அநுரவின் ‘மௌன’ அரசியலும் நீதியின் புதைகுழியாகும் செம்மணியும்!

Share

”ராஜபக்சக்கள் விடயத்தில் ”ஒரு குடும்பத்திற்காக இராணுவத்தில் உள்ள ஏதாவது ஒரு குழு செயற்பட்டிருந்தால் இராணுவத்தினர் என்று கூடப்பாராமல் தண்டனை வழங்குவோம்”என்று சூளுரைத்துள்ள ஜனாதிபதி அநுரகுமார, தமிழர்கள் விடயத்தில் ஒரு இனத்திற்கே எதிராக செயற்பட்டு செம்மணிப் படுகொலைகள் செய்த இராணுவத்தினர் தொடர்பில். அந்தப்படுகொலைகள் தொடர்பில் மௌனம் காப்பது தமிழினத்திற்கு எதிராக இராணுவம் செயற்பட்டிருந்தால் அது குற்றமல்ல என்ற நிலைப்பாட்டிலா?

—கே.பாலா


யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் பகுதி கடந்த 15 ஆம் திகதி காலை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது .யாழ். நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக மொத்தம் 56 நாட்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. 32 நாட்கள் அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 23ஆம் திகதியுடன் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.இந்நிலையிலேயேகடந்த 15 ஆம் திகதி அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மீண்டும் தமிழர்களின் எலும்புக்கூடுகள் வெளிவரத்தொடங்கியுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வுப்பணி கடந்த ஆண்டு மே 15ஆம் திகதி ஆரம்பமாகி, 9 நாட்கள் நடைபெற்றபோது 19 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.இரண்டாம் கட்ட அகழ்வுப்பணி கடந்த ஆண்டு ஜூன் 26 முதல் செப்டெம்பர் 3ஆம் திகதி வரை 45 நாட்கள் நடைபெற்ற நிலையில் , முதலாம் கட்டத்தில் கண்டெடுக்கப்பட்டவை உட்பட மொத்தம் 240 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன .மூன்றாம் கட்ட அகழ்வுப்பணி கடந்த ஏப்ரல் 27 முதல் மே 9 வரை 12 நாட்களும், ஜூன் 1 முதல் ஜூன் 23 வரை 22 நாட்களும் இடம்பெற்றன.இதில் மே மாதம் மட்டும் 21 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.இதன்படி, இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் செம்மணி மனிதப்புதைகுழிகளிலிருந்து மொத்தம் 412 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் 409 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையிலேயே மீண்டும் அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் உள்நாட்டு யுத்த வரலாற்றில், மனித உரிமை மீறல்களின் ஆகப்பெரும் சாட்சியாகவும், நீதிக்கான தேடலின் தீராத வடுக்கள் நிறைந்த பூமியாகவும் விளங்குவது யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதி. 90களின் பிற்பகுதியில் வெளிச்சத்திற்கு வந்த செம்மணி மனிதப்புதைகுழி, சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்ததோடு, பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தின் குறியீடாகவும் மாறியது.

1995 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணக் குடாநாட்டைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த காலத்தில், நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு,கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டனர். படுகொலை செய்யப்பட்டனர். அவ்வாறு இராணுவக் காவலில் படுகொலை செய்யப்பட்டவர்கள் செம்மணிப் பகுதியில் உள்ள உப்பளங்கள் மற்றும் வெளிகளில் இரகசியமாகப் புதைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

கைதடி மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ‘சோமரத்தின ராஜபக்ச’ என்ற இலங்கை இராணுவ லான்ஸ் கோப்ரல் , செம்மணியில் 300 முதல் 400 தமிழர்களின் உடல்கள் இராணுவத்தால் புதைக்கப்பட்டுள்ளன என்றும், தனக்கு அந்த இடங்கள் தெரியும் என்றும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த போதே இந்த விவகாரம் 1998 இல் முதன்முதலில் உலகிற்குத் தெரியவந்தது.

சோமரத்தின ராஜபக்சவின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, சர்வதேசக் கண்காணிப்பாளர்களுடன் இணைந்து 1999 ஆம் ஆண்டு ஜூன் மாதம் செம்மணியில் முதன்முதலில் நீதிமன்ற உத்தரவின் பேரில் அகழ்வுப் பணிகள் நடத்தப்பட்டன. அப்போது அங்கு 15 உடல்களின் எச்சங்கள் மட்டுமே மீட்கப்பட்டன. முறையான தொடர் விசாரணைகள் இன்றி அந்த வழக்கு பின்னர் கிடப்பில் போடப்பட்டது.

