”ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை அல்லது அரசியல் முடிவுகளை இலங்கைப் பாராளுமன்றத்திற்குள் ஒரு உறுப்பினர் விமர்சிக்க முடியும். ஆனால், ஒரு வெளிநாட்டு அரசியல்வாதிக்கு அல்லது கட்சித் தலைவருக்கு இலங்கை பாராளுமன்றத்திலிருந்தவாறு “கொலை மிரட்டல்,அச்சுறுத்தல்” விடுப்பது பாராளுமன்ற ஒழுங்கு விதிகளின் படி தண்டனைக்குரியது,ஆனால் அர்ச்சுனா எம்.பி. தமிழ் தேசியத்திற்கும் தமிழ் தேசியவாதிகளுக்கும் எதிராகவே செயற்படுவதால் சீமானுக்கு எதிரான இவரின் ”கொலை மிரட்டல்” விடயம் அமுக்கப்பட்டு அர்ச்சுனா எம்.பி. பாதுகாக்கப்படுவார் என்பது நிச்சயம்”
—கே.பாலா
ரஜினிகாந்தின் மிகப்பெரிய வெற்றிப்படமான பாட்ஷா படத்தில் ரஜினிகாந்திடம் அடிவாங்கியவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் அவரின் தம்பியான பொலிஸ் இன்ஸ்பெக்டர் சொல்லும் ஒரு வசனம் மிகவும் பிரபலமானது. ”அடி வாங்கியவர்களுக்கு சிகிச்சை செய்யும் டாக்டர்கள் எல்லாம் மிரண்டு போயிருக்கின்றார்கள்.இது சாதாரண ஆள் அடித்த அடியல்ல,ரத்தம்,சதை,நாடி ,நரம்பெல்லாம் வெறிபிடித்தவன் அடித்த அடி ” என்கின்ற வசனம்தான் அது.இந்த வசனத்தை கொஞ்சம் மாற்றி ”இது சாதாரணமான ஒருவன் சொல்லும் பொய் ,புரட்டல்ல…நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி எல்லாவற்றிலும் பொய் ,புரட்டு, ஏமாற்று, இழி குண வெறி ஊறிப்போன ‘பைத்தியம்’ஒருவனால்தான் இப்படி பொய் பேச முடியும்”என சுயேட்சைக்குழு 17 இன் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி. யுமான டொக்டர் அர்ச்சுனா இராமநாதனுக்கு கூற முடியும்.
அந்தளவுக்கு தமிழ் தேசிய அரசியலில் கடந்த 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் வரை இல்லாத ஒரு புதுவடிவமாக ,எந்தக் கொள்கையும் கோதாவரியும் இல்லாத, ”அண்டப்புளுகன் ஆகாசப் புளுகனாக ” பொய்யும் புரட்டும் நிறைந்த அரசியல்வாதியாக,தினம் ஒன்று பேசும் குழப்பவதியாக,பெண்களை இழிவுபடுத்தும் கேவல புத்தி கொண்டவராக தமிழ் மக்களை, மக்கள் பிரதிநிதிகளை மட்டுமன்றி அயல் நாட்டு அரசியல்வாதிகளுக்கும் சேறுபூசும் ,கொலை மிரட்டல் விடுக்கும் மன நோயாளியாக உருவெடுத்து இன்று தமிழ் தேசிய அரசியலையே நாறடித்துக் கொண்டும் தமிழினத்தையே தலைகுனிய வைத்துகொண்டுமிருக்கின்றார் அர்ச்சுனா இராமநாதன் எம்.பி.
2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சமர்ப்பித்த வேட்பு மனுவில் இருந்து இன்று வரை ”பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானாகவே” இந்த அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. உருவெடுத்துள்ளார்.இதனால் அவர் தமிழ் மக்களின் செல்வாக்கை இழந்து வந்தாலும் தனது ”செல்வத்தை”அசுர வேகத்தில் உயர்த்தியுள்ளதுடன் சிங்கள இனவாதிகளின் செல்லப்பிள்ளையாகவும். தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்களின் ஏவல் பேயாகவுமே உள்ளார்.
