அருட்தந்தை ஜீவந்தா பீரிஸை ஆதரித்தும் கத்தோலிக்க திருச்சபையை எதிர்த்தும் குரல் எழுப்பும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள்!

Share

தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்ந்தது ஓர் இனப்படுகொலை எனவும், சிங்கள பேரினவாத அரசினால் தமிழ் மக்கள் வரலாற்று ரீதியான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் எனவும், தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள கத்தோலிக்க அருட்தந்தை விடுத்த அறிக்கைக்கு, வடக்கு-கிழக்கு நீதி மற்றும் அமைதிக்கான நூற்றுக்கும் மேற்பட்ட மதகுருமார்களும், துறவிகளும் தமது முழுமையான இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் வெளியிட்ட இந்தத் கூற்றைக் கண்டித்துள்ள உத்தியோகபூர்வ கத்தோலிக்க திருச்சபை, யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எந்தவொரு குற்றமும் இழைக்கப்படவில்லை எனத் தெரிவித்திருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து, “ஈழத் தமிழ் மக்களின் கூட்டு அரசியல் அபிலாஷைகள் மற்றும் தமிழ் இனப்படுகொலை குறித்த பிரகடனம்” என்ற தலைப்பில் 2026 மே 25 ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மதகுருமார்கள் மற்றும் துறவிகள் குழு, ஈழத் தமிழ் மக்களின் பிரிக்க முடியாத அரசியல் அபிலாஷைகள் குறித்த தங்களின் நிலைப்பாட்டை இதன் மூலம் உறுதியாக மீண்டும் உறுதிப்படுத்துவதாக வலியுறுத்தியுள்ளது.

“நாட்டின் சிங்கள-பௌத்த பேரினவாதத்தை கொண்ட மற்றும் கத்தோலிக்க தலைமைத்துவத்தின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் (சிங்கள கத்தோலிக்க மதகுரு) அவர்களுடன் எங்களது ஒற்றுமையை பிரகடனப்படுத்துகிறோம். தமிழ் மக்களுக்கு நடந்தது ஓர் இனப்படுகொலை என்றும், சிங்கள ஆளும் அரசினால் தமிழ் மக்கள் வரலாற்று ரீதியான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறி, அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் அதிகாரிகளுக்கு முன்னிலையில் உண்மையை தெரிவித்துள்ளார்.”

வடக்கு-கிழக்கு பகுதிகளில் பணியாற்றும் மதகுருமார் மற்றும் துறவிகளாகிய தாங்கள், நாடு முழுவதிலும் உள்ள ஏனைய மதகுருமார் மற்றும் துறவிகளுடன் இணைந்து பின்வரும் விடயங்களை வெளிப்படுத்துவதாக, வடக்கு-கிழக்கு நீதி மற்றும் அமைதிக்கான மதகுருமார்கள் மற்றும் துறவிகள் சார்பில் அருட்தந்தை ரொஹான் டொமினிக்கினால் (CMF) மே 25 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் நினைவூட்டியுள்ளார்.

“இலங்கை கத்தோலிக்க ஊடக ஆணைக்குழுவின் தேசிய பணிப்பாளர், கொழும்பு பேராயர் இல்ல கத்தோலிக்க ஊடக ஆணைக்குழுவின் பணிப்பாளரும் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் நிலைப்பாட்டைக் கண்டித்ததுடன், தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசு எந்தவொரு தவறையும் இழைக்கவில்லை எனவும் கூறியுள்ளனர். அந்த ஊடகப் பேச்சாளரின் கூற்றுப்படி, சிங்கள அரசு பயங்கரவாதத்திற்கு எதிராகவே போரிட்டதே தவிர, தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல.”

‘முள்ளிவாய்க்காலுடன் வரலாறு முடிந்துவிட்டதா?’ என்ற தலைப்பில் ‘சம உரிமை இயக்கம்’ அண்மையில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் ஆற்றிய உரைக்கு மறுப்புத் தெரிவிப்பதற்காக, கத்தோலிக்க ஆயர் பேரவையின் சமூகத் தொடர்பாடல்களுக்கான ஆயர் ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை ஜூட் நிஷாந்த சில்வா விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். இதன்போது இந்த கூற்று ஒட்டுமொத்த கத்தோலிக்க திருச்சபையின் கூற்று அல்ல என அவர் கடுமையாக வலியுறுத்தினார்.

