இலங்கையின் முன்னைய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக தனது புதிய வரைவைத் திருத்துவதற்கு அநுர அரசாங்கம் தயார் என்பதை நிரூபிக்க வேண்டும்.

Share

அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

இலங்கையின் சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு (PTA) மாற்றீடாகக் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டு நீதியமைச்சரால் வெளியிடப்பட்ட சட்ட மூலமானது, முதற்பார்வையில் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தினால் (2018, 2023) முன்மொழியப்பட்ட சிக்கல் பொருந்திய பொதுமக்கள் பாதுகாப்பு சட்டமூலங்களின் பரந்த எண்ணக்கருவியல் சாயைகளையே பிரதிபலிக்கிறது; இருப்பினும் இதில் சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.

இது தொடர்பில் நீதியமைச்சுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கும் அதேவேளை, பொதுமக்களின் ஆலோசனைகளுக்கான அழைப்பு வெறும் கண்துடைப்பாகவும் இருக்கக்கூடாது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வர்த்தமானியில் வெளியிடப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்த வரைவைத் திருத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதை வெளிப்படுத்துவதன் மூலம் தனது நல்ல நோக்கத்தை நிரூபிக்க வேண்டும். அந்த நோக்கம் செயற்படுத்தப்படுகிறதா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

பொதுமக்களின் மீளாய்வுக்காக வெளியிடப்படுவது வரவேற்கத்தக்கது

இச்சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அதில் உள்ள வேறுபாடுகள் அச்சட்டத்தின் ஒட்டுமொத்தமான பாதகமான தாக்கத்தைக் குறைப்பதற்குப் போதுமானதாக இருக்குமா என்பதுதான் கரிசனைக்குரிய கேள்வியாகும். அந்தக் கேள்விக்கான பதிலைப் பெறுவதற்கு இந்த வரைபு குறித்த விரிவான விமர்சனம் வரும் வரை காத்திருக்க வேண்டும். இத்தருணத்தில், பயங்கரவாதக் குற்றத்தின் வரைவிலக்கணம் தொடர்பான கரிசனைகளைக் கோடிட்டுக் காட்டுவதே எமது நோக்கமாகும். நியாயமான ஐயங்களை ஏற்படுத்தும் வரைவின் ஏனைய பிரிவுகள் பின்னர் ஆராயப்படும்.

நிச்சயமாக 2025 ஆம் ஆண்டு வரைவானது விமர்சனங்கள் மற்றும் கருத்துகளுக்காக ஒரு நியாயமான கால அவகாசத்துடன் பகிரங்கமாக வெளியிடப்பட்டது பாராட்டுக்குரியது. இது தேசிய பாதுகாப்புச் சட்ட வரைவுகள் ஒரு சிலருக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டு பின்னர் அவற்றின் ஆட்சேபனைக்குரிய விடயங்கள் ‘கசிந்தபோது’ மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்திய முந்தைய அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் மாறுபட்டதாகும்.

உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை, 2025 வரைவின் நீண்ட தலைப்பு ரணில் விக்ரமசிங்கவின் தூண்டுதலால் உருவான 2023ஆம் ஆண்டின் ‘பயங்கரவாத எதிர்ப்பு வரைபுக்கு’ (ATB) முற்றிலும் சமமானது. இந்த 2025 வரைவினது குறுகிய தலைப்பு அவ்வளவு நற்சகுனமாக அமையாததோடு, ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) என அலங்கோலமாகப் பெயரிடப்பட்டுள்ளது.

முன்னுரையில் ஒரு நேர்ப்பாங்கான மாற்றம்

எவ்வாறெனினும், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தின் முன்னுரையானது ‘பொதுமக்கள் பாதுகாப்பைப் உறுதிசெய்தல்’ எனும் நலனை, சட்டவாட்சி மற்றும் ‘அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான முழுமையான மரியாதை’ ஆகிய கொள்கைகளுடன் சமநிலைப்படுத்த முயல்கிறது என்பதை நேர்மையாகக் கூற வேண்டும். தேசியப் பாதுகாப்பு விவகாரங்களை மனித உரிமைகளுடன் சமநிலைப்படுத்த வேண்டும் எனவும், ‘சர்வதேசத் தரநிலைகள் மற்றும் சரவதேச மட்டத்திலான சிறந்த நடைமுறைகளை உள்ளடக்கியிருக்க வேண்டும்’ எனவும் 2023 பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மீளாய்வு செய்தபோது உயர்நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டலை இது பிரதிபலிக்கிறது (விசேட உயர் நீதிமன்றத் தீர்ப்பு, 2024).