இருப்பினும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் செம்மணி – சித்துபாத்தி மயானப் பகுதியில் மின் மயானம் அமைப்பதற்காகக் குழி தோண்டியபோது மீண்டும் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் சட்ட மருத்துவ அதிகாரிகளின் முன்னிலையில் பெரிய அளவிலான புதிய அகழ்வுப் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் வரை தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

1999 இல் மீட்கப்பட்ட 15 மனித உடல் எச்சங்களைத் தவிர்த்து, 2025 இல் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வரும் புதிய மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சிகளின் மூலம் மொத்தம் 412 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. இதுவே இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ளது.

ஆனால் ஆண்டுகள் பல கடந்தும், ஆட்சிகள் பல மாறியும், ‘நல்லாட்சி’ மற்றும் ‘மாற்றம்’ என்ற முழக்கங்களுடன் ஆட்சிபீட மேறிய அரசுகள் இந்த விவகாரத்தை எவ்வாறு கையாள்கின்றன என்பது எப்போதும் விவாதத்திற்குரியதே. அந்த வகையில், இலங்கையின் அரசியல் அமைப்பில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, ஊழலற்ற, நீதியான நிர்வாகத்தை வழங்குவதாக வாக்குறுதியளித்து பதவியேற்றுள்ள தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும், செம்மணி விவகாரத்தில் காட்டிவரும் மௌனமும் அலட்சியமும், தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு உதாரணமாக 2 சம்பவங்களை குறிப்பிட முடியும்

சம்பவம் -1

கடந்த வருடம் செப்டம்பர் 1 ஆம் திகதி வடக்கிற்கு இரு நாள் விஜயம் செய்த ஜனாதிபதி அநுரகுமார ,யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் 3ஆவது கட்டத்தின் பணிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத் திறப்பு ,யாழ்ப்பாணம், மண்டை தீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள நவீன கிரிக்கெட் மைதானத்தின் பணிகள் ,உலக தென்னை தினத்தை முன்னிட்டு புதுகுடியிருப்பில் ‘கப்துரு சவிய’ தேசிய வேலைத்திட்டம், முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் போன்ற அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.

அத்துடன் இலங்கை -இந்திய மீனவர்களினாலும் இலங்கை-தமிழக அரசியல்வாதிகளினாலும் கடும் சர்ச்சைக்குரியதாக்கப்பட்டுள்ள கச்சதீவுக்கும் அதிரடி கண்காணிப்பு விஜயம் செய்து ”இதுஎங்க ஏரியா உள்ளே வராதே”என்ற செய்தியை தமிழக,இந்திய அரசுகளுக்கும் இந்திய மீனவர்களுக்கும் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் கூறியதுடன் அங்கு சென்ற முதல் இலங்கை ஜனாதிபதி என்ற பெயரையும் அநுரகுமார திசாநாயக்க இலங்கை வரலாற்றில் பதிவு செய்து கொண்டார்.

செப்டம்பர் 1 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு இரு நாள் விஜயம் செய்யவுள்ளதாக அறிவிப்புக்கள் வெளியான நிலையில் இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி நாட்டினதும் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்த்துள்ள செம்மணி மனிதப்புதைகுழி அகழ்விடத்திற்கு செல்வார் என்ற எதிர்பார்ப்பு அப்போது தமிழ் மக்களிடமும் தமிழ் அரசியல் தரப்புக்களிடமும் ஏற்பட்டிருந்தது.அதைவிட ஜனாதிபதி செம்மணி மனிதப்புதைகுழி அகழ்விடத்திற்கு வருகைதர வேண்டுமென்ற வேண்டுகோள்களும் விடுக்கப்பட்டிருந்தன.

