முழு இலங்கையையும் பரிபாலனம் செய்யவும், அந்த தேசத்தின் பொருளாதாரம் வீழ்ச்சியடையாமல் இருக்கத் தேவையான முன்னேற்பாடுகள் அல்லது நடவடிக்கைகள் ஆகியவற்றை கவனிப்பதற்கும் மற்றும் பல ஆட்சி முறைகளை நேர்மையாக கடைப்பிடிக்கவுமே ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுக்கு மேலாக அமைச்சர்களும் அதிகாரிகளும் தேர்ந்தெடுக்கப்பெற்றும் நியமனங்களைப் பெற்றும் தங்கள் பணிகளை ஆரம்பிக்கின்றார்கள்.
இலங்கையின் ஒன்பது மாகாணங்களைச் சேர்ந்த 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த பாராளுமன்றத்தை அலங்கரிக்கின்றார்கள். அவர்களில் பெரும்பான்மையினரான சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என வெவ்வேறு கட்சிகளிலிருந்து தேர்நதெடுக்கப்பெற்று ஜனநாயக முறையில் எவ்வாறு தேர்தல் நடத்தப்பெறுகின்றதோ அதே போன்று பாராளுமன்றமும் இயங்கவேண்டுமென்ற எதிர்பார்ப்போடுதான். வாக்காளப் பெருமக்கள் அங்கத்தவர்களைத் தேர்ந்தெடுத்து வருகின்றார்கள்.
இவ்வாறான அரசியல்வாதிகளில் தமிழ் பேசும் மக்களது பாராளுமன்ற உறுப்பினர்களும் இஸ்லாமிய மக்கள் அனுப்பிவைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சிங்கள மக்கள் தேர்தெடுத்து அனுப்புபவர்களை விட பொறுப்புக்கள் அதிகம் உள்ளவர்கள் என்று எதிர்பார்க்கும் விடயம் நீதியின் அடிப்படையில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதே!
இவ்வாறாக இலங்கையின் பாராளுமன்ற அரசியலில் 70 ஆண்டுகளுக்கு மேலாக நாம் மேற்குறிப்பிட்ட சிறுபான்மை இன மக்களும் அவர்களுக்குள் அடங்கும் மலையக மக்களும் அவர்கள் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களாலும் அரசியல் தலைவர்களாலும் வஞ்சிக்கட்டுள்ளார்கள் என்பதே கடந்த காலம் தொடக்கம் இன்றுவரையும் மறைமுகமாக மேற்கொள்ளப்பெறும் ஒரு விடயம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள் அத்துடன் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்க முடியாது.
குறிப்பாக மலையக மக்களைப் பொறுத்தளவில் தோட்டத் தொழிலாளர்களின் சந்தாப் பணத்தில் தங்களை வளர்த்துக் கொண்டவர்கள் பின்னர் அரசியல் பதவிகைளயும் அவர்களது வாக்குகள் மூலமாகப் பெற்றுக்கொண்டு தங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு எவ்விதமான விடிவையும் தேடித்தராமல் தங்களை செல்வந்தர் என்ற நிலைக்கு கொண்டு வருவற்கு முயற்சித்தார்கள். அவ்வாறு அவர்கள் பொருளாதார ரீதியாகவும் அரசியல் பலம் பெற்றவர்களாகவும் வாழ்க்கை உயர்ந்தபடியால் அவ்வாறான பதவிகள் தங்கள் குடும்பத்தோடு தொடர்ச்சியாக வாரிசுக்கள் என்ற அடிப்படையில் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார்கள் . இதற்கு உதாரணமாக சௌயமூர்த்தி தொண்டமான், அவரைத் தொடர்ந்து ஆறுமுகம் தொண்டமான் பின்னர் செந்தில் தொண்டமான் ஜீவன் தொண்டமான் என பரம்பரை அரசியல் தொடர்ந்தாலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித விடிவும் ஏற்படவில்லை. உதாரணமாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்விற்காகப் போராடுகின்றோம் என்று வெளியில் அறிக்கைகளை விடுபவர்கள் தோட்ட முதலாளிமாரிடமிருந்து ‘சன்மானங்களைப்’ பெற்றுக் கொண்டு தொழிலாளர்களுக்கு ‘துரோகம்’ இழைத்தவர்களாக மாறிவிடுகின்றனர். இதைப் புரிந்து கொண்டாலும் மாற்றுவழி இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் வாய் மூடியவண்ணம் மௌமாக இருந்துவிடுவார்கள். ஆனால் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நடுத்தர குடும்பங்களைச் சார்ந்த தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்வதால் ஏமாற்று அரசியல் செய்தவர்கள் அமைதியாக இருப்பதுபோல காட்டிக் கொண்டாலும் பழைய இடத்திற்கு வருவதற்கான ஆயத்தங்களை செய்வதில் ஆர்வம் காட்டியவர்களாகவே உள்ளார்கள்.
