அமெரிக்கா-இஸ்ரேல் கணிப்பு பிசகியதா?, மத்திய கிழக்கு தீவிர பதற்றம்

Share

சமகால அரசியல் தொடர்பான ஆழமான பகுப்பாய்வு!


சமகால அரசியலில் மிகவும் ஆழமாக அலசி ஆராயப்பட வேண்டிய ஒரு முக்கியமான விடயமாக இந்த பதிவு பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 28, அதாவது பிப்ரவரி மாதத்தின் இறுதி நாள், ஆண்டின் மிகக் குறைந்த நாட்கள் கொண்ட மாதமான பிப்ரவரியின் முடிவில் ஒரு முக்கியமான சம்பவம் இடம்பெற்றது. அந்த நாளில் திடீரென இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானில் தாக்குதல் நடத்தியது. அதில் ஈரானின் உச்சத் தலைவர் அல்ஹெமேனி அவர்களும் அவருடைய குடும்பத்தினரும் கொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்குப் பின்னால் மிகப் பெரிய அரசியல் அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், உலக அரசியல் வேறு ஒரு பரிணாம நிலையைத் தொட்டதாகவும் மதிப்பீடுகள் வெளிவந்தன. இச்சூழலில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கணிப்பு என்னவெனில், அந்த உச்சத் தலைவரை அகற்றிவிட்டால் அங்குள்ள இராணுவம், அமைப்புகள் மற்றும் இயக்கங்களுக்கு வழிநடத்தும் உத்தரவுகள் செல்லாது போகும் என்பதாகும். இதன் காரணமாக உள்ளக அமைப்புகளில் குழப்பம் உருவாகி, நிலைமை கட்டுப்பாட்டை இழக்கும் என்று அவர்கள் கருதியதாக கூறப்படுகிறது.

மேலும், மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டால் தற்போது நிலவி வரும் ஈரானிய ஆட்சி அமைப்பை மாற்றி, அவர்கள் விரும்பும் புதிய ஆட்சி அமைப்பை உருவாக்கலாம் என்ற திட்டமும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக முன்பு இருந்த ஷா மன்னரின் மகன் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார் என்பதால் அவரை மீண்டும் கொண்டு வந்து புதிய ஆட்சியை அமைக்கும் வகையில் ஆட்சி மாற்றம் (Regime change) செய்யலாம் என்ற சிந்தனையும் இருந்ததாக கூறப்படுகிறது.

அதாவது, தலைமைத்துவத்தை நீக்கினால் முழு அமைப்பும் சிதைந்து போகும் என்பது அவர்களின் கணிப்பாக இருந்தது.

வரலாற்றில் நடந்த பல இதிகாசப் போர்களிலும், பண்டைய நாகரிகங்களின் போர்த் தந்திரங்களிலும் இதே மாதிரியான அணுகுமுறைகள் காணப்பட்டுள்ளன. உதாரணமாக, எதிரி படையின் தலைவரை நேரடியாகத் தாக்கி அழித்துவிட்டால் அந்த படைகள் திக்கு திசை தெரியாமல் சிதறிச் சென்று போரில் தோல்வியடையும் என்பது பொதுவாகக் காணப்படும் போர்த் தந்திரமாகும்.

இந்த கருத்து போரியல் உத்தி இதிகாச கால சித்தரிப்பு திரைப்பட உதாரணங்களிலும் பிரதிபலிக்கப்படுகிறது. இந்தியாவில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படத்திலும் இதேபோன்ற போர்த் தந்திரக் கருத்து காட்டப்படுகிறது. அதில் எதிரி தலைவரான காலகேயனை வீழ்த்தினால் அவரது படைகள் சிதிலமடைந்து போகும் என்ற கருத்து வெளிப்படுகிறது.

போர்த் தந்திரம் தொடர்பான விடயங்களில் பொதுவாக காணப்படும் இந்தக் கணிப்பின் அடிப்படையில், தலைவரை இழந்த படைகள் திக்கு திசை தெரியாமல் ஓடி, அந்தப் போர் வெற்றி பெறப்படும் என்பது வழக்கமாக கருதப்படுகிறது. ஆனால், இவ்வாறான கணிப்புகளை முன்வைத்த அமெரிக்கா தற்போது எதிர்பாராத சிக்கல்களை சந்தித்து வருவதாக சர்வதேச அளவில் பல்வேறு மதிப்பீடுகள் வெளியாகி வருகின்றன.

