இந்தியாவின் தொன்மைக் குடிகள் தமிழர்களே என்பதை மறைக்க முயற்சியா?

Share

ஒன்றிய அமைச்சருக்கு
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கடும்கண்டனம்

கீழடி அகழாய்வை முதன்முதலாக நடத்திய இந்தியத் தொல்லியல்துறை இயக்குநர் கே. அமர்நாத் இராமகிருஷ்ணா மூன்றாண்டுகளுக்கு முன்பு சமர்ப்பித்த தொல்லியல் அறிக்கையை இதுவரை வெளியிடாமல் பல்வேறு குறைகள் இருப்பதாக குற்றம் சாட்டி வந்த ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இப்போது புதிய குற்றச்சாட்டு ஒன்றினை சுமத்தியுள்ளார்.

தமது அறிக்கையைத் தயாரிக்கும்போது அமர்நாத் இராமகிருஷ்ணா அப்போதைய தி.மு.க. அரசின் செல்வாக்குக்குட்பட்டு இந்த அறிக்கையைக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், கீழடி அகழாய்வை அமர்நாத் நடத்தியபோதும், அதன் முடிவுகளை அறிவித்த போதும் அ.தி.மு.க. அரசு பதவி வகித்தது என்பதையும், கீழடி அகழாய்வு பிரச்சனையில் அந்த அரசு ஒருபோதும் தலையிடவில்லை என்பதையும் அடியோடு மறைத்து பழி சுமத்தியுள்ளார்.

கீழடி அகழாய்வு முடிவுகள் வெளிவந்த பிறகு, பதவிக்கு வந்த தி.மு.க. அரசின் காலத்தில் கீழடி அகழாய்வை மத்திய அரசு கைவிட்ட காரணத்தினால், தமிழகத் தொல்லாய்வுத் துறையை கொண்டு அகழாய்வைத் தொடர்ந்து நடத்தி அறிவியல் பூர்வமான பல முடிவுகளை வெளியிட்டது. அமர்நாத் அகழாய்வு முடிவுகளில் அது ஒருபோதும் தலையிடவில்லை.

கீழடி அகழாய்வு அறிக்கையை அமர்நாத் அளித்து மூன்றாண்டுகளாகிவிட்டது. 982 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையைப் பொதுவெளியில் வெளியிட அமைச்சருக்குத் துணிவு உண்டா? அந்த அறிக்கையை உடனடியாக வெளியிடவேண்டும். இந்தியாவில் உள்ள பல்வேறு தொல்லாய்வு அறிஞர்கள், உலக நாடுகளைச் சேர்ந்த தொல்லாய்வு அறிஞர்கள் ஆகியோர் அந்த அறிக்கையை ஆராய்ந்து பாராட்டுவார்களே தவிர, குறையிருப்பதாக ஒருவரும் கூறமாட்டார்கள்.

இந்தியாவின் மூத்த குடி தமிழர்களே என்பதை அண்மையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகள் மெய்ப்பித்துள்ளன. ஆனால், பா.ச.க. அரசு அதை மறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. கி.பி. 2004-2005 ஆண்டுகளின் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு புதியதாக நடத்தப்பெற்று, அதை நடத்திய இந்தியத் தொல்லியல் அதிகாரி டி. சத்தியமூர்த்தி என்பவர் அறிக்கை அளித்து 21 ஆண்டுகளான பிறகும், அதை இன்னும் வெளியிடாமல் மறைப்பது ஏன்? இது இந்தியாவின் தொல்குடி தமிழினமே என்ற வரலாற்று உண்மையை மறைப்பதற்கு யாராலும் இயலாது. தங்களது உள்நோக்கத்தையும் மறைத்துக்கொண்டு அமர்நாத் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறும் ஒன்றிய அமைச்சரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அன்புள்ள,

(பழ. நெடுமாறன்)
தலைவர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>