இதுவரை மிரட்டல், துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல் உள்ளிட்ட பல வழக்குகளில் சிக்குண்டுள்ளபோதும் திருந்தாத இவர் தற்போது இன்னுமொரு ”கொலை மிரட்டல் ”சர்ச்சையில் சிக்கியுள்ளார்.இது இலங்கைக்குள் விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் அன்றி இலங்கை பாராளுமன்றத்தில் இருந்தவாறு இன்னொரு நாட்டின் அரசியல் தலைவருக்கு விடுக்கப்பட்ட ”கொலை அச்சுறுத்தல்”என்பதனால் தூதரக மட்டத்தில் தீவிர கவனம் பெற்றுள்ளதுடன் இலங்கை பாராளுமன்றமும் அர்ச்சுனா இராமநாதன் எம்.பி விடுத்துள்ள இந்த கொலை மிரட்டல் தொடர்பில் தீவிர கவனத்தை செலுத்த வேண்டிய அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன.
அர்ச்சுனா இராமநாதன் எம்.பி.அண்மையில் தமிழகம் சென்றிருந்தார். அவரின் தமிழக விஐயத்தின் முக்கிய நோக்கம் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்ற விஜய்யை சந்திப்பதாகவே இருந்தது. அதற்கு அச்சாரமாகவே அவர் பாராளுமன்றத்தில் பேசுகையில், தமிழ் மக்களின் இதயத்தை கவர்ந்த தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு இலங்கை தமிழன், அடக்கப்பட்ட தமிழன் என்ற தமிழ் குரலாக இந்த பாராளுமன்றத்தில் பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன். என்னுடைய அண்ணன் விஜய் முதலமைச்சராக பதவியேற்பதை பார்ப்பதே எனது கடைசி ஆசை . கச்சதீவை விஜய் கேட்டிருக்கின்றார் என்பதற்காக கச்சதீவை தர மாட்டோம் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் கச்சதீவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுக்கச் சொல்கின்றோம். தமிழக மக்கள் எங்களை பாதுகாத்துக்கொள்வார்கள் என்று பேசியிருந்தார் .
ஆனால் தமிழகம் சென்ற அர்ச்சுனா எம்.பி. முதலமைச்சர் விஜயை சந்திக்க பல முயற்சிகளை எடுத்தும் அதுகைகூடவில்லை. இறுதியில் தனது தமிழக விஜயத்திற்கு உதவிய விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். தொடர்ந்து விஜய்யின் த வெக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோரை சந்தித்து பேசினார்.அத்துடன் இலங்கை திரும்பியிருந்தால் தப்பித்திருப்பார் ஆனால் அங்கு செய்தியாளர்களிடம் பேசும்போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சனம் செய்தார் இலங்கை தமிழர்களை வைத்து பணம் உழைத்து சீமான் அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார்.இது தமிழகத்தில் மட்டுமன்றி இலங்கையின் வடக்கு கிழக்கிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது அர்ச்சுனா எம்.பி மிகக்கடுமையாக விமர்சிக்கப் படத் தொடங்கினார்.
