அ.தி.மு.க.வுக்கு கூடுதல் இடங்கள் கேட்டு பழனிசாமி டில்லி செல்வது காலக்கொடுமை – அமைச்சர் கே.என்.நேரு

Share

தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றிருப்பதைப் பார்க்கும் போது, ஐயா திரைப்படத்தில் வரும் காமெடி காட்சிதான் நினைவுக்கு வருகிறது. நடிகர் வடிவேலுவை வீட்டில் வைத்து அடித்துத் துவைத்து வெளியே அனுப்பும் போது , “அண்ணே… பிரமாதம். இந்த டீலிங் நமக்கு உள்ளேயே இருக்கட்டும்” என வடிவேலு பேசும் டயலாக் அப்படியே பழனிசாமிக்கு கச்சிதமாகப் பொருந்தும்.

இரவு 8.30 மணிக்கே சந்திப்பு நடைபெறும் எனச் சொல்லப்பட்ட நிலையில், 2 மணி நேரமாக அமித்ஷாவின் அழைப்புக்காக காத்திருந்து சந்தித்திருக்கிறார் பழனிசாமி. கடந்த 3 மாதத்தில் மட்டும் 3-வது முறையாக டில்லிக்கு சென்றிருக்கிறார் பழனிசாமி. ஒவ்வொரு முறையும் அமித்ஷாவுடன் ஆலோசித்து முடிவெடுக்கும் அ.தி.மு.க., அண்ணா அ.தி.மு.க.வா? இல்லை அமித்ஷா அ.தி.மு.க.வா? பழனிசாமி மட்டுமல்ல, கூட்டணியில் இருக்கும் அன்புமணியும், டி.டி.வி. தினகரனும் அமித்ஷாவை சந்திக்கிறார்கள். பழனிசாமிக்கு நாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிரூபிக்கிறார்கள். கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களைப் பிரித்துக் கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டிய அ.தி.மு.க., தனது கட்சிக்கு எத்தனை சீட்டுகள் என்பதைக் கூடத் தீர்மானிக்க முடியாமல் டில்லிக்குச் சென்று அமித்ஷாவின் வீட்டு வாசலில் காத்துக் கிடக்கிறார். இந்த அடிமைகளை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் நுழைந்துவிடலாம் எனக் கற்பனைக் குதிரையை ஓட்டிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. அதன் பித்தலாட்ட நாடகத்தைத் தோலுரித்து காட்டிதான், இந்தத் தேர்தல், தமிழ்நாடு – என்.டி.ஏ. எனச் சூளுரைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். “தமிழ்நாடு டில்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்’’ என்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். “டில்லிக்கு வா பழனிசாமி’’ என்கிறார் அமித்ஷா. இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைத் தமிழக மக்கள் புரிந்து கொண்டார்கள். அடிமைக் கூட்டணிக்குத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மரண அடி கொடுக்க காத்திருக்கிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு வெல்லும், திராவிட மாடல் ஆட்சி 2.0 அதைச் சொல்லும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>