இதற்கு வலுசேர்க்கும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்திற்கு விஜயம் செய்வார் என முன்னதாக, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் உறுதியளித்திருந்தார்.அதுமட்டுமன்றி அரச தரப்பின் பல்வேறு தரப்பினராலும் உறுதியுமளிக்கப்பட்டிருந்தது. ஆனால் யாழ்ப்பாணத்திற்கு குறிப்பிட்ட நாளுக்கு முதல் நாளே வந்து விட்ட ஜனாதிபதி அநுரகுமார யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் முழுவதும் தங்கி நின்ற போதும் செம்மணி வீதியை வாகனத் தொடரணியாக கடந்து பயணித்த போதிலும்,செம்மணி மனிதப் புதைகுழியை சென்று பார்வையிடவில்லை.செம்மணிப் பகுதியில் வாகனத்தை மெதுவாக செலுத்திக் கூட அப்பகுதியை பார்க்க அவர் விரும்பவில்லை. அங்கு தனக்காக காத்திருந்த தமிழ் மக்களையும் அவர் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

இது தமிழ் மக்களிடம் கடும் ஏமாற்றத்தையும் விசனத்தையும் ஏற்படுத்திவிட்டதுடன் இலங்கை ஜனாதிபதிகள் வரிசையில் ஜனாதிபதி அநுரகுமாரவையும் ஒரு ”மாற்றமில்லாத”, ”புதிய திசை காட்டாத” ஜனாதிபதியாக அடையாளப்படுத்தியது. ஆனால் இந்த நிலையிலிருந்து ஜனாதிபதி அநுரகுமார இன்னும் மாறவில்லை என்பதையே அண்மையில் பாராளுமன்றத்தில் அதிகம் பேசப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழி விடயம் தொடர்பில் தனது பாராளுமன்ற உரையில் வாய் திறக்காதது உறுதிப்படுத்தியுள்ளது

சம்பவம் -2

கடந்த மாதம் 23,24,25,26 பாராளுமன்ற அமர்வுகளில் உயர் நீதிமன்றங்களின் நீதியரசர்கள் நியமனம்,மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது, போதைப்பொருள், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் மற்றும் செம்மணி மனிதப்புதைகுழி ஆகிய 5 விடயங்களே சபையில் முழு ஆதிக்கம் செலுத்தி காரசாரமான விவாதங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருந்தன.எதிர்க்கட்சிகள் செங்கோலை தூக்கிச்செல்ல முயற்சிக்குமளவுக்கு பாராளுமன்றம் அமளிதுமளிப்பட்டது.

இவ்வாறாக ஏதாவது அரசுக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் எதிர்க்கட்சிகளினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் போதெல்லாம், அரசாங்கம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகும்போதெல்லாம் விவாதத்தின் இறுதி நாளில் சபைக்கு வரும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு,விமர்சனங்களுக்கு வெள்ளையடித்து மூடி மறைத்து.எதிர்க்கட்சிகளில் பழி போட்டு, அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் என சில விடயங்களை பட்டியல் போட்டு அரசாங்கத்தை நியாயப்படுத்தி உரையாற்றிச் செல்வதே வழக்கம்.

அதேபோன்றே அந்த வார பாராளுமன்ற அமர்வுகளில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 3 நாள் அமர்வுகளில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 25 ஆம் திகதி வியாழக்கிழமை சபைக்கு வருகைதந்த ஜனாதிபதி நீண்டதொருஉரை நிகழ்த்தி வழக்கம் போலவே அரசாங்கத்தின் மீதான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு, அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளுக்கு வெள்ளையடித்து மூடி மறைத்தார்.

ஆனால் இதில் ஜனாதிபதியும் அரசாங்கமும் திட்டமிட்டு ஒரு விடயத்தை செய்திருந்தன. அதுதான் ஜனாதிபதியினதும் -ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினதும் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது.அதாவது அந்த வார பாராளுமன்ற அமர்வுகளில் முக்கியமாக சிங்கள எதிர்கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மட்டுமே ஜனாதிபதி அநுரகுமார கவனம் செலுத்தி பதில் வழங்கினார்.

அதேவேளை தமிழ் தேசியக்கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பிலான கோரிக்கைகள், வலியுறுத்தல்கள்,குற்றச்சாட்டுக்கள்,தமிழ் மக்களின் உணர்வுகள் குறித்து ஜனாதிபதி தனது நீண்ட உரையில் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. பதில் வழங்கவில்லை.திட்டமிட்டே ஜனாதிபதி செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தை தனது பாராளுமன்ற உரையில் பேசாது புறக்கணித்தார்.