மேலும், மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்காவின் பல டிரில்லியன் மதிப்புடைய படைத்தளங்கள் மற்றும் அவற்றின் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஈரானால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், சில இடங்களில் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த 25 முதல் 35 ஆண்டுகளாக மத்தியகிழக்கில் அமெரிக்காவினால் கட்டமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்ட இந்த முக்கியமான படைத்தளங்கள், ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக பல மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதனால் மத்திய கிழக்கு பாதுகாப்பு அமைப்புகளின் நிலைமை மிகவும் தீவிரமானதாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், முன்பு முன்வைக்கப்பட்ட கணிப்புகள் உண்மையில் செயல்பட்டதா? என்பதை ஆழமாக ஆராய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஈரானின் உச்சத் தலைவர் அல்ஹமேனி அவர்கள் கொல்லப்பட்டால் என்ன நடக்கும். அவரின் தலைமையின்றி கட்டளை வழங்கும் அதிகார மையங்கள் செயலிழந்து போகும். அவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இராணுவ அமைப்புகள் மற்றும் கட்டமைப்புகள் அனைத்தும் சிதைந்து போகும். அரசியல்வாதிகள், அதிகாரிகள்,படைத்துறை தளபதிகள் மற்றும் மக்கள் ஆகியோரின் ஒற்றுமை குறைந்து போகும் என்ற கணிப்புகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

மேலும், சிலர் மொசாட் உளவுத்துறைகளுடன் இரகசிய தொடர்பு கொண்டு இருவழித் தொடர்புகளின் மூலம் வெளிநாட்டு ஆதரவுகளுடன் இணைந்து செயல்படக்கூடும் என்ற கருத்துகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி அரசியல் அமைப்பை அசைத்திடலாம், மக்களை வீதிகளில் போராட்டத்திற்குக் கொண்டு வரலாம் என்ற திட்டங்களும் கருதப்பட்டதாகவே தென்படுகிறது.

ஈரானில் இதற்கு முன்பே பொருளாதார சிக்கல்களால் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அரசியல் மாற்றமும் ஆட்சி மாற்றமும் தேவை என்ற கோரிக்கையுடன் சில குழுக்கள் தொடர்ந்து எதிர்ப்புகளை முன்வைத்து வந்தன. இந்த போராட்டங்கள் பல இடங்களில் கட்டுப்படுத்தப்பட்டு அடக்குமுறைகளுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில்,வெளிநாடுகளிலிருந்தும் குறிப்பாக கனடா,அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் புலம்பெயர் ஈரானியர்கள் ஈரானில் ஆட்சி மாற்றம் (Regime change) வேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஈரானின் உள்நாட்டு மக்களிடையே இருந்த எதிர்பார்ப்பு பெரும்பாலும் பொருளாதார முன்னேற்றமும் வாழ்வாதார மேம்பாடும் தொடர்புடையதாக இருந்தது. அவர்கள் ஆட்சியில் மாற்றம் அல்லது பொருளாதார சீர்திருத்தம் வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தாலும், நாட்டின் உச்சத் தலைவர் அல்ஹமேனி அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுவாக அவர்களிடம் இல்லை என்பது அவர் கொல்லப்பட்ட பின் கூடிய கூட்டத்தை வைத்து அனுமானிக்கலாம்.