இதே போன்று இஸ்லாமிய மக்கள் தேர்ந்தெடுத்த பல அரசியல்வாதிகள் ஆரம்பத்தில் கொழும்புத் தலைநகரில் வாழுகின்றவர்களாகவே இருந்தார்கள். ‘கொழும்புத் தலைமைகள்’ என்று அடையாளமிடப்படட அவர்கள் கொழும்பிலுள்ள இஸ்லாமிய முதலாளிகளுக்கு சலுகைகளையும் உதவிகளையும் செய்து அவர்களிடமிருந்து பெரும் நிதியினால் செல்வந்தர்களாகவே வாழ்ந்து மடிந்தார்கள். அனால் சாதாரண மத்தியதர மற்றும் ஏழை இஸ்லாமியர் வஞ்சிக்கப்பட்டவர்களாகவே தொடர்ந்தும் உள்ளார்கள்.
உதாரணமாக ரவூப் ஹக்கீம் போன்றவர்கள் கொழும்பில் எந்தக் கட்சி வந்தாலும் அமைச்சர் பதவிகளைப் பெறுவற்காக மக்களுக்கு பொய் வாக்குறுதிகளையும் வழங்கி தங்கள் ‘சுகபோக’ வாழ்க்கையை மாறி மாறி வரும் அரசாங்கங்களின் வாயிலாக தொடர்வதற்கான வழிகளை ஏற்படுத்திக்கொள்வார்கள். இதில் குறிப்பாக ரவூப் ஹக்கீம் போன்றவர்கள் அவர்களது சொந்த மக்கள் மத்தியில் பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி தலை குனிந்தவர்களாகவே தற்போதும் அவர்களது அரசியல் பயணம் தொடர்கின்றது. சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு தங்கள் உரைகளையும் அறிக்கைகளையும் மக்களிடத்தில் காட்டி ‘பிழைத்துக் கொள்ளத் தெரிந்தவர்கள் அவர்கள்.
இவ்வாறு வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவம் செய்பவர்களும் இவர்களுக்கு விதி விலக்கானவர்கள் அல்ல. அவர்களில் பலர் ஆளும் கட்சிகளோடு மறைமுகமான ‘உறவுகளை’ வைத்துக்கொண்டு தங்கள் சொந்த நலன் மற்றும் சொந்தக்காரர்களின் வாழ்க்கையை மேம்படுத்துதல் போன்றவற்றில் மிகுந்த கவனத்துடன் அரசியல் பதவிகளை பயன்படுத்தினார்கள்.
இவ்வாறு அவர்களது பாராளுமன்ற அரசியல் பயணம் அவர்களுக்கு ‘பயனுள்ளதாக அமைந்து விட அதில் மூழ்கிப்போயிருந்தார்கள். பல கட்சிகளாக பிரிந்து நின்று தமிழ் மக்களையும் பிரிந்தாளும் தந்திரத்துடன் தங்கள் அரசியல் ‘வியாபாரத்தை’ கச்சிதமாகச் செய்தார்கள்.
இவ்வாறான காலப்பகுதியில் அதாவது 1975ம் ஆண்டளவில் தமிழ் .இளைஞர் பேரவை என்னும் இளைஞர் அமைப்பு உருவானபோது சந்று தடுமாறிய எமது பாராளுமன்ற அரசியலை விரும்பியிருந்த தமிழ் அரசியல்வாதிகள் அவர்களைப் பகைத்துக்கொள்ளாமல் அவர்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தினாலும் முக்கியமான இளைஞர் தலைவர்களை தங்கள் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தத் தொடங்கினார்கள். அந்த தந்திரமான செய்ற்பாடுகளிலும் அவர் நன்மையடைந்தார்கள். ஆனால் 1980ம் ஆண்டளவில் ஆயுதம் தாங்கிய போராட்டமே எமது தமிழ் மக்களின் முழுமையான விடுதலையாகவும் அத்துடன் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்படி தமிழீழக்கோரிக்கையானது வெறும் பேச்சளவில் இல்லாமல் செயலளவில் சாதிக்க. ஆயுதப் போராட்டம் மூலம் எமக்குரிய ‘தமிழர் தாயகத்தை’ அடைந்திடுவோம் என்ற கோசத்தோடு வே. பிரபாகரன் , குட்டிமணி. தங்கத்துரை போன்றவர்கள் தங்களை வெளிக்காட்டியபோது பாராளுமன்ற அரசியல் செய்து ;சுகபோகங்களை’ அனுபவித்தவர்கள் ‘