ஈழத்து மூத்த படைப்பாளியும், இனிய நண்பருமான தி.ஞானசேகரன் அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்தது (12-4-26) ஈழத்தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும்.
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனில் பிறந்த இவர் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்தார். ஆயுள்வேத வைத்தியரான இவர், இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் என்ற மாதாந்த இதழின் முதன்மையாசிரியராகப் பணியாற்றினார். இலக்கியத்திற்காக சாகித்யரத்னா விருது பெற்றவர். ஈழத்து எழுத்தாளர்களின் ஆக்கங்களை மட்டுமல்ல, புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களையும் வெளியிட்டு அவர்களின் இலக்கிய ஆளுமையை உலகறியச் செய்தவர்.
திரு ஞானசேகரன், திருமதி ஞானம் ஆகியோர் கனடா நாட்டுக்கு வருகை தந்தபோது, அவர்களுடன் பல சந்தர்ப்பங்களில் சந்தித்து உரையாடும்’ சந்தர்ப்பம் எனக்கு கிட்டியது . எங்கள் அழைப்பை ஏற்று கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்குபற்றி இருந்தார்கள். உதயன் பத்திரிகைக்காக அவரை ஒரு நேர்காணலுக்கும் அவர் விருப்பத்தோடு ஒப்புக்கொண்டார்.
‘தமிழ் நாட்டில் என்னை அறிந்த அளவிற்கு ஈழத்து வாசகர்கள் என்னை அறிந்திருக்கவில்லை’ என்று என்னோடு தன் கருத்தைப் பகிர்ந்து கொண்டு, எனது ஆக்கங்களை இலங்கையில் அறிமுகம் செய்ய வேண்டும் என்று என்னை ஒருமுறை அழைத்திருந்தார் ஞானசேகரன் அவர்கள்.
ஞானம் இலக்கியப் பண்ணை சார்பாக கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் விழா ஒன்றை ஏற்பாடு செய்து, எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், அறிஞர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் எனது இரண்டு நூல்களையும் வெளியிட்டு, ‘கதாவித்தகன்’ என்ற பட்டமும் எனக்கு அளித்தார்கள்.
தன்னலமற்று இலக்கிய படைப்பாளிகள் அனைவரையும் இனம்கண்டு, அவர்களை அணைத்துப் பணியாற்றிய இவரது இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்கு பெரிய இழப்பாகும். அன்னாரது ஆத்மா சாந்தியடைய, அவரது குடும்பத்தினருடன் இணைந்து இறைவனை வேண்டிப் பிரார்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! – குரு அரவிந்தன். கனடா