”இலங்கையின் கணக்காய்வாளர் நாயகமாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவரை நியமிக்கும் அநுர குமார அரசாங்கத்தின் நகர்வுக்கு, அரசியலமைப்பு பேரவை உறுப்பினராக ஆதரவாக வாக்களித்தார் என்ற ஒற்றைக் காரணத்திற்காக, தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் பதவியிலிருந்து சிவஞானம் சிறீதரன் எம்.பி.யை நீக்கிய .தமிழரசின் தலைமை இன்றோ அநுரகுமார அரசாங்கத்தின் ஒவ்வொரு நகர்வுக்கும் நிபந்தனையற்ற ஆதரவையும் ‘முட்டுக்கொடுக்கும்’ அரசியலையும் மிக நேர்த்தியாக வழங்கி வருகிறது”
——கே.பாலா
தமக்கு விருப்பமில்லாத பாராளுமன்ற உறுப்பினருக்கு ‘கொள்கைவாதம்’ பேசுவதும், அதிகாரம் கொண்ட அரசாங்கத்திற்கு ‘அனுசரணைவாதம்’ பேசுவதும் தமிழரசுக்கட்சியின் தற்போதைய பாணியாக மாறியிருக்கிறது. ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியின் நியமன விவகாரத்தில் சிறீதரன் எடுத்த நிலைப்பாட்டை “கட்சிக் கொள்கைக்கு எதிரானது” என முத்திரையிட்டு, விளக்கம் கோரி , பாராளுமன்றக்குழுத்தலைவர் பதவியையும் பறித்த தமிழரசுக்கட்சித் தலைமை; இன்று அதே இராணுவமயமாக்கலையும், தமிழ் மக்கள் சார்ந்த புறக்கணிப்புகளையும் தொடரும் அநுரகுமார அரசாங்கத்திற்குத் தூணாக நின்று ‘முட்டுக்கொடுப்பது’ ஏன்? கட்சிக்குள்ளே ஒரு முகம், அரசாங்கத்திடம் இன்னொரு முகம் காட்டும் தமிழரசுக்கட்சியின் இந்த இரட்டை நிலைப்பாட்டின் பின்னணியில் உள்ள அரசியல் என்ன?
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் உட்கட்சி முரண்பாடுகள் மற்றும் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடனான அணுகுமுறை குறித்து தமிழ் அரசியல் அரங்கில் தற்போது தீவிர விவாதங்கள் எழுந்துள்ளன. தமிழ் மக்களின் முதன்மையான கோரிக்கைகளான 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல் ,அரசியல் தீர்வு, காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினைக்குத் தீர்வு, காணி விடுவிப்பு மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் ,தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை போன்ற விடயங்களில் அநுரகுமார அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றாத, தெளிவான உறுதியான வாக்குறுதிகளை வழங்காத நிலையிலும், தமிழரசுக் கட்சித் தலைமை அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற வகையில் ஆதரவுப் போக்கை கையாள்வதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினராக செயற்பட்ட தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரான சிறீதரன் எம்.பி., கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியை நியமிப்பது தொடர்பான வாக்கெடுப்பில் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு ஆதரவாக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டை . தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ,பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான ”தான்தோன்றி”புதிய தலைமை முன்வைத்து பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து சிறீதரனை நீக்கி கட்சி ரீதியாக பழிவாங்கினாலும் இந்த ”தான்தோன்றி”தலைமை ஆரம்பம் முதலே அநுரகுமார அரசாங்கத்திற்கு மறைமுக ஆதரவு வழங்கி வந்த நிலையில் தற்போது அண்மைய இரு சம்பவங்களில் நேரடியாகவே தமது அநுரகுமார அரசாங்க ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
இதில் ஒன்று; 2026 ஜூலை 5 மற்றும் 6 ஆகிய இரு தினங்களில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கைதிகள் என 32 பேர் உயிரிழந்ததுடன், மேலும் சிலர் பலத்த காயமடைந்தனர் . இதன் போது விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தனது பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியதாக குற்றஞ்சாட்டி எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது.ஆனால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட தமிழரசுக்கட்சி எம்.பி.க்களுக்கு அதன் தலைமையும் பாராளுமன்றக் குழுத்தலைவரான இரா. சாணக்கியன் எம்.பி.யும் அனுமதிக்கவில்லை.
