இந்தச் சட்டத்தின் மூலம் பொலிஸார் என்னும் காவல் நாய்களுக்கு எல்லையற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பெற்றுள்ளது.
அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் படி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது மட்டுமே போதுமானது எனவும், அதற்கு பதிலாக புதிய சட்டம் எவ்விதத்திலும் அவசியமில்லை எனவும் வலியுறுத்தும் சட்ட நிபுணர் ஒருவர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தின்’ ‘அபாயகரமான’ தன்மையை விளக்கியுள்ளார்.
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பாக சட்டத்திற்கும் கொள்கைகளுக்குமான யாழ்ப்பாண நிலையத்தின் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த கலந்தாய்வு அமர்வொன்றில் இந்தச் சட்டத்தின் மூலம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குபகிரங்கக் கூட்டங்களைக் கலைப்பதற்கான எல்லையற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
“51 ஆவது பிரிவில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு ஏதேனும் ஒரு தகவல் கிடைத்தால்—அங்கு தெளிவான, உடனடி ஆபத்து இருப்பதாக பொலிசார் கருதினால், அவர்களால் எந்தவொரு பொருளையும் அகற்ற முடியும்; வாகனத்தை அகற்ற முடியும். கப்பல் அல்லது விமானத்தைக் கூட அகற்ற முடியும். (e) பகுதியைப் பாருங்கள், எந்த இடத்திலும் ஒன்றுகூட வேண்டாம் என உத்தரவிட பொலிசாரால் முடியும்.”
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அதிகாரம் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் மூலம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில் ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தின்’ மூலம் அவர்களுக்கு இவ்வாறு எல்லையற்ற அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சுட்டிக்காட்டுகிறார்.
“இது ஒன்றுகூடும் சுதந்திரம் மற்றும் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்றே நான் நினைக்கிறேன். ஒரு இடத்தில் ஒன்று கூடினால் ‘பயங்கரவாதம்’ என்ற விடயத்தின் கீழ் குற்றமொன்று நிகழக்கூடும் எனக்கருதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கி அதனைத் தடுக்க முடியும். அடிப்படை உரிமைகளுடன் ஒப்பிடுகையில் இந்தப் பிரிவு முற்றிலும் — அடுத்ததையும் பாருங்கள்: ஏதேனும் கூட்டத்தை நடத்த வேண்டாம் என்பது… அக்கூட்டத்தில் குற்றமொன்று நிகழக்கூடும் என அறிவித்தல் விடுத்து, அக்கூட்டத்தை நிறுத்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் முடியும். பொலிசாருக்கு ஏன் இவ்வளவு அதிகாரம் வழங்கப்படுகிறது என்று எனக்குப் புரியவில்லை. இவ்வாறான மேலதிக அதிகாரங்கள் எதற்கு? ஏற்கனவே பொலிஸ் கட்டளைச் சட்டத்தில் இவை உள்ளன.”
எதிர்ப்புப் போராட்டமொன்றில் அல்லது ஊர்வலமொன்றில் வன்முறை ஏற்படக்கூடும் என நியாயமான சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், அதனைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் உள்ள நிலையில், கூட்டமொன்று ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே அதனை நிறுத்தும் அதிகாரங்களை பொலிஸாருக்கு வழங்குவதன் நோக்கம் என்னவென்று சட்டத்தரணி கேள்வி எழுப்பியிருந்தார்.
“பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 52 ஆவது பிரிவின் கீழ் என நினைக்கிறேன்: எதிர்ப்புப் போராட்டம் அல்லது ஊர்வலம் ஒன்றின் போது வன்முறை ஏற்படக்கூடும் எனத் தோன்றினால் நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரங்கள் ஏற்கனவே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அது இருக்கும் போது, கூட்டமொன்றை நடத்துவதற்கு முன்னரே அதனைத் தடுப்பதற்கு பொலிசாருக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்படுவது ஏன்?”
தனிநபர்களின் தொலைபேசி அழைப்புகள் தொடர்பான தகவல்களை நீதிமன்ற உத்தரவின்றி சட்டவிரோதமான முறையில் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை பாதுகாப்புப் பிரிவினர் தற்போதும் முன்னெடுத்து வருவதை நினைவூட்டிய கலாநிதி குமாரவடிவேல் குருபரன், ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தின்’ ஊடாக அந்தச் செயலை சட்டபூர்வமாக்க அரசாங்கம் தயாராகி வரும் விதத்தையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
“51 ஆவது பிரிவு மிகவும் சிக்கலானது. இப்போது எமது தொலைபேசிகளை பொலிசாரால் ஒட்டுக்கேட்க முடியுமா? எமது தொலைபேசிப் பதிவுகளை எடுக்க முடியுமா? நான் அறிந்த வகையில் நீதிமன்ற உத்தரவின்றி அவ்வாறு செய்ய முடியாது. ஆனால் இங்கு அது தாராளமாக நடக்கிறது. டயலொக் முதல் மொபிடெல் வரை, HNB முதல் மக்கள் வங்கி வரை அனைவரும் பொலிசார் கேட்டவுடன் அவற்றை வழங்கத் தயாராக இருக்கிறார்கள். இப்போது இது சட்டத்திற்குள் கொண்டுவரப்படுகிறது.”