“எமது யுத்த வெற்றியை உத்தியோகபூர்வமாகக் கொண்டாடும் நாளில், கத்தோலிக்க மதகுருவான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் ஓர் அறிக்கையை விடுக்கிறார்; அதாவது, 2009 இல் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த காலப்பகுதியில் அந்த யுத்தமானது, பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் அல்ல, அது தமிழ் மக்களை இந்த நாட்டில் இருந்து வேரறுப்பதற்காக நடத்தப்பட்ட தமிழ் இனப்படுகொலை என அவர் கூறுகிறார். இந்த அறிக்கையைக் கேட்டு பலர் ஏமாற்றமும் வேதனையும் அடைந்துள்ளனர் என்பதை நாம் அறிவோம். எனவே, விசேடமாக கூற வேண்டியது என்னவென்றால், அவர் விடுத்த அறிக்கை ஒட்டுமொத்த கத்தோலிக்க திருச்சபையின் அறிக்கை அல்ல. அது இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் ஆயர் மன்றத்தின் கருத்தும் அல்ல. கத்தோலிக்க மக்கள் என்ற ரீதியில் நாம் ஒருபோதும் இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுவதில்லை. அதேபோல், இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுவதையோ அல்லது இவ்வாறான கருத்துக்களைத் தங்களின் மனதில் வைத்திருப்பதையும் நாம் கடுமையாக நிராகரிக்கிறோம்.”

இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை இன ரீதியாக துருவமயப்பட்டுள்ளது என்பதற்கு ஏராளமான வரலாற்று மற்றும் சமகால சான்றுகள் உள்ளதாக, வடக்கு-கிழக்கு நீதி மற்றும் அமைதிக்கான மதகுருமார்கள் மற்றும் துறவிகள் சார்பில் அருட்தந்தை ரொஹான் டொமினிக் (CMF) மே 25 அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“இதுவொன்றும் இரகசியமல்ல, பொதுவான விசுவாசத்தால் திருச்சபை ஒன்றிணைய முடியும் என்றாலும், இன, கலாச்சார, பொருளாதார அல்லது அரசியல் வேறுபாடுகளால் பிளவுபடுவது இலங்கைக்கு மாத்திரம் தனித்துவமானதொன்றல்ல. தமிழ் கத்தோலிக்க சமூகம், திருமுறை மற்றும் திருச்சபையின் போதனைகளின்படி, ஒடுக்கப்பட்டவர்களின் பக்கமே நின்றுள்ளது. இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் உண்மை மற்றும் நீதிக்காக நற்செய்தியின் அடிப்படையிலான நிலைப்பாட்டை உறுதியாகப் பின்பற்றாமை குறித்து நாங்கள் வருந்துகிறோம். சில சந்தர்ப்பங்களில், அவர்களின் அறிக்கைகள் நற்செய்தியை விட அரசின் சித்தாந்தத்தையே பிரதிபலித்தன.”

ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் என்பது, ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசு கட்டவிழ்த்து விட்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகளின் விளைவாகவே உருவானது என அருட்தந்தை ரொஹான் டொமினிக் (CMF) வலியுறுத்துகிறார். மோதலுக்கான அடிப்படைக் காரணங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதும், முள்ளிவாய்க்காலில் முடிவடைந்த இனப்படுகொலை யுத்தம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீதும் தப்பிப்பிழைத்தவர்கள் மீதும் குற்றம் சுமத்துவதும், திருச்சபை தலைமையின் தரப்பிலிருந்து ‘தவிர்த்தல் மற்றும் நிராகரித்தல்’ உத்தியையே காட்டுகிறது என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

அத்தோடு, தமிழ் ஆயுதப் போராட்டம் என்பது ஒல்லாந்தர், பிரித்தானியர் போன்ற காலனித்துவக் காலம் வரை நீளும் வரலாற்றைக் கொண்ட நீண்டகால ஒடுக்குமுறை மற்றும் பாகுபாட்டின் விளைவாகும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“வரலாற்று உண்மைகளை நிராகரிப்பதற்கும் உண்மையை மூடிமறைப்பதற்கும் எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் கடுமையாக நிராகரிப்பதுடன் கண்டிக்கிறோம். நீதிக்கு உண்மை கண்டறியப்படுவது இன்றியமையாதது. நீதி இன்றி அமைதி இல்லை” என்றும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

