சிவனு லட்சுமணன் (சிவன் லெட்சுமணன்) மலையக மண்ணுரிமைப் போராட்டத்தின் முதல் உயிர்க்கொடையாளியாகவும், மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடிய தியாகியாகவும் அறியப்படுகிறார். “சலுகை வேண்டாம், நிலவுரிமையே வேண்டும்” என்ற கொள்கையுடன், மலையக மக்கள் தமது சொந்த மண்ணிலேயே வாழ வேண்டும் என வலியுறுத்தியவர். இவ்வாறான அர்ப்பணிப்புடன் தன் இள வயதிலும் கூட அச்சமின்றி போர்க்குரல; எழுப்பிய அவரது நினைவு மலையக மண்ணில் தொடர்ச்சி கடைப்பிடிக்கப்படுகின்றத.
அந்த வகையில், கடந்த 11.05.2026 திங்களன்று டெவன் தோட்டத்தில் தியாகி சிவனு இலச்சுமணன் புதை மேட்டில் நாம் நின்றிருந்தோம்! இலச்சுமணன் விதைக்கப்பட்டிருக்கும் நிலத்தில் அவனது 49 ஆண்டுகளின் நினைவு தினத்தை கடந்த 49 ஆண்டுகளாக நினைவுப் படுத்திக்கொண்டிருக்கும் அந்த அரச மரம் கம்பீரமாக நிலைத்து நிற்கின்றது!
எங்களின் வாழ்வாதாரத்துக்கான…தேசிய இருப்புக்கான நில உரிமையைப் பெறுவதற்கு முதல் உயிரைக் காணிக்கையாக செலுத்தியவனின் நினைவு நாளில் இயற்கையும் கண்ணீரைக் கொட்டிக்கொண்டிருந்தது! நாங்களும் நனைந்துக்கொண்டிருந்தோம்….
கடும் மழையையும் தாங்கிக்கொண்டு சமூக உணர்வுமிக்க சிலரும் கலந்திருந்தனர்…. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் செயலாளர் ஜீவன் ராஜேந்திரன் இந்த வரலாற்று நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். இன்றுவரை இவர் ஒருவரே போராட்டத்தியாகி சிவனு இலச்சுமணனின் நினைவு தினத்தை நிகழ்த்தி வருபவர்.
ஒரு மலை மேட்டில் புதைமேடு இருக்கிறது. இளைஞர்கள் இடத்தைச் சுத்தம் செய்திருந்தனர்…. ஈர மண்…. ஒரே வழுக்கல்…..எளிதில் எவரும் ஏறிவிட முடியாது.! மனித சங்கிலி மூலமே எல்லோரும் மலை மேலே ஏறினோம்!. ஆயிரக்கணக்கில் அட்டைகள்! ஒரு நண்பர் அட்டை!அட்டை! என்று அலறினார். ஒரு தொழிலாளப்பெண் அலட்சியமாக….”என்னா சேர் இப்படி அலறித் துடிக்கிறீங்க! அட்டைகள் எங்கள் வாழ்க்கையில் ஓர் அங்கம் சேர்!” என்றார். எனக்கு திடீரென சிவியின் “போர்ன் றூன் லேபர்” புத்தகத்துக்கு முன்னுரை வழங்கியிருந்த எப்.டீ சில்வா அவர்களின் ஞாபகம் வந்தது! அவர் மலையகத்தில் தொழிலாளர்களைக் கடித்து இரத்தம் உறிஞ்சும் அட்டைகளின் பெயர் ‘லிஸ்ட்டை’ பதிவு பண்ணியிருந்தார்!
வெள்ளை அட்டைகள்….கறுப்பு அட்டைகள்..கங்காணி பெரட்டு அட்டைகள்…வட்டிக்கடை அட்டைகள்….அரசியல் அட்டைகள்….கடைக்கார அட்டைகள்…விசா பாஸ்போரட் அட்டைகள்.. .சிட்டிசன் சிப் அட்டைகள்…. என்பன. அவர் இன்னும் சில அட்டைகளை எழுத மறந்து விட்டார்! அவை தொழிற்சங்க அட்டைகள்….பிரதிநிதி அட்டைகள்….எம்பி அட்டைகள்…என் ஜி ஓ அட்டைகள்…!