இந்நிலையில், அனைத்து ஈரானிய மக்களும் மற்றும் வெளிநாடுகளில் வாழும் டயஸ்போரா ஈரானியர்களும் அல்ஹமேனி அவர்களின் ஆட்சியை கவிழ்க்க விரும்புகிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் சில அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் மூலம் உள்நாட்டில் உளவு அமைப்புக்களால் கலவர நிலை உருவாக்க முயற்சிகள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், உளவுத்துறை மதிப்பீடுகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் பல்வேறு வழிகளில் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையை ஒரு சந்தர்ப்பமாகக் கருதி, பேச்சுவார்த்தைகள் மற்றும் அரசியல் தொடர்புகள் நடைபெறுவதாக வெளிப்படையாகக் காட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முன்னர் ஈரானை நோக்கி அனுப்பப்பட்ட அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் என்ற பெரும் நாசகாரி கப்பல் அங்கு தரித்து நின்றாலும், சமாந்தரமாக குறிப்பிடப்பட்ட தூதரக முயற்சிகள் உள்ளிட்ட அமைதி முயற்சிகள் முன்வைக்கப்பட்டு பேச்சு வார்த்தை ஈரான்- அமெரிக்க பிரதிநிதிகளிடையே இடம்பெற்று வந்திருந்தது. அதேவேளையில் இந்தியாவின் பிரதமர் மோடியையும் அழைத்து இஸ்ரேலில் கௌரவிக்கும் நிகழ்வுகள் மூலம் சர்வதேச அளவில் அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன, பிராந்தியம் அமைதியானது என்ற மாய தோற்றம் உருவாக்கப்பட்டதாகவும் தென்படுகிறது.

இவ்வாறு அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன என்ற ஒரு நிலையை வெளியில் காட்டியபோதும், மறுபுறம் இஸ்ரேல்-அமெரிக்காவால் இரகசிய இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. திடீரென முன்னறிவுப்பு இன்றி ஈரானில் உள்ளகமாக வான்வெளியாக ஊடுருவி தாக்குதல் நடத்தி ஈரானின் உச்சத் தலைவர் அல்ஹெமேனி அவர்களை குறிவைத்து கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபடுவார்கள், முன்னர் நடைபெற்ற போராட்டங்களைப் போல மக்கள் எழுச்சி உருவாகும், மக்கள் புரட்சி வெடிக்கும் என்று சில அரசியல் கணிப்புகள் முன்வைக்கப்பட்டிருந்தன. மேலும், அதிகார அமைப்புகளில் குழப்பம் ஏற்பட்டு சில அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடும். கட்டளை வழங்கும் தலைமை இல்லாத நிலையில் ஈரான் சோகத்திலும் குழப்பத்திலும் மூழ்கிவிடும் என்ற கணிப்புகளும் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் மக்கள் கிளர்ச்சியை தூண்டினால், அரசை கவிழ்க்க முடியும்.பின்னர் முன்னாள் மன்னர் ஷாவின் மகனை கொண்டு வந்து புதிய ஆட்சியை அமைக்கலாம் என்ற கணக்கீடுகளும் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்தக் கணிப்புகள் எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை என்ற கருத்துகளும் வெளிவந்துள்ளன. அல்ஹெமேனி அவர்கள் உயிருடன் இருந்தபோதிலும் இந்த அளவிற்கு கடுமையான எதிர்வினை ஏற்பட்டிருக்காது.ஆனால் அவர் உயிரிழந்ததால், ஈரானியர்கள் தங்களை ஒரே இன அடையாளத்தின் கீழ் ஒருமைப்படுத்திக் கொண்டுள்ளனர் என்ற மதிப்பீடுகளே தென்படுகின்றன.

அமெரிக்காவின் தாக்குதலில் ஆரம்ப பள்ளியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 180 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடப்படுகிறது. பொருளாதார சிக்கல்களாலும் வறுமையாலும் அரசியல் மாற்றம் தேவை என்று வீதிகளில் இறங்கி போராடிய மக்கள், இப்போது ஒரு ஆழமான துக்கத்திலும் கவலையிலும் உறைந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அவரது ஆட்சியைப் பற்றி மக்கள் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தாலும், அவர் நீண்ட காலமாக நாட்டின் உச்சத் தலைவராக இருந்தவர் என்பதால் இயற்கையான இயற்கை எய்தவே இன்னும் சில ஆண்டுகள் இருக்க (கொல்லப்பட்ட போது வயது 86) குடும்பத்துடன் தாக்கப்பட்டு கொல்லப்பட்டமை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் குண்டு வீசப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் அந்த நாட்டில் ஒரு மிகுந்த அவலநிலையை உருவாக்கியதாகவும் குறிப்பிடப்படுகிறது.

