தேனி மாவட்டம் வருசநாடு ஊராட்சியில் உள்ள பசுமலை கிராமத்தில் 1967 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி பிறந்தவர் மாரிமுத்து.
இயக்குனர் – நடிகர் என 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவிலும், சின்னத்திரையிலும் முத்திரை பதித்து மக்களின் அன்பை பெற்றுவந்த நடிகர் மாரிமுத்து காலை மாரடைப்பால் காலமானார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர். எதிர்நீச்சல் தொடருக்காக பின்னணி பணிகளில் ஈடுபட்டிருந்த நடிகர் மாரிமுத்துவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படவே, அவராகவே காரை ஓட்டிக்கொண்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சென்று அனுமதி ஆன நிலையில் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு சினிமா, சின்னத்திரை நடிகர்கள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து இறுதி சடங்கிற்காக மாரிமுத்துவின் உடல் சொந்த ஊரான தேனிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவருடைய உடல் தகனம் செய்யப்பட உள்ளது.