அதற்கமைய, 2023ஆம் ஆண்டின் பயங்கரவாத எதிர்ப்பு வரைவு மற்றும் 2018 ஆம் ஆண்டின் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்ட வரைவு (CTA) போன்று அல்லாது, முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலமானது அதன் பிரிவுகளை நடைமுறைப்படுத்தும்போது, ‘சர்வதேச மனித உரிமைகள் சாசனங்களின் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட சுதந்திரத்துக்கான உரிமை, தனிநபர் பாதுகாப்பு, நியாயமான விசாரணை மற்றும் தன்னிச்சையான தடுத்து வைத்தலுக்கு எதிரான உரிமை’ ஆகியவற்றை ஏற்றுக்கொள்கிறது.

பின்னர் வரக்கூடிய சட்ட ஏற்பாடுகளின் பொருள்கோடல்களில் இந்த முன்னுரையானது வகிக்கும் முக்கிய பங்கைக் கருத்திற் கொள்ளும்போது இந்த வேறுபாடு முக்கியமானதாகக் காணப்படுகிறது.

உள்ளடக்கம் சார்ந்து நோக்கும்போது, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தின் 3 (1) உபபிரிவானது, நான்கு இலக்குகளை அடைவதற்கான ‘நோக்கத்துக்காக’, ‘ஆளொருவரால்’ வேண்டுமென்றே அல்லது தெரிந்தே செய்யப்படும் ‘விளைவை ஏற்படுத்தவல்ல எந்தவொரு செயலையும்’ பயங்கரவாதக் குற்றம் என வரைவிலக்கணப் படுத்துகிறது (விளைவு என்ற சொல் பின்னர் பிரிவு 3 (2) இல் விளக்கப்பட்டுள்ளது). இந்த நான்கு இலக்குகளில் மூன்று ஏற்கனவே பரீட்சயமானவை; ஆனால் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலமானது ‘பயங்கரவாத நிலைமையைத் தூண்டுதல்’ என்ற நான்காவது அம்சத்தைப் புதிதாகச் சேர்த்துள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளை வரையறை செய்தல்

குற்றத்தின் ‘மனநிலை’ என்ற கூறினை வரையறுக்கும்போது ‘என்ற எண்ணத்துடன்’ என்பதற்குப் பதிலாக ‘என்ற நோக்கத்துக்காக’ என்பதைச் சேர்த்திருப்பது மிகவும் குழப்பகரமானது. ‘நோக்கம்’ என்ற சொல் ஒரு குறிப்பிட்ட செயலின் பின்னாலுள்ள ஊக்கத்தைக் குறிக்கிறது எனச் சிலர் வாதிடலாம். ஆனால் இத்தகைய சந்தர்ப்பங்களில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘எண்ணம்’ என்ற சொல்லை ஏன் தவிர்த்துள்ளனர் என்ற கேள்வி எழுகிறது. ‘நோக்கம்’ என்ற சொல்லின் விரிவான மற்றும் பொதுவான பயன்பாடு, குற்றத்தை நிரூபிப்பதற்கான தரத்தை கணிசமாகக் குறைத்துவிடக்கூடுமோ என்கிற நியாயமான ஐயத்தை ஏற்படுத்துகிறது.