மழை விட்டப் பாடில்லை. நனைந்த வாழ்க்கையே நமது வாழ்க்கை என்பதால்…..ஜீவன் முதலாவது பேசினார்.. பலரும் பேசினார்கள்.
இளைஞன் சிவனு இலச்சுமணன் கொல்லப்பட்ட போது அவனுக்கு வயது 18…! பகவத் சிங் கொல்லப்பட்ட போது வயது 23. நமது இளைஞன் பகத் சிங்கை முந்திக்கொண்டான்!.
இவனது 49 வது நினைவு நாள் கௌரவம் வழங்கி முடிந்ததும். … ஞாபக தூபி நாட்டப்பட்டது. ராஜேந்திரனிடம் எனது விருப்பத்தைக் கூறினேன் இலச்சுமணனுக்கு நினைவாலயம் அந்த மலையில் அமைக்க வேண்டும் என்றேன். தோட்ட நிர்வாகத்திடம் பேசியிருப்பதாகவும்…அனுமதி கிடைத்ததும்…பணம் சேகரித்து வேலையைத் தொடங்குவோம் சேர்!” என்றார். ஓர் ஒழுங்கான நினைவாலயம் அமைப்பதற்கு பத்து லட்சம் செலவாகலாம்…வேறு சமூகமென்றால் தங்கள் இனத்துக்கான சமூகக் கடைமையாக பலரும் முன் வருவர். நமது சமூகம் அரசியல்…வரலாறு… சமூகத்துக்கான உரிமைப்போராட்டம்…. என்பதெல்லாம் அறியாத சமூகம். என்ன செய்வது? எமக்கு நம்பிக்கை உண்டு…எவராவது ஒரு சமூக சிந்தனையாளன் நினைவாலயம் கட்டுவதற்கு உதவ முன்வருவான்!. அந்தநாள் நிச்சயம் வரும்.!!
நாங்கள் இலச்சுமணன் பிறந்து வளர்ந்த ஒக்ஸ்போட் தோட்டத்துக்கு சென்றோம். இருட்டி விட்டது!
எனது பக்கம் அமர்ந்திருப்பவர் சகோதரர் பூச்சி. ..வலது பக்கம் அமர்ந்திருப்பவர் சிவனு இலச்சுமணனின் சகோதரி ஜெயகுமாரி…. சகோதரர் பூச்சியும் சிவனு இலச்சுமணனும்தான் ஆற்றை நீந்திக் கடந்து டெவன் தோட்டத்தில் காணி அளக்க வந்திருந்த அரச ஊழியர்களைத் தடுப்பதற்கு போராளிகளுடன் கலந்தனர்! அவர்களது எதிர்ப்பு குரல் இதுவாகவிருந்தது! “காட்டையழித்து தேயிலை உண்டாக்கியவர்கள் நாங்கள்..! எங்களுக்கும் வாழ்விடம் கொடுத்து உங்கள் மக்களுக்கும் கொடுங்கள்.! நாங்கள் நிலமற்றவர்கள்…! நாங்கள் வீடற்றவர்கள்!” என்று குரலைத்தான் உயர்த்தினோம்! எனது அருகில் நின்ற சிவனை துப்பாக்கிக் குண்டு துளைத்தது!.நான் ஒதுங்கி நின்றேன். துடிதுடிக்கும் என் நண்பனைத் தூக்கினேன். பொலீஸ்காரன்கள் வந்து என்னை எத்தித் தள்ளிவிட்டு…இறந்து கிடந்த என் நண்பனை தர தரவென்று இழுத்துக் கொண்டு போனான்கள்! துப்பாக்கிப் பிரயோகத்தில் சிவனு விழுந்ததும் கூட்டம் கலைந்தது. அது தானா சேர்ந்தக் கூட்டம்…!தானே கலைந்து சென்றது.! திட்டமிட்டு கூடவில்லை! பூச்சி இதைப் பேசும்போது அவரது குரல் கம்மியது! அவருக்கு இப்போது வயது 72….சிவனு இருந்திருந்தால் அவனுக்கு வயது 58…!
எமது நிலத்துக்கான உரிமையும் தேசிய இருப்புக்கான உரிமையும் ஒன்றிணைந்த சமூகப்போராட்டமாக உருவாகாத வரை… இன்னும் சில நூற்றாண்டுகள் எம்மை இந்த நாடு அவமானப்படுத்திக்கொண்டே இருக்கும்!
எழுத்தாளர் முருகன் சிவலிங்கம்