நினைவேந்தல் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் 03-09-2026 அன்று இடம்பெற்றபோதே நினைவேந்தல் குழு இதனை தெரிவித்தது.
மேலும் தெரிவிக்கையில், கிருசாந்தியினுடைய நினைவேந்தல் செப்டம்பர் 7 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகும். அந்த நிகழ்வில் மலரஞ்சலி இடம்பெற்று, முக்கிய அரசியல் தரப்பினுடைய, ஆய்வாளர்களுடைய கருத்துக்களும், கவிதை நிகழ்ச்சிகளும், நாடக நிகழ்வுகளும் இடம்பெற இருக்கின்றன.
இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, அரியாலையின் ஏனைய பகுதிகளிலும் யாழ் குடாநாட்டிலும் வடக்கு கிழக்கிலும் இருக்கின்ற மனிதப் புதைகுழிகளை அடையாளப்படுத்தி, அவற்றை அகழ்ந்தெடுப்பதற்கான நடைமுறைகளை உருவாக்குவதற்கான ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவதற்காக நாங்கள் தீர்மானித்துள்ளோம்
எதிர்வரும் நாட்களில் இதனுடன் தொடர்புடைய ஒவ்வொரு அமைப்பையும் உத்தியோகபூர்வமாக அழைத்து நாங்கள் சந்திப்புகளை ஏற்படுத்தி, 45 நாட்களுக்குள் இந்த பொது கட்டமைப்பை உருவாக்கி, அதன் ஊடாகவே இந்த மனிதப் புதைகுழிக்கான பொதுக் கொள்கையும், பொதுவான செயற்பாடும், சட்டரீதியான செயற்பாடும் முன்னெடுக்கப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அந்த வகையில் நினைவேந்தலிற்கு அனைத்துத் தமிழ் இன உணர்வாளர்கள் அனைவரும் திரண்டு, பாடசாலை மாணவி கிருஷாந்தியை மட்டுமல்ல, அந்த மண்ணில் இனப்படுகொலை செய்யப்பட்டு எமது இனத்தை அழித்த செயல்பாடுகளைக் கண்டித்து எழுச்சிகொள்ளும் வகையில் அனைவரும் மனப்பூர்வமாக அந்த ஆதரவினை வழங்கி, இந்நிகழ்வை ஒரு எழுச்சி நிகழ்வாக நடத்த ஒத்துழைக்குமாறு கேட்டு நிற்கின்றோம் – என்றனர்.