இங்குள்ள முக்கிய பிரச்சினை என்னவென்றால், 3 (2) உபபிரிவில் தடைசெய்யப்பட்ட ‘விளைவை’ ஏற்படுத்தும் எந்தவொரு செயலைச் செய்யும்போதும் ஒரு நபர் ‘பயங்கரவாத’ எண்ணத்தைக் கொண்டிருந்தாரா என்பதைத் தீர்மானிப்பதாகும். இது வெறுமனே சட்டக் கலைச்சொற்கள் குறித்த விவாதம் அல்ல, மாறாக குற்றத்துக்கான வரைவிலக்கணத்தின் அடிப்படையுடன் தொடர்புடையது. இலங்கையின் சகல பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களிலும் வரைவுகளிலும் உள்ள முதன்மையான ஒரு பிரச்சினை என்னவென்றால், சாதாரண குற்றவியல் குற்றங்களுக்கும் ‘பயங்கரவாத’ குற்றங்கள் என வகைப்படுத்தப்படும் குற்றங்களுக்கும் இடையே ஒரு தெளிவான பிரித்தற்கோடு இல்லாமை ஆகும்.

இந்தக் குறைபாடானது குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திலும் தொடர்ச்சியான அவசரகால விதிமுறைகளிலும் பிரதிபலிக்கிறது. இது புலனாய்வு நடவடிக்கைகளின் நோக்கத்தையே குழப்பமடையச் செய்கிறது. இதன் விளைவாக, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிறையில் அடைக்கப்பட்டு, தன்னிச்சையான கைது மற்றும் தடுத்து வைத்தல்களுக்கு எதிரான சாதாரண சட்டப் பாதுகாப்புகள் அவர்களுக்குப் பொருந்தாமல் போயுள்ளன. இந்த நூற்றுக்கணக்கானவர்களில் எத்தனை பேருக்குத் தமது அரசியலமைப்பு உரிமை மீறல்கள் குறித்து வாதாடுவதற்கு சட்டத்தரணிகளை அமர்த்தும் வசதியும் செல்வாக்கும் இருந்திருக்கும்?

கோட்பாட்டிலும் பிரயோகத்திலும் சட்டத்தின் நிலை

அத்தகைய வழக்குகள் வாதிடப்பட்டு அரசியலமைப்பு உறுதிப்படுத்தும் பாதுகாப்பின் மிகச்சிறந்த கொள்கைகள் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பின்னரும் அவை எந்த அளவுக்கு மதிக்கப்பட்டுள்ளன? 1970களின் பயங்கரவாதத் தடைச் சட்டம் முதல், தெற்கு முதல் வடக்கு வரை மோதல்கள் உக்கிரமடைந்த காலத்திலும் கூட இலங்கையின் உயர்நீதிமன்றத்தினால் தனிமனித உரிமைகளைப் பாதுகாக்கும் தர்க்கரீதியான நீதித்துறைத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இது அரசின் நடைமுறை மற்றும் கொள்கையில் எவ்வகையான நடைமுறைரீதியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தில், ‘பயங்கரவாத நிலைமையைத் தூண்டும்’ நோக்கத்துடன் செயலில் ஈடுபடுவதைத் தடுத்தல் என்பதைத் தவிர, அந்த வரைவிலக்கணத்தின் மற்றொரு அம்சம் ‘பொதுமக்களை அல்லது பொதுமக்களின் ஒரு பகுதியை அச்சுறுத்துதல்’ என்ற பரிச்சயமான மொழியினை உள்ளடக்கியுள்ளது. மீதமுள்ள அம்சங்களும் பரிச்சயமானவையே. அவை ‘இலங்கை அரசாங்கம், அல்லது வேறேதேனும் ஓர் அரசாங்கம் அல்லது ஒரு சர்வதேச அமைப்பை ஏதேனும் ஒரு செயலைச் செய்யும்படி அல்லது செய்யாமல் தவிர்க்கும்படி கட்டாயப்படுத்துதல்’ எனும் விடயத்துடன் தொடர்புடையவை.