வடக்கு-கிழக்கு ஆயர் பேரவை 2022 மே 16ஆம் திகதியிடப்பட்ட தங்களின் ஊடக அறிக்கையின் மூலம், மே 18 ஆம் திகதியை “தமிழ் இனப்படுகொலை நாள்” ஆக நினைவு கூர வேண்டும் என்று தெளிவாகக் கோரியிருந்ததை அருட்தந்தை ரொஹான் டொமினிக் (CMF) தனது அறிக்கையில் நினைவூட்டியுள்ளார். “ஆயர்களின் அறிக்கை, ‘உண்மை மட்டுமே நம்மை விடுவிக்கும்’ என்பதையும் வலியுறுத்தியது.”

யுத்தத்தின் இறுதி கட்டத்தில் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவரும், அவர் குறித்து திருச்சபை இன்னும் மௌனம் காத்து வருவதுமான அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப், 16 ஆம் பெனடிக் திருத்தந்தைக்கு அனுப்பிய அவரது இறுதி கடிதத்தின் (10 மே 2009) ஒரு பகுதியையும் அருட்தந்தை ரொஹான் டொமினிக் (CMF) தனது அறிக்கையில் பின்வருமாறு சேர்த்துள்ளார்:

“இந்தக் கடிதம் இலங்கை அரசாங்கத்தின் கோபத்தைத் தூண்டும் என்றும், அவர்கள் என்னைக் கொன்று பழிவாங்கத் தூண்டக்கூடும் என்றும் நான் அறியாதவன் அல்ல. சில திருச்சபை அதிகாரிகள் என்னை திருச்சபையிலிருந்து நீக்குவதற்கு காரணங்களைக் கண்டறியலாம் என்பதையும் நான் அறியாதவன் அல்ல. ஆனால் உண்மை, நீதி மற்றும் ஒடுக்கப்பட்ட, கைவிடப்பட்ட மக்களின் சுதந்திரத்திற்காக முன்னிற்க வேண்டிய திருச்சபையின் மௌனத்தை நோக்கி எனது மனசாட்சியின்படி விரல் நீட்டுவதை எனது கடமையாகக் கருதுகிறேன்…. வன்முறைக்கு முன்னால் திருச்சபை காட்டும் மௌனம், நிச்சயமாக உலகில் நெறிமுறை அதிகாரத்தைப் பாதிக்கும்.”

நாடு முழுவதிலும் உள்ள 460 மதகுருக்கள் மற்றும் துறவிகளின் கையெழுத்துக்களுடன், வடக்கு-கிழக்கு ஆயர் பேரவையின் தலைவர் ஊடாக இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்தின் தலைவருக்கு அனுப்பப்பட்ட அறிக்கையின் மூலம், மே 18 ஆம் திகதியை “நாடு தழுவிய துக்க, பிரார்த்தனை மற்றும் தவ நாளாக” கருதுமாறு கோரப்பட்ட போதிலும், இன்றுவரை இந்தக் கோரிக்கைக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என அருட்தந்தை ரொஹான் டொமினிக் (CMF) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எங்களின் தற்போதைய பிரகடனத்தின் மூலம், ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான வரலாற்று ரீதியான இனப்படுகொலைச் செயல்முறை 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் உச்சக்கட்டத்தை அடைந்தது என்றும், தமிழ் தாயகத்தில் முறையான இனப்படுகொலை தொடர்ந்து அரங்கேறி வருகிறது என்றும் நாங்கள் பிரகடனப்படுத்துகிறோம். உண்மையின் பக்கம் நிற்பவர்களை இலக்கு வைப்பது, எங்களின் உண்மை, வழி மற்றும் ஜீவனுமாகிய இயேசுநாதருக்கு எதிராக உரோமப் பேரரசு பின்பற்றிய வழிமுறையையே பிரதிபலிக்கிறது.”

அருட்தந்தை ரொஹான் டொமினிக் (CMF) அவர்களினால் மே 25 அன்று வெளியிடப்பட்ட “ஈழத் தமிழ் மக்களின் கூட்டு அரசியல் அபிலாஷைகள் மற்றும் தமிழ் இனப்படுகொலை குறித்த பிரகடனம்” என்ற அறிக்கையின் இறுதியில், “நாங்கள் அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் பிரகடனத்துடன் முழுமையாக உடன்பட்டு அவருடன் நிற்கிறோம்” என நிறைவு செய்யப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>