேநேரம், தான் எம்.பி.யாக தொடர வேண்டுமென புலம் பெயர் தமிழர்கள் விரும்பினால் தனது எம்.பி பதவியைத் தக்கவைக்க நீதிமன்ற வழக்கை எதிர்கொள்ள நிதி தேவை எனக் கூறி, புலம்பெயர் தமிழர்களிடம் அவர் தீவிர பணத் திரட்டல் நடத்துகின்றார்.

நீதிமன்றத் தீர்ப்பினால் தனது எம்.பி. பதவி பறிபோவது உறுதி என்ற நிதர்சனம் புரிந்தும், “பதவியைக் காப்பாற்ற வழக்காட நிதி வேண்டும்” என்ற பெயரில் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களின் உழைப்பையும் உணர்ச்சிகளையும் அப்பட்டமாகச் சுரண்டி அவர் நடத்தும் ‘வசூல் வேட்டை’யும் தியாகி வேடமிட்டு பரிதாபத்தைத் தேடுவதும், நீதிமன்றப் போராட்டத்தின் பெயரால் நிதி திரட்டித் தன் சொந்தப் பையை நிரப்ப முயல்வதும் ஒரே நேரத்தில் அரங்கேறும் அப்பட்டமான ஏமாற்று வித்தை. ஒருபுறம் “எம்.பி.பதவியை விட்டு விலகப் போகிறேன்” என்கிறார்.மறுபுறம் “எம்.பி.பதவியைக் காப்பாற்ற வழக்காடப் பணம் தாருங்கள்” என்கிறார்.எம்.பி. பதவியிலிருந்து விலகப்போகும் ஒருவருக்கு வழக்காட எதற்குப் புலம்பெயர் தமிழரின் பணம்?

கொள்கை ரீதியாகப் பதவி விலகத் தயார் என்ற அறிவுப்புக்களை விடுத்துக்கொண்டு சட்டப் போராட்டத்தின் பெயரால் புலம்பெயர் சமூகத்தின் உணர்வுகளைப் முதலீடாக்கிப் பணம் சேகரிப்பதற்கான ஒரு திட்டமிட்ட நாடகத்தை அவர் அரங்கேற்றுகின்றார்.உண்மையிலேயே அவர் தார்மீக அடிப்படையில் பதவியைத் துறக்கத் துடிக்கும் ஒரு நேர்மையாளராக இருந்தால் நீதிமன்றத் தீர்ப்பால் பதவி பறிபோவது உறுதி என்றறிந்தும், “நான் பதவி விலகப்போகிறேன்” என்ற பிம்பத்தைக் காட்டி புலம்பெயர் தமிழர்களிடம் நிதி திரட்ட வேண்டிய அவசியம் கிடையாது. “நான் எனது எம்பி பதவியை தியாகம் செய்யத் தயார், எனக்குப் பின் கௌசல்யா நரேந்திரன் அந்த இடத்திற்கு வருவார்” என்று கூறி மக்கள் மத்தியில் ஒரு போலிப் பரிதாப அலையை உருவாக்கி வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான அடித்தளத்தை போடுவதுடன் முடிந்தவரை புலம்பெயர் தமிழர்களிடம் பணம் கறப்பதே அவரின் திட்டம்.

இதற்கு அவர் அண்மையில் வெளியிட்ட அவரது சமூக வலைத்தள பதிவே ஆதாரமாகவுள்ளது. அதில் அவர் இவ்வாறு கூறுகின்றார்.” நான் தற்போது கொழும்பில் இருக்கின்றேன். ஆம் நான் கொழும்பில்தான் இருக்க வேண்டும்.ஏனென்றால் நான் எனது உழைப்பையும் பார்க்க வேண்டும். எனது பிஸ்னஸ் இங்குதான் உள்ளது. அத்துடன் எனக்கு யாழ்ப்பாணத்திலும் வீடு இல்லை. நீங்கள் யாராவது (புலப்பெயர் தமிழர்கள் )அங்கு வீடு வாங்கித்தந்தால் நான் அங்கு இருப்பேன்” ஏற்று கூறிவிட்டு பெரிதாக ஒரு நக்கல் சிரிப்பு சிரிக்கின்றார். பின்னர்” நான் கொழும்பில்தான் இருப்பேன். நான் யாழ்ப்பாண எம்.பி. யாழ்ப்பாணத்தில்தான் இருக்க வேண்டும் என நீங்கள் யாராவது நினைத்தால் அதற்கு வேறு யாரையும் பாருங்கள்”என்கின்றார்.இதற்கு பின்னரும் இந்த அர்ச்சுனா என்னும் தற்குறிக்கு யாராவது ஆதரவு வழங்குவார்களாக இருந்தால் தந்தை செல்வா கூறியதுபோல் ” கடவுளாலும் தமிழர்களைக் காப்பாற்ற முடியாது”

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>