உச்சத் தலைவர் கொல்லப்பட்டுவிட்டார் என்ற துயரமும் வேதனையும் காரணமாக ஈரானியர்கள் நாட்டுக்கெதிராக கிளர்ந்தெழும் மனநிலையில் இல்லாமல் ஈரானியராக ஒருமைப்படும் மனநிலையிலேயே காணப்படுகிறார்கள் என்றே தோன்றுகிறது. அவர்கள் சிதறி வேறு திசைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதோ, பொது இடங்களில் பெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதோ அல்லது இராணுவத் தலைமையங்களை குழப்பும் வகையில் செயல்படுவதோ போன்ற நிகழ்வுகள் தற்போது அதிகமாக இடம்பெற்றதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்வைத்திருந்த கணிப்புகள் எவ்வளவு சரியாக இருந்தன என்பதையும் நுணுக்கமாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் எழுகிறது. அவர்களுடைய கணிப்பின் அடிப்படை என்னவெனில்,ஈரானின் உச்சத் தலைவர் தான் அந்த அரசியல் மற்றும் இராணுவ கட்டமைப்பின் மையமாக இருக்கிறார் என்பதாகும். அனைத்து படைகளையும் கட்டுப்படுத்தும் அதிகாரமும், ஏவுகணை அமைப்புகளுக்கும்,அதைவிட யுரேனியம் செறிவூட்டல் மற்றும் அணு சக்தி தொடர்பான முக்கியமான முடிவுகளுக்கும் கட்டளைகள் வழங்கும் அதிகாரமும் அவரிடமே இருக்கிறது என்ற கருத்து நிலவியது.

அதனால், அந்த வலிமையான தலைவரை முற்றிலும் நீக்கிவிட்டால் அதாவது அவரை கொன்று அரசியல் மேடையில் இருந்து அகற்றிவிட்டால் மீதமுள்ள அமைப்புகள் அனைத்தும் சிதைந்து போகும். பின்னர் தாங்கள் விரும்பிய அரசியல் மாற்றங்களை எளிதாக நடைமுறைப்படுத்த முடியும். மேலும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையும் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் நிகழ்ந்திருக்கிறதோ வேறு விதமாக இருக்கிறது என்ற மதிப்பீடுகளும் வெளிவந்துள்ளன. குறிப்பாக மத்திய கிழக்கில் கடந்த 35 ஆண்டுகளாக மிகப்பெரிய முதலீடுகளுடன் பார்த்து பார்த்து கட்டமைக்கப்பட்ட அமெரிக்க இராணுவ அமைப்புகள் கடுமையான தாக்குதல்களை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வளவு காலத்திலும் சுமார் 8.2டிரில்லியன்(8,200,000,000,000) அமெரிக்க டாலர்களுக்கும் (820,000 கோடி அமெரிக்க டொலர்கள்) அதிகமான செலவில் உருவாக்கப்பட்ட இந்த பெரிய இராணுவ வலையமைப்புகள் பக்ரைன் முதல் சவுதி அரேபியா, யேமன், துபாய் போன்ற பல பகுதிகளில் அமைந்துள்ள தளங்கள் பெரும் சேதத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பல நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களும் ஏவுகணைத் தாக்குதல்களின் இலக்காக மாறியதாக கூறப்படுகிறது. அதோடு, புலனாய்வு அமைப்புகளின் கட்டமைப்புகளும் தாக்குதல்களுக்கு உள்ளாகியதாகவும் சில இடங்களில் CIAதொடர்புடைய கட்டிடங்கள் கூட குண்டுவெடிப்புகளால் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வகையில், மத்திய கிழக்கு மற்றும் ஆசிய பிராந்தியங்களில் நடந்ததாக கூறப்படும் இந்த தாக்குதல்கள் பல்வேறு தரப்புகளுக்கும் எதிர்பாராத அளவிலானவை என்று குறிப்பிடப்படுகிறது. பல பில்லியன் கணக்கான அமெரிக்க டாலர் மதிப்புள்ள இராணுவ கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டதாகவும் சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல்கள் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர்

