இந்தியாவும், அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளுமென டிரம்ப் பேட்டியில் கூறியுள்ளார்

Share

கடந்த பிப்ரவரி 7-ந்தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடிக்கு இடையேயான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, இந்தியாவும் அமெரிக்காவும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின்  முதல் கட்டமாக, ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் வரையறைகளை இறுதி செய்து கூட்டறிக்கை வெளியிட்டன. முன்னதாக 1977-ம் ஆண்டின் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகார சட்டத்தின் கீழ், பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது பரந்த அளவிலான பரஸ்பர வரிகளை விதித்து டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார்.

அதன்படி, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீதம் வரி விதித்தது. இதனிடையே, இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒப்பந்தத்திற்கு பிறகு, இந்தியா மீதான வரியை 25 சதவீதமாக டிரம்ப் குறைத்தார். மேலும், இந்த வரியை 18 சதவீதமாக குறைக்கவும் அமெரிக்கா ஒப்புக்கொண்டிருந்தது. இதற்கிடையில் சர்வதேச நாடுகள் மீது டிரம்ப் விதித்த பரஸ்பர வரிகளுக்கு எதிராக பிப்ரவரி 20-ந்தேதி அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பிற்கு பிறகு, பிப்ரவரி 24-ந்தேதி முதல், 150 நாட்களுக்கு அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீத வரிகள் விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்தார். அமெரிக்க உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளின் பின்னணியில், இந்தியாவும், அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து அதிபர் டிரம்ப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது; “இந்தியா பல ஆண்டுகளாக அமெரிக்க கொள்கைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, மிகப்பெரிய அளவில் சுங்க வரிகளை விதித்து வந்தது. அவர்கள் அமெரிக்க நிறுவனங்களிடம் பெரும் கட்டணங்களை வசூலித்தார்கள். ஆனால் நாங்கள் இந்தியாவிடம் இருந்து எதுவும் வசூலிக்கவில்லை. கடந்த காலத்தில், இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களை விற்க அனுமதிக்கவில்லை. அவர்கள் 200 சதவீதம் வரி விதித்ததால், ஹார்லி-டேவிட்சன் விற்பனை தடுக்கப்பட்டது. இறுதியில் ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் இந்தியாவுக்குச் சென்று தங்கள் சொந்த ஆலைகளை உருவாக்கினார்கள். அது நடந்தது துரதிர்ஷ்டவசமானதுதான், ஆனாலும் அது நான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நடந்தது. அதே சமயம் இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் மோட்டார் சைக்கிள்களை விற்றார்கள். நாம் அவர்களிடம் எவ்வளவு கட்டணம் வசூலித்தோம் தெரியுமா? ஒன்றுமே இல்லை. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக இருக்கிறது. நாம் இந்தியா மூலம் நிறைய பணம் சம்பாதிக்கிறோம்.

பிரதமர் நரேந்திர மோடி ஒரு நல்ல நண்பர். நாங்கள் நன்றாக பழகுகிறோம். அமெரிக்காவும், இந்தியாவும் விரைவில் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.”

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>