அதேபோன்று ‘யுத்தத்தைப் பரப்புதல் அல்லது பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுதல் அல்லது தேசிய இறையாண்மையை மீறுதல் போன்றவை’ தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றை எவரும் குறை கூற முடியாது. ஆனால் பிரிவு 3 (2) இல் குறிப்பிடப்பட்டுள்ள ‘விளைவுகள்’ குறித்து நோக்கும்போதுதான் சிக்கல் எழுகிறது. இதனை பிரிவு 3 (1)இல் உள்ள ‘நோக்கத்துடன்’ இணைத்து வாசிக்க வேண்டும். இந்த ‘விளைவுகளின்’ நீண்ட பட்டியல் அப்படியே 2023 பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தைப் பிரதிபலிக்கிறது. ‘பொதுப் பயன்பாட்டு இடத்திற்கு, பொதுச் சொத்துகளுக்கு, பொது அல்லது தனியார் போக்குவரத்து அமைப்புக்கு அல்லது ஏதேனும் உட்கட்டமைப்பு வசதி அல்லது சுற்றுச் சூழலுக்குப் பாரிய சேதத்தை விளைவித்தல்’ (பிரிவு 3 (2)(e)) இதற்கு ஓர் உதாரணமாகும்.

ஒரு ‘பிரதி செய்து ஒட்டும்’ செயற்பாடு

மற்றொரு உதாரணம், ‘பொதுமக்களின் அல்லது அதன் ஒரு பிரிவினரின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு பாரிய சேதத்தை விளைவிப்பதை’ ஒரு பயங்கரவாதச் செயலாக வரையறுக்கும் பிரிவு 3 (2) (g) ஆகும். இப்பிரிவின் ஆபத்துகள் குறித்து எழுதிய நான், “நியாயமான தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கூட அரசாங்கத்தை ஒரு செயலைச் செய்யும்படி அல்லது செய்யாமல் தவிர்க்கும்படி கட்டாயப்படுத்தும் நோக்கில் பொதுச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு ‘பாரிய சேதத்தை’ விளைவிக்கும் செயல்கள் என அச்சுறுத்தலாகக் கருத முடியும்” எனக் குறிப்பிட்டிருந்தேன்.

மேலும், சாதாரண குற்றவியல் தடைகளின் கீழ் வரக்கூடிய நடத்தைக்கும் ‘பயங்கரவாத’ செயல்களுக்கும் இடையில் அதீதமான ஒற்றுமையை பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் புலப்படுத்துகிறது எனவும், ஊடகங்களை இலக்கு வைப்பதானது பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் வேறு நோக்கங்களுக்காகவே முன்வைக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது எனவும் ஏற்கனவே கூறப்பட்டது. இந்தக் கரிசனைகள் இப்போதும் நீடிக்கின்றன. 2025ஆம் ஆண்டின் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலமானது 2023ஆம் ஆண்டின் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை அப்பட்டமான ‘பிரதி செய்து ஒட்டும்’ ஒரு வேலையாகும்; பிரிவு 3 (2) இன் இலக்கங்கள் கூட மாறறப்படாமல் அப்படியே வைக்கப்பட்டுள்ளன.

“ஏதேனும் போராட்டம், ஆதரவு திரட்டல் அல்லது கருத்து வேறுபாடு அல்லது வேலைநிறுத்தம், கதவடைப்பு அல்லது ஏனைய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது, பிரிவு 3 (2)இன் வரம்புக்குள் கொண்டு வருவதற்கான தானாகவே போதுமான அடிப்படையாக அமையாது” எனும் ஒரு விதிவிலக்கினை பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் வழங்குவது அன்றைக்கும் இன்றைக்கும் இடையிலான வேறுபாடு ஆகும். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்ததுக்கு பதிலளிக்கும் விதமாக உயர்நீதிமன்றம் இத்தகைய ‘விதிவிலக்கு’ ஒன்றின் அவசியத்தைச் சுட்டிக்காட்டியதற்கமையவே இது சேர்க்கப்பட்டுள்ளது.

மலையும் எலியும்

பல மாத கால உழைப்புக்குப் பிறகு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எனும் பெரிய மலையிலிருந்து ரணில் விக்ரமசிங்கவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எனும் சிறிய சுண்டெலிதான் பிரசவிக்கப்பட்டதா? இன்று அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது இந்தப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவே போராடினர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. உண்மையில் அந்த ‘துணிச்சல் மிக்க புதிய உலகம்’ எங்கே?

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>