இதற்குப் பின்னால் ரஷ்யாவின் புலனாய்வு தகவல்களும் இருக்கக்கூடும் என்ற கருத்துகளும் சில அரசியல் பகுப்பாய்வுகளில் முன்வைக்கப்படுகின்றன. முன்பே வெளியிடப்பட்ட சில மதிப்பீடுகளில், ஈரான் மிகத் துல்லியமாக அமெரிக்க இராணுவ தளங்களை தாக்கி வருவதாகக் கூறப்பட்டிருந்தது. அமெரிக்காவின் CIAபுலனாய்வு தகவல்களை மீறியும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை மிகவும் துல்லியமாக குறிவைத்து தாக்குகின்றனர் என்றால், அதன் பின்னால் கூடுதல் இராணுவ தகவல்கள் அல்லது புலனாய்வு ஆதரவுகள் இருக்கலாம் என்ற கருத்துகளும் வெளிப்படுகின்றன.

சில மதிப்பீடுகளின்படி ராணுவ தரவுகள்,புள்ளிவிவரங்கள் மற்றும் புலனாய்வு தகவல்கள் போன்றவை சீனாவும் ரஷ்யாவும் வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகங்களும் முன்வைக்கப்படுகின்றன. காரணம், கடந்த 35ஆண்டுகளாக மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது இராணுவ தளங்களை வலுப்படுத்தி வந்தது ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் ஒரு அரசியல் மற்றும் இராணுவ சவாலாகவே பார்க்கப்பட்டது.

அந்த வகையில், அமெரிக்காவின் வலுவான இராணுவ மேன்நிலையை பலவீனப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பல ஆண்டுகளாகவே அந்த நாடுகளின் மூலோபாய சிந்தனைகளில் இருந்ததாகவும் சில பகுப்பாய்வுகள் குறிப்பிடுகின்றன. தற்போது அந்த நோக்கம் ஈரானின் நடவடிக்கைகள் மூலம் ஒரு அளவுக்கு நிறைவேறியிருக்கலாம் என்ற கருத்துகளும் சில சர்வதேச அரசியல் விவாதங்களில் முன்வைக்கப்படுகின்றன.

இந்த சூழ்நிலையில் முக்கியமாகக் குறிப்பிடப்படும் விடயம் என்னவெனில்,ஈரானில் ஒரு போர் நிலை உருவாக வேண்டும் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் விரும்பியதற்கு மேலாக அதே நேரத்தில் ரஷ்யாவும் சீனாவும் இன்னும் ஆவலாக இருந்திருக்கலாம். அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் ஒரு கட்டத்தில் தாமாகவே இர்ரன் மீது கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் ஈரான் மத்திய கிழக்கில் உள்ள அத்தனை அமெரிக்க தளங்களையும் குறிபார்த்து அடித்தால் பல தசாப்தங்களாக மத்தியகிழக்கில் இருந்து ரஸ்யா மற்றும் சீனாவுக்கு குடைசல் கொடுப்பது நிர்மூலமாக்கப்படலாம் அல்லது ஏற்படும் பாதிப்பு பொருளாத இழப்புக்களால் சம்மந்தப்பட்ட மத்திய கிழக்கு நாடுகள் எதிர்காலத்தில் அமெரிக்க இராணுவ தளத்தை அமைக்க அனுமதிக்காமல் விடலாம் என்அ கணிப்பு ரஸ்யா-சீனா சார்பில் இருந்த்திருக்கும்.

இந்த பின்னணியில், கடந்த 35ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கட்டமைக்கப்பட்டு வந்த பல டிரில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் பெரும் சேதத்தை சந்தித்ததாக கூறப்படும் தகவல்கள், சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன. இவ்வளவு நீண்ட காலமாக உருவாக்கப்பட்ட இந்த வலுவான இராணுவ அமைப்புகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுவது பலருக்கும் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.

