டித்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 600க்கும் மேற்பட்டவர்களில் எத்தனை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளனர் என்பது குறித்து இன்னும் துல்லியமான தகவல்கள் இல்லை எனக் கூறும் நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம், இது தொடர்பாக அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் அளித்த புள்ளிவிபரங்களுக்கு இடையே இலட்சக்கணக்கான வித்தியாசம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
“இந்தப் பேரழிவு ஏற்பட்டு ஒரு வாரம் ஆகிறது. ஏற்கனவே துல்லியமான தகவல்கள் எதுவும் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். எத்தனை ஆசிரியர்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர்? அல்லது எத்தனை சிறுவர்கள்? இது இன்னும் கணக்கிடப்பட்டு வருகிறது. இன்னும் இறுதி எண்ணிக்கை இல்லை,” என, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பேரழிவால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்பாக யுனிசெப்பின் புள்ளிவிவரங்களுக்கும் கல்வி அமைச்சிக்கும் இடையே இலட்சக்கணக்கான வித்தியாசம் இருப்பதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய தொழிற்சங்கத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இந்த சம்பவம் நடந்தவுடன், இலங்கையில் 275,000 சிறுவர்கள் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் தெரிவித்தது. இருப்பினும், கல்வி அமைச்சின் செயலாளர் ஊடகங்களுக்கு சுமார் 100,000 சிறுவர்கள் மாத்திரமே பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.”
பேரழிவால் பாதிக்கப்பட்ட 1.4 மில்லியன் மக்களில் 275,000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இருப்பதாக டிசம்பர் தொடக்கத்தில் எச்சரித்த இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியது.
கல்வி அமைச்சின் கீழ் செயல்படுத்தப்படும் சுரக்சா காப்புறுதித் திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு எவ்வாறான நிவாரணம் வழங்கப்படுகிறது என்பதை விளக்குமாறு மூத்த ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கல்வி அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.
“எவ்வாறெனினும், கல்வி அமைச்சின் தரப்பை எடுத்துக் கொண்டால், இப்போது இந்த சிறுவர்களின் தரப்பிலிருந்து, ஜனாதிபதி நிதியிலிருந்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது மொத்தத் தொகை அதுதான். சிறுவர்களுக்கு ஒரு சுரக்சா காப்புறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை நாம் அறிவோம். கல்வி அமைச்சின் கீழ் தான் சுரக்சா காப்புறுதி செயல்படுத்தப்படுகிறது. இப்போது, சுரக்சா காப்புறுதியின் ஊடாக இந்த பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் குறித்து இதுவரை எந்த தெளிவுபடுத்தலும் இல்லை.”