ஏன் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூட அண்மையில் யாழ்ப்பாணம் விஜயம் செய்து செம்மணி மனிதப்புதை குழிப்பகுதிக்கும் சென்றபோதும் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்களை சந்திக்காது புறக்கணித்திருந்தார். செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தைப் பொறுத்தவரையில் ஜனாதிபதியோ நீதி அமைச்சரோ ,அதிகம் கவனம் செலுத்தவோ .இதுதொடர்பில் தமிழ் மக்களை சந்திக்கவோ தயாரில்லை என்பதே இவ்வாறான புறக்கணிப்புக்கள் மூலம் வெளிப்படுகின்றது. செம்மணி விடயத்தில் நீதியை நிலைநாட்ட முயன்றால் இராணுவத்தினரை தண்டிக்க வேண்டிவரும் என்பதாலும் அதன் மூலம் இராணுவத்தினரை பகைக்க வேண்டிவரும் என்பதாலுமே செம்மணி விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார அடக்கி வாசிக்கின்றார்.

இலங்கையில் செம்மணி மட்டுமன்றி, கொக்குத்தொடுவாய், மண்டைதீவு, மன்னார், கொழும்பு துறைமுகம் என பல இடங்களில் மனிதப் புதைகுழிகள் உள்ளநிலையில் இந்த புதைகுழிகளின் உரிமையாளர்கள் ரணில் மற்றும் ராஜபக்சக்களே தவிர நாம் அல்ல.இந்த புதைகுழிகள் ,காணலாலாக்கப்பட்டோருடன் தொடர்புடைய சிலர் வடக்கிலும் உள்ளனர். செம்மணி மனிதப் புதைகுழியுடன் தொடர்புடையவர்கள் வடக்கில் உள்ளூராட்சி சபைகளுக்கும் தெரிவாகியுள்ளனர்.இந்த மனிதப்புதைகுழிகள் தொடர்பிலான ,விசாரணைகள் போன்றவற்றுக்கு நாம் போதியளவு நிதியை ஒதுக்கி வசதிகளை செய்து கொடுத்துள்ளோம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க பகிரங்கமாகவே அறிவித்திருந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார தொடர்ந்தும் செம்மணியை புறக்கணிப்பது ஏன்?

ஜனாதிபதி அநுரகுமார தனது அந்த பாராளுமன்ற உரையில் ”ஒரு குடும்பத்திற்காக இராணுவத்தில் உள்ள ஏதாவது ஒரு குழு செயற்பட்டிருந்தால் இராணுவத்தினர் என்று கூடப்பாராமல் தண்டனை வழங்குவோம்”என்று குறிப்பிட்டிருந்தார். .அதேவேளை மனிதப் புதை குழி விடயத்துடன் இராணுவத்தினரே தொடர்புபட்டுள்ள நிலையில் அவ்விடயத்தை ஜனாதிபதி தொடர்ந்து புறக்கணித்து வருகின்றார். அதனால் ஜனாதிபதியின் இந்தப் புறக்கணிப்பு தொடர்பில் ”ஒரு குடும்பத்திற்காக இராணுவத்தில் உள்ள ஏதாவது ஒரு குழு செயற்பட்டிருந்தால் இராணுவத்தினர் என்று கூடப்பாராமல் தண்டனை வழங்குவோம்”அதேவேளை ”ஒரு இனத்திற்கு எதிராக இராணுவத்தில் உள்ள ஏதாவது ஒரு குழு செயற்பட்டிருந்தால் இராணுவத்தினர் என்று பார்த்து தண்டனை வழங்க மாட்டோம்”என்பதுதான் ஜனாதிபதியின் நிலைப்பாடா என்பதே தமிழ் மக்களின் கேள்வியாகவுள்ளது .

எனவே அநுரகுமார அரசாங்கம் உண்மையான ‘மாற்றத்தை’ விரும்பினால், அந்த மாற்றம் தென்னிலங்கைக்கு மட்டுமானதாக இல்லாமல், வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் கண்ணீரையும் துடைப்பதாக இருக்க வேண்டும். இல்லாது விட்டால் இனவாத இலங்கை ஜனாதிபதிகள் வரிசையில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் எந்தவொரு மாற்றமும் இல்லாதவராக இணைக்கப்படுவார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>