அத்துடன் இந்த நம்பிக்கையிலாப் பிரேரணை மீதான விவாதம் கடந்த 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் விவாதத்தில் பேசிய தமிழரசின் தேசியப்பட்டியல் எம்.பி.யான சத்தியலிங்கம்”சிறைச்சாலைகளில் இந்த நிலைமைகளுக்கு பொறுப்பு கூற வேண்டியது தற்போதைய நீதி அமைச்சர் மட்டுமா?. இதற்கு முன்பிருந்த நீதி அமைச்சர்கள் பொறுப்பு இல்லையா? இதற்கு முன்னர் சிறைச்சாலைகளில் இந்த நிலைமை காணப்படவில்லையா? . கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட போது எந்த அரசாங்கம், எந்த நீதிஅமைச்சர் பொறுப்புக் கூறினார்? அவ்வாறான பிழைகளை ஏற்றுக்கொண்டு பதவியில் இருந்து நீதிஅமைச்சர்கள் விலகியிருக்க வேண்டும். ஆனால் இதற்கு முன்னர் அவ்வாறு நடந்ததில்லை. எனினும் இந்த அரசாங்கத்தின் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சம்பவம் நடைபெற்று சிறிது நேரத்தில் அதனை பொறுப்பேற்பதாக கூறினார். இதனை நாங்கள் பாராட்டுகின்றோம்”என்று புகழாரம் சூட்டினார்
இந்நிலையில் விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு இடம்பெற்றது இந்த வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி,பொதுஜன பெரமுன, புதிய ஜனநாயக முன்னணி,சர்வஜன அதிகாரம் ஆகிய கட்சிகளும் அர்ச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சைக்குழு 17 உம் வாக்களித்தன. இதேவேளை எதிர்க்கட்சிகள் பக்கத்திலுள்ள தமிழரசுக் கட்சி, செல்வம் அடைக்கலநாதன் எம்.பி பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயகத்தமிழ் தேசிய கூட்டணி,ஜீவன் தொண்டமான் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக்கட்சி,காதர் மஸ்தான் எம்.பி.யின் தொழில்கட்சி ஆகியவற்றுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சித் தலைவர்களான மனோகணேசன். திகாம்பரம். இராதாகிருஷ்ணன் ஆகியோர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
இரண்டாவது; தற்போதைய அநுரகுமார அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாக நீதித்துறையின் இறைமை கடுமையான சவாலுக்கு உள்ளாகி உள்ளது என்று தெரிவித்து,அது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதானிகளின் விசேட கூட்டம் ஒன்று கடந்த 23 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை கொழும்பில் எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்றது இதற்கான அழைப்பு தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் அக்கட்சி பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா சாணக்கியனுக்கும் எதிர்க்கட்சித் தலைவரினால் விடுக்கப்பட்டது .ஆனால் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றுவதில்லை என்று தமிழரசின் தலைமை தீர்மானித்தது. தமிழரசு புறக்கணித்த இந்த அநுரகுமார அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க் கட்சிகளின் மாநாட்டில் அனைத்து எதிர்க்கட்சிகளும் அதன் தலைவர்கள், பிரதானிகளும் பங்கேற்ற நிலையில் தமிழரசுக்கட்சியும் தமிழரசின் புதிய கூட்டாளியான செல்வம் அடைக்கலநாதன் எம்.பியின் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் மட்டுமே பங்கேற்கவில்லை.
ஆக அநுரகுமார அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அமைந்த நீதி அமைச்சருக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாப் பிரேரணை,அநுரகுமார அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டு ஆகிய இரண்டையும் புறக்கணித்த தமிழரசுக்கட்சி தாங்கள் அமைத்துள்ள மலையக,முஸ்லிம் கட்சிகளை உள்ளடக்கிய 6 தமிழ் கட்சிகளின் கூட்டு சார்பில் கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்தனர்.இவ்வாறாக வடக்கின் அரசியல் அரங்கில் இன்று தமிழரசுக்கட்சி அரங்கேற்றி வரும் நிகழ்வுகள், ‘சாணக்கியம்’ என்ற போர்வையில் தமிழரசுக்கட்சிக்குள் மூடப்பட்டிருக்கும் முரண்பாடுகளின் உச்சமாக உருமாறி வருகின்றது.
அநுரகுமார அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நகர்வுகளின்போது , அரசாங்கத்திடம் ”159” என்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது என்ற சாட்டுப்போக்கை கூறி “இணக்க அரசியல்” என்ற போர்வையில் அநுரகுமார அரசாங்கத்துக்கு ”முட்டுக்கொடுக்கும்”போக்கையே தமிழரசின் தற்போதைய ”தான்தோன்றி” தலைமைத்துவம் கையாள்கிறது. புதிய அரசாங்கத்துடன் ஆரம்பத்திலேயே மோதல் போக்கைக் கடைப்பிடிக்காமல், கலந்துரையாடல்கள் மற்றும் இராஜதந்திர வழிகள் மூலம் தமிழ் மக்களின் அன்றாட மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதே தற்போதைய சூழலில் சாணக்கியமான அணுகுமுறை என்ற காரணத்தை தமிழரசின் இந்த ”தான்தோன்றி”தலைமை முன்வைத்து வருகின்றது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் திணைக்களம் , வனவள திணைக்களம் மற்றும் வனஜீவிகள் திணைக்களம் ஆகியவற்றின் ஊடாகத் தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை “தொல்பொருள் மையங்கள்” அல்லது “பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்” என அடையாளப்படுத்தி ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் குறிப்பாக முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழர் பிரதேசங்கள், இந்து ஆலயங்கள் அல்லது பாரம்பரிய இடங்களுக்கு அருகில் புதிய பௌத்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகள் நிறுவப்படுவது தொடர்கின்றது
குருந்தூர் மலை மற்றும் வெடுக்குநாறி மலை வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்களில் தமிழ் மக்கள் சுதந்திரமாகச் சென்று வழிபாடு செய்வதில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிஸாரின் தடைகள் அல்லது கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன,கன்னியா வெந்நீரூற்றுப்பகுதியிலும் பௌத்த விகாரைக்கான அடிக்கல் அண்மையில் நாட்டப்பட்டுள்ளது .வடக்கு, கிழக்கில் உள்ள தனியார் மற்றும் பொது நிலங்களில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை முழுமையாக அகற்றி, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் செயல்முறை எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறவில்லை.