இந்த நிலைமையின் காரணமாக அமெரிக்காவுக்குள் கூட பல்வேறு எதிர்வினைகள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க மக்களிடையே சிலர் இந்த சூழ்நிலையை எதிர்த்து கருத்து வெளியிட்டு வருகின்றனர். முன்னாள் அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னாள் நிர்வாக அதிகாரிகளும் ரம்ப்பின் இந்த எதேச்சிகாரமான தாக்குதல் தேவையில்லாதது என தங்களுடைய விமர்சனங்களை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் பெயர்களும் இந்த விவாதங்களில் இடம்பெறுகின்றன என்று கூறப்படுகிறது. அதோடு, எதிர்க்கட்சிகள் மற்றும் அமெரிக்க செனட் சபையின் பல்வேறு உறுப்பினர்கள், முனாள் இராணுவ தளபதிகள் போன்றோர் ஈரான் மீதான ரம்ப்பின் இந்த நடவடிக்கைகள் குறித்து விமர்சன நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்ரேலுக்கான ஆதரவின் காரணமாக அமெரிக்கா இவ்வளவு பெரிய இழப்புகளை சந்தித்திருக்கிறது என்ற கருத்தும் சில அரசியல் விவாதங்களில் முன்வைக்கப்படுகிறது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த இழப்புகள் குறித்து அமெரிக்க அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்திலும் விவாதங்கள் அதிகரித்துள்ளன என்று குறிப்பிடப்படுகிறது.

இதற்கிடையில், ஈரானுக்கு எதிராக தரைவழி ராணுவ தாக்குதல் மேற்கொள்ளப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, ஈரானின் மீது தரைவழி தாக்குதல் நடத்துவதற்கான எந்தத் திட்டமும் தற்போது இல்லை என்று அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று,ஈரானின் புவியியல் மற்றும் நில அமைப்பு எனவும் கூறப்படுகிறது. ஈராக்கில் நடந்த போர்களில் அமெரிக்க படைகள் பாலைவனப் பகுதிகளை கடந்து முன்னேறிய அனுபவம் இருந்தாலும், ஈரானின் நில அமைப்பு அதைவிட மிகவும் சிக்கலானது என்று ராணுவ வல்லுநர்கள் கூறுகின்றனர். ஈரானில் மலைப்பகுதிகள், உயர்ந்த நிலப்பரப்புகள்,பல்வேறு இயற்கை தடைகள் மற்றும் கடல் எல்லைகள் ஆகியவை இருப்பதால் தரைவழி தாக்குதல் மிகவும் கடினமானதாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

ஈரானின் நில அமைப்புகள் காரணமாக அங்கு தரைவழியாக இராணுவத்தை அனுப்புவது ஒரு பெரிய பொறிக்குள் மாட்ட்டுவதாக மாறக்கூடும் என்று சில ராணுவ நிபுணர்கள் கருதுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில்,தரைவழி ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்வது தங்களுக்கே பெரும் ஆபத்தாக மாறக்கூடும் என்று சில அமெரிக்க மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

மேலும், ஈரான் பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் ஈராக்கை விட மிகவும் பெரிய நாடாகும். இதனால், அந்த நாட்டை தரைவழி ராணுவ நடவடிக்கைகள் மூலம் முழுமையாக கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான பணியாக இருக்கும் என்று ராணுவ வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த காரணங்களால், தற்போது தரைவழி தாக்குதல் தொடர்பான எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று சில அரசியல் மற்றும் ராணுவ மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.

மொத்தத்தில் பார்க்கும்போது, இது ஒரே தரப்பை ஆதரிக்கும் அல்லது எதிர்ப்பதற்கான பதிவு அல்ல. ஆனால், இஸ்ரேலும் அமெரிக்காவும் அல்ஹெமேனி அவர்களின் முடிவுடன் இந்த அரசியல் நிலைமை முடிவுக்கு வரும் என்று கருதியிருந்தால் தற்போதைய நிலைமை அதற்கு மாறாக இன்னும் அதிக பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.

அல்ஹெமேனி அவர்கள் உயிருடன் இருந்த காலத்தை விட, அவர் இல்லாத இந்த நிலைமை மத்திய கிழக்கில் மேலும் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. எதிர்காலத்தில் இந்த பதற்றம் மேலும் தீவிரமாகுமா, அல்லது காலப்போக்கில் குறைந்து சமாதான நிலைக்கு மாறுமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

அதனால், இந்த நிலைமை மேலும் எவ்வாறு முன்னேறுகிறது என்பதை கவனித்து பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் இந்த பதற்றமான சூழ்நிலை எதிர்காலத்தில் மேலும் வலுப்பெறுமா அல்லது சமாதான முயற்சிகள் மூலம் தணியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கு.மதுசுதன்
B.Sc(Hons), M.Sc
அரசியல் ஆய்வாளர்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>