ஒரு வங்கி அல்லது தொலைபேசி நிறுவனம் தனிநபர்களின் தகவல்களை நீதிமன்ற அனுமதியின்றி பொலிசாருக்கு வழங்கினால், அந்த நிறுவனத்தும்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கும் உரிமை பொதுமக்களுக்கு இருக்க வேண்டும் என கலாநிதி குமாரவடிவேல் குருபரன் வலியுறுத்துகிறார்.
“நீங்கள் இந்தத் தகவல்களைக் கோருவதாயின் நீதவானிடம் உத்தரவு பெற்றே அதனைச் செய்ய வேண்டும். இது அத்தியாவசியமான ஒன்று என நான் கருதுகிறேன். ஏனென்றால் இனிமேல் எங்கள் தொலைபேசித் தரவுகள் அல்லது வங்கி விபரங்களை நீதிமன்ற உத்தரவின்றி வங்கி அல்லது தொலைபேசி நிறுவனம் வழங்கினால், எங்களால் அந்த நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். எனவே பொலிசார் வந்தால் ‘நீதிமன்ற உத்தரவைத் தாருங்கள், அப்போது தருகிறேன்’ என சொல்ல வேண்டும்.”
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தில்’ ஒப்புதல் வாக்குமூலங்கள் தொடர்பிலான சாதகமான விடயம் ஒன்றையும் சட்டத்திற்கும் கொள்கைகளுக்குமான யாழ்ப்பாண கற்கை நிலையனத்தின் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அங்கு சுட்டிக்காட்டியிருந்தார்.
“முன்னர் ASP தரத்துக்கு குறையாத உத்தியோகத்தர் ஒருவரிடம் வழங்கப்படும் வாக்குமூலங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்றால், இப்போது அது நீதவான் முன்னிலையில் என மாற்றப்பட்டுள்ளது. அது ஒரு முன்னேற்றம் எனறு நான் நினைக்கிறேன். ஆனால் இப்போதும் எனது கருத்து என்னவென்றால், வாக்குமூலங்கள் குறித்து தற்போதுள்ள குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் ஏற்பாடுகள் போதுமானவை என்பதாகும். திட்டமிட்டுப் பெறப்படும் வாக்குமூலங்களை எமது நாட்டின் சாதாரண சட்டத்தின் கீழ் பயன்படுத்த முடியாது. சட்டம் அங்கேயே இருக்க வேண்டும். இந்த ஏற்பாட்டின் மூலம் ஒரு வாக்குமூலம் நீதவான் முன்னிலையில் வழங்கப்பட்டால் மட்டுமே அது செல்லுபடியாகும் எனக் கூறப்பட்டிருந்தாலும், சாதாரண சட்டமானது வாக்குமூலங்கள் சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை (inadmissible) என்றே கூறுகிறது. ஏனென்றால் நான் ஏன் அப்படிச் சொல்கிறேன் என்று உங்களுக்கும் தெரியும். அதாவது, அவற்றை பலவந்தமாகப் பெறப்பட முடியும் என்பதால் ஆகும்.”
லாநிதி குருபரன், ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ தொடர்பாக யாழ்ப்பாணத்தில் அளித்த விளக்கத்தில் நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தி, நாடாளுமன்ற அனுமதியைப் பெற்ற பின்பே அதனை நீடிக்க முடியும் என்கிற தற்போது நடைமுறையிலுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை நீக்கி, ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் நிரந்தர அவசரகால நிலையை உருவாக்கவதற்கான ஆயத்தமும் தென்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.
“ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தவும் கட்டுப்பாடுகளை விதிக்கவும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் சாதாரணமாக காணப்படும் அனைத்து அதிகாரங்களும் இங்கு வழங்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் மிகவும் சிக்கலானவை. நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தி, நாடாளுமன்ற அனுமதியைப் பெற்று அதனை நீடிக்க வேண்டும் என்கிற பாதுகாப்பு நடைமுறைகளை நீக்கி, இந்தச் சட்டத்தின் கீழ் நிரந்தர அவசரகால நிலைமையை உருவாக்குவது போலவே இந்தப்பிரிவுகள் எனக்குத் தெரிகின்றன. ஏனென்றால் அவசரகால நிலை இல்லாத ஒரு நேரத்தில் இவ்வாறான அதிகாரங்களை பொலிசாருக்கும், இராணுவத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் வழங்குவது முற்றிலும் தவறானதாகும்.”
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்தினால் புதிதாக வரைவு செய்யப்பட்டு (http://moj.gov.lk) என்ற இணையதளத்தில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ தொடர்பில் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை பொதுமக்கள் தமது கருத்துகளை முன்வைக்க முடியும் எனத் தெரிவித்துள்ள நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நானயக்கார, அவற்றை மிக உன்னிப்பாக அவதானித்து அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நாட்டின் பிரஜைகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.