இந்தியா – ஜப்பான் ஒத்துழைப்பு மற்ற நாடுகளுக்கு எதிராக இருக்கக் கூடாதென சீனா தெரிவித்துள்ளது

Share

இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு எந்த மூன்றாவது நாட்டையும் குறிவைப்பதாகவோ அல்லது மற்றொரு நாட்டின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவோ இருக்கக் கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது. ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார். இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, முக்கிய கனிம வளங்கள், பாதுகாப்பு, பொருளாதாரம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் கூறியிருப்பதாவது: “நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பிராந்திய நாடுகளிடையே புரிதலையும் பரஸ்பர நம்பிக்கையையும் அதிகரிப்பதற்கும், அந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் உதவியாக இருக்க வேண்டும். அத்தகைய ஒத்துழைப்பு எந்த மூன்றாவது நாட்டையும் குறிவைக்கக் கூடாது. மற்ற நாடுகளின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது. மேலும், சிறிய பிரத்யேக கூட்டணிகளை உருவாக்குவதற்கோ அல்லது பிராந்தியத்தில் பிளவையும் மோதலையும் தூண்டுவதற்கோ அது பயன்படுத்தப்படக் கூடாது. உலகளாவிய தொழில்துறை மற்றும் விநியோகச் சங்கிலிகள் பாதுகாப்பாகவும், நிலையானதாகவும் இருப்பதை உறுதி செய்வது அனைத்து நாடுகளின் பொறுப்பாகும். இதற்காக அனைத்து தரப்பினரும் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பை முன்னிறுத்தி ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்க வேண்டும்” என்றார். பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி இடையேயான உச்சி மாநாட்டு பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு நாடுகளும் பொருளாதார கூட்டாண்மை கட்டமைப்பு, ராணுவ தளவாடங்களை இணைந்து உருவாக்குவதற்கான பாதுகாப்பு ஒப்பந்தம், எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சமாளிக்க எரிசக்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களை முன்னெடுப்பது குறித்து இருநாடுகளும் அறிவித்தன. மேலும், கிழக்கு சீனக் கடல் மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளில் நிலவும் சூழல் குறித்து இரு நாடுகளும் கவலை தெரிவித்தன. கடல் வழிச் சுதந்திரத்தை பாதிக்கும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் மற்றும் பலவந்தமாக தற்போதைய நிலையை மாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக இந்தியா – ஜப்பான் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில்தான், சீனாவின் மேற்கண்ட கருத்து அமைந்துள்ளது. சீனா தைவான் மீது தாக்குதல் நடத்தினால் ஜப்பான் பதிலடி கொடுக்கலாம் என்று சனே தகாய்ச்சி கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தைவானை சீனா தனது ஒரு பகுதி என்று கூறி வருகிறது. சீனாவின் இந்த நிலைப்பாட்டுக்கு எதிராக ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>