தமிழ் மக்களுக்கான அரசியலமைப்பு ரீதியான அதிகாரப் பரவலாக்கம், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது அல்லது மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துவது குறித்த நகர்வுகள் இன்னும் இல்லை. பௌத்த மதத்திற்கு அரசியலமைப்பில் அளிக்கப்பட்டுள்ள முதன்மை அந்தஸ்தை மாற்றியமைக்க முடியாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்கின்றது , காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினைக்குத் தீர்வு, காணி விடுவிப்பு மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் ,தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை என்ற எந்தவொரு உறுதிமொழியையும் அநுரகுமார அரசாங்கம் இதுவரையில் நிறைவேற்றவில்லை.
இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைப் பிரச்சினைகளுக்கோ, அரசியல் தீர்வுகளுக்கோ எந்தவித தீர்வுகளையும் வழங்காத வாக்குறுதிகளை நிறைவேற்றாத அநுரகுமார அரசாங்கத்திற்கு, தமிழரசு எந்த நிபந்தனையும் இன்றி சிவப்புக் கம்பளம் விரித்து வருகிறது.இராணுவ அதிகாரி நியமனத்தில் சிறீதரனின் ஆதரவை “கொள்கைத் துரோகம்” எனச் சித்திரித்த தலைமை, அதே அரசாங்கம் தமிழ் நிலங்களில் மேற்கொள்ளும் நிர்வாக மற்றும் அரசியல் ஆதிக்கங்களை மெளனமாக வேடிக்கை பார்ப்பது எந்த வகையான கொள்கைவாதம்?தமக்குச் சாதகமில்லாத சிறீதரன் எம்.பி.க்கு ‘கொள்கைவாதம்’ பேசி பதவிப் பறிப்பு நடத்துவதும், தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இன்னமும் எந்தவொரு தீர்வும் தராத அநுரகுமார அரசாங்கத்திற்கு ‘சாணக்கியம்’ என்ற பெயரில் முட்டுக்கொடுப்பதும் ஒருபோதும் நேர்மையான அரசியலாக முடியாது.
இலங்கையின் கணக்காய்வாளர் நாயகமாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவரை நியமிக்கும் அநுர குமார அரசாங்கத்தின் நகர்வுக்கு, அரசியலமைப்பு பேரவையில் அதன் உறுப்பினராக ஆதரவாக வாக்களித்தார் என்ற ஒற்றைக் காரணத்திற்காக, தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் பதவியிலிருந்து சிவஞானம் சிறீதரன் எம்.பி .தமிழரசின் தலைமையால் நீக்கப்பட்டதுடன் அநுரகுமாரஅரசாங்கத்தின் “இராணுவ மயமாக்கலை சகித்துக்கொள்ள முடியாது” என ஒழுங்கு நடவடிக்கை வாளைச் சுழற்றிய அதே தமிழரசின் தலைமை,இன்றோ அநுரகுமார அரசாங்கத்தின் ஒவ்வொரு நகர்வுக்கும் நிபந்தனையற்ற ஆதரவையும் ‘முட்டுக்கொடுக்கும்’ அரசியலையும் மிக நேர்த்தியாக வழங்கி வருகிறது.
மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்றுவிட்டு, உட்கட்சிப் பகையைத் தீர்ப்பதற்கு ஒரு நீதியையும், ஆட்சியாளர்களின் தயவைப் பெறுவதற்கு வேறொரு நீதியையும் கையாளும் இந்த இரட்டை நிலைப்பாடு, தமிழரசுக்கட்சி தார்மீக ரீதியாகக் கட்டியெழுப்பிய கொள்கை அடித்தளத்தையே தகர்த்து வருகிறது.தமிழ் மக்களுக்கு அதிகாரத் தலைமைகளுக்கு வசதியான ‘இணக்க அரசியல்’ அல்ல. மாறாக, உரிமைகளை உரக்கப் பேசும் உறுதியான கொள்கை அரசியலே தேவை. கட்சிக்குள்ளே ஒரு கொள்கைப் பேச்சும், அரசாங்கத் தரப்பிடம் வசதியான அனுசரணைப் போக்கும் காட்டும் தமிழரசுக்கட்சியின் இந்த “இரட்டை நிலைப்பாடு” தமிழரசின் வாக்கு வங்கியின் நம்பிக்கையை சிதைத்து வருகிறது.