இராணுவத்திடமிருந்து காணிகளை மீட்க சர்வதேச சமூகத்தினர் தலையிட வேண்டும்

Share

தமிழரசு கட்சி எம்.பி. சிறீதரன் கோரிக்கை

ந.லோகதயாளன்.

ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சாட்டினார்.

யாழ். பலாலி பகுதியில் இராணுவத்தால் தொடர்ந்து கையகப்படுத்தப்பட்டுவரும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவிக்கக் கோரி இடம்பெறும் போராட்டத்தில் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை இராணுவம் தமிழ் மக்களின் காணிகளைத் தொடர்ந்து அபகரித்துவரும் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறும் நோக்கில் அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் மீது புலனாய்வுத் துறையினரும் இராணுவத்தினரும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை விடுத்து வருவதுடன், அவர்களைப் பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்து விசாரணை நடத்துவதோடு வழக்குத் தொடரும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் சுதந்திரமாகப் போராட முடியாதவாறு பந்தல் அமைக்கக்கூட அனுமதி மறுக்கப்பட்டு, மிகுந்த வெயிலில் நிற்கும் அவல நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 36 வருடங்களாகத் சொந்த வீடுகளில் வாழ முடியாமல், இராணுவத்தால் வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் அழிக்கப்பட்ட நிலையில் மக்கள் பெரும் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர்.

போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், இராணுவ முகாம்களுக்கு அருகில் சிங்களக் குடும்பங்கள் தொடர்ச்சியாகக் குடியேற்றப்பட்டு வருகின்றன. இது தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களைப் பறித்துச் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கும் முழுமையான முயற்சியாகும்.

இலங்கை அரசும் ஜனாதிபதியும் காணிகளை விடுவிக்கப் போவதாகத் தெரிவித்தாலும், களத்தில் நிலைமை முற்றிலும் மாறாகவே உள்ளது.

எனவே, சர்வதேச சமூகமும் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவத்திடமிருந்து மீட்டுத் தருவதற்கு உடனடியாகத் தலையிட வேண்டும்.

தமிழ் மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை பலாலி, வசாவிளான் மற்றும் மயிலிட்டி ஆகிய பகுதிகளில் மக்களின் இந்த நியாயமான போராட்டம் தொடரும்.” – என்று அவர் மேலும் உறுதியுடன் தெரிவித்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>