இந்நிலையில் இலங்கை திரும்பிய கையோடு, மே 18 அன்று பாராளுமன்றத்தில் பேசுகையில் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்தே அர்ச்சுனா எம்.பி. சிக்கலில் மாட்டியுள்ளார். அர்ச்சுனா எம்.பி. பேசுகையில், எங்களுடைய அண்ணன் சீமான் ”அவன் என்னடா” என்று என்னை கேவலமான வார்த்தைகளில் பேசியிருந்தார். அண்ணன் நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்கள். அங்கு நான் ஆயுதம் கொண்டு வர முடியாது. ஆயுதம் கொண்டு வர முடிந்திருந்தால் உன்னை சுட்டு இருப்பேன்டா.நல்ல காலம் நீ இந்தியாவில் இருக்கிறாய். யாழ்ப்பாணம் வந்திருந்தால் வெடிவைத்து இருப்பேன். இந்தியாவில் நீ பாதுகாப்பாய் இருந்து கொள். திரள்நிதி வரும். சாப்பிடு அப்படியே இரு. எங்களின் இனத்தை விற்காதே. எனக்கு வலிக்கிறது.என்னுடைய தந்தை இறந்திருக்கிறார். தாய் இறந்திருக்கிறார். பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். எங்களின் வலியை விற்காதே. அவ்வளவு தான் கேட்டு கொள்கிறேன். தாராளமாக திரள்நிதி வாங்கி வயிற்றை நிரப்பிக் கொள். ”என்று கூறியிருந்தார்
யாழ்ப்பாணத்தில் காணிப் பிரச்சினை ஒன்றில் பெண்ணொருவரிடம் துப்பாக்கி காட்டி உயிரச்சுறுத்தல் விடுத்த நிலையில் அர்ச்சுனா எம்.பி.க்கு வழங்கிய உத்தியோகபூர்வ துப்பாக்கியானது நீதிமன்றத்தினால் கைப்பற்றப்பட்டு சான்றுப் பொருளாக்கப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.இவ்வாறான நிலையில் இந்தியாவுக்கு வரும்போது துப்பாக்கி எடுத்து வர முடியுமாக இருந்திருந்தால் சீமானை சுட்டுக் கொலை செய்திருப்பேன் என்றும், அல்லது யாழ்ப்பாணத்துக்கு சீமான் வந்தால் அவரை சுட்டுக் கொலை செய்வேன் எனவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளமை மூலம் அவரிடம் சட்டவிரோத துப்பாக்கி இருக்கின்றதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமானுக்கு அர்ச்சுனா எம்.பி. இலங்கைப் பாராளுமன்றத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளமை தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழகத் தலைவர்கள் பலரும் அர்ச்சுனா எம்.பியின் கொலை மிரட்டல் தொடர்பில் தமது கண்டனங்களையும் எதிர்ப்பையும் விசனங்களையும் வெளியிட்டு வருகின்றனர். தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர் ஒருவருக்கு இலங்கை எம்.பி ஒருவர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது பகிரங்க கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பில் இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகமும் தீவிர கவனம் செலுத்தியுள்ளதுடன் இலங்கை அரசினது கவனத்திற்கும் கொண்டுசென்றுள்ள நிலையில் பாராளுமன்றமும் இந்தக்கொலை மிரட்டல் தொடர்பில் அர்ச்சுனா எம்.பி.யின் பேச்சை ஆராய்ந்து வருகின்றது .
இலங்கை பாராளுமன்றத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மற்றொரு உறுப்பினருக்கு மிரட்டலோ அல்லது அச்சுறுத்தலோ விடுக்க சட்டப்படியாகவும், ஒழுங்குமுறைப்படியும் எவ்வித அனுமதியும் இல்லை.பாராளுமன்றத்திற்குள் உறுப்பினர்கள் கண்ணியமாகவும், விதிகளைப் பின்பற்றியும் நடக்க வேண்டும் என்பது கட்டாயம். பாராளுமன்றத்தின் ஒழுங்குமுறையைத் தீர்மானிக்கும் நிலையியற் கட்டளைகளின்படி, பாராளுமன்றத்திற்குள் ஒழுங்கீனமாக நடப்பது, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது அல்லது சக உறுப்பினர்களை அச்சுறுத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
சபாநாயகர் சபையின் ஒழுங்கைப் பேண கடமைப்பட்டவர். மிரட்டல் விடுத்த உறுப்பினரை எச்சரிக்கவோ, அன்றைய தினம் சபையிலிருந்து வெளியேற்றவோ அல்லது சபாநாயகரால் அந்த உறுப்பின்னர் பாராளுமன்றக் கூட்டத்தொடர்களில் பங்கேற்பதனை தற்காலிகமாக தடை செய்யவோ முடியும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சபைக்குள் பேசுவதற்கு “பாராளுமன்ற சிறப்புரிமை” உண்டு. அதாவது, அவர்கள் சபைக்குள் பேசும் பேச்சுக்கள் தொடர்பாக சாதாரண நீதிமன்றங்களில் வழக்குத் தொடர முடியாது.இருப்பினும், இந்த சிறப்புரிமை என்பது மற்றொரு உறுப்பினரை மிரட்டுவதற்கோ அல்லது அவரது கடமையைச் செய்யவிடாமல் தடுப்பதற்கோ வழங்கப்பட்ட ஒன்றல்ல. ஒரு உறுப்பினர் அச்சுறுத்தப்படுவதன் மூலம் அவரது பாராளுமன்றக் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டால், அது பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறிய செயலாகக் கருதப்படும்.
பாதிக்கப்பட்ட உறுப்பினர் தனக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்து சபாநாயகரிடம் முறைப்பாடு செய்ய முடியும். சபாநாயகர் இந்த விவகாரத்தை பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் விசாரணைக்கு அனுப்புவார். விசாரணை முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு எதிராக பாராளுமன்றத்தினால் தண்டனை அல்லது ஒழுங்கு நடவடிக்கை பரிந்துரைக்கப்படும்.பாராளுமன்றத்திற்குள் நடக்கும் சாதாரண விவாதங்களுக்கு சிறப்புரிமை பாதுகாப்பு இருந்தாலும், அது ஒரு பயங்கரவாத அச்சுறுத்தல், கடுமையான உடல் ரீதியான வன்முறை அல்லது கொலை மிரட்டலாக இருக்கும் பட்சத்தில், நாட்டின் பொதுவான குற்றவியல் சட்டத்தின் கீழ் பொலிஸார் மற்றும் நீதிமன்றங்கள் ஊடான சட்ட நடவடிக்கைகளுக்கும் அது வழிவகுக்கலாம்.அரசியல் விவாதங்களின் போது வாக்குவாதங்கள் ஏற்படுவது சாதாரணமானது என்றாலும், தனிப்பட்ட ரீதியில் மிரட்டல் அல்லது அச்சுறுத்தல் விடுப்பது பாராளுமன்ற விதிகளின்படி தண்டனைக்குரிய குற்றம். சபாநாயகர் மற்றும் சிறப்புரிமைக் குழுவின் மூலம் இதற்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள்,மக்கள் பிரதிநிதிகளுக்கே இவ்வாறு அச்சுறுத்தல், கொலை மிரட்டல் விடுக்க முடியாது என நிலையியல் கட்டளைகள் உள்ள நிலையில் இன்னொரு நாட்டின் மக்கள் பிரதிநிதி, அரசியல் கட்சித்தலைவருக்கு இலங்கை பாராளுமன்றத்திலிருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கொலை மிரட்டல் விடுப்பதென்பது எவ்வளவு பாரதூரமான குற்றம். இலங்கை பாராளுமன்றத்தில் உள்ள ஒரு உறுப்பினர், மற்றொரு நாட்டின் மக்கள் பிரதிநிதிக்கோ அல்லது அரசியல்வாதிக்கோ பாராளுமன்ற அமர்வின் போது கொலை மிரட்டல் அல்லது அச்சுறுத்தல் விடுக்க சட்டப்படியாகவோ, பாராளுமன்ற ஒழுங்கு விதிகளின்படியோ எவ்வித அனுமதியும் இல்லை.பாராளுமன்றத்திற்குள் பேசும் பேச்சுகளுக்கு சட்டப் பாதுகாப்பு இருந்தாலும், சர்வதேச பாராளுமன்ற மரபுகள் மற்றும் இலங்கையின் உள்நாட்டு விதிகள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கின்றன.
பாராளுமன்ற சிறப்புரிமை என்பது இலங்கை எல்லைக்குள் மட்டுமே செல்லுபடியாகும்.எனவே சம்பந்தப்பட்ட உறுப்பினரின் கருத்து இலங்கை அரசாங்கத்தின் கருத்து அல்ல என்றும், அது தனிப்பட்ட உறுப்பினரின் கருத்து என்றும் இலங்கை அரசு சர்வதேச ரீதியில் விளக்கமளிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும்.அதுமட்டுமன்றி கொலை மிரட்டல் விடுத்த இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் எப்போதாவது சம்பந்தப்பட்ட நாட்டுக்குச் சென்றால் அல்லது அந்த நாட்டின் சட்ட எல்லைக்குள் சிக்கினால், பாதிக்கப்பட்ட வெளிநாட்டு அரசியல்வாதி அந்த நாட்டில் உள்ள சட்டங்களின் கீழ் (உதாரணமாக: இணையவழி மிரட்டல், சர்வதேச அச்சுறுத்தல்) சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை அல்லது அரசியல் முடிவுகளை இலங்கைப் பாராளுமன்றத்திற்குள் ஒரு உறுப்பினர் விமர்சிக்க முடியும். அதற்கு அனுமதி உண்டு. ஆனால், ஒரு வெளிநாட்டு அரசியல்வாதிக்கு அல்லது கட்சித்தலைவருக்கு இலங்கை பாராளுமன்றத்திலிருந்தவாறு “கொலை மிரட்டல் அல்லது அச்சுறுத்தல்” விடுப்பது பாராளுமன்ற ஒழுங்கு விதிகளின்படி முற்றிலும் தவறானது மற்றும் தண்டனைக்குரியது
ஆனால் தற்போதைய அநுரகுமார அரசாங்கம் உள்ளிட்ட பேரினவாதிகள் தமது மறைகரமாகவே இந்த அர்ச்சுனா எம்.பி.யை பயன்படுத்தி வருவதால் சீமானுக்கு எதிரான இவரின் ”கொலை மிரட்டல்” விடயம் அமுக்கப்பட்டு விடும் என்றே தெரிகின்றது. பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் விபரத்தில் பொய்யான விடயங்களை பதிவு செய்தமைக்கு எதிராக இவர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இவர் பொய் விபரங்களை உள்ளடக்கியமை உறுதிப்படுத்தப்பட்டு எம்.பி. பதவி பறிபோகவுள்ள நிலையில் அந்த தீர்ப்பு வழங்கப்படாது இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் பாராளுமன்றத்தில் அர்ச்சுனா எம்.பி யின் அருவருக்கத்தக்க பேச்சுக்களுக்கு எதிராக அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட முடியுமாக இருந்தபோதும் ஒரேயொரு தடவை அவரின் உரைகளை ஒளிபரப்ப தடைவிதிக்கப்பட்டதைத் தவிர இந்த அரசு அர்ச்சுனா எம்.பி.க்கு எதிராக வேறு எதனையும் செய்யவில்லை.
அர்ச்சுனா எம்.பி வெளியிடும் பொய்கள்,அருவருக்கத்தக்க கருத்துக்கள் மற்றும் அவரின் செயற்பாடுகள் தொடர்பாக அவருக்கு எதிராக அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தொடர்பில், தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் பதிலளிக்கையில்,”அர்ச்சுனா எம்.பி ஒரு கோமாளி . அவரின் கருத்துக்களில் எந்தவிதமான பெறுமதியும் கிடையாது. இதனால் அவரின் கருத்துக்களை அரசாங்கம் கண்டுகொள்வதில்லை. அந்த எம்.பி நடந்துகொள்ளும் முறை செயற்பாடுகள் தொடர்பில் நாங்கள் அறிவோம். இதனால் அது தொடர்பில் குழப்பமடையத் தேவையில்லை. அதனை எவரும் கணக்கில் எடுப்பதும் கிடையாது. இவ்வாறான கோமாளி கதாபாத்திரங்களின் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் குழப்பமடைவதில்லை. மக்ககளும் குழப்பமடைவது இல்லை என்பதுடன், மக்களும் அதனை ஏற்றுக்கொள்வதில்லை. இதனால் எவரும் அவருக்கு பதிலளிக்கப் போவதுமில்லை என்று தெரிவித்துள்ளமை சீமானுக்கு எதிரான கொலை மிரட்டல் விடயத்தில் அர்ச்சுனா எம்.பி. பாதுகாக்கப்படுவார் என்பதற்கான் முன்னோட்டமாகவேயுள்ளது.