அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்ற தமிழக வெற்றி கழக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்து உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையில் தனி அணி உருவானது. சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த அணியை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து அவர்களை தகுதிநீக்கம் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரிடம் மனு கொடுத்தது. இதற்கிடையே 4 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் ஐக்கியமானார்கள். நீண்ட இழுபறிக்கு பின்னர் மற்ற 21 எம்.எல்.ஏ.க்களும் மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் அவர்கள் மீதான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி திரும்ப பெற நடவடிக்கை எடுத்தார். ஆனால், அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் என பலரும் விலகி தொடர்ந்து த.வெ.க.வில் இணைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்து தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டார்.
இதுதொடர்பான அந்த பதிவில், தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல… ‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’ உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்? உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா..? என தெரிவிக்கப்பட்டு இருந்தது. கட்சி தலைமைக்கு எதிராக இருந்த அந்த பதிவால் தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. இந்த சூழலில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான சி. விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வான அவர் தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து, தன் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதம் ஒன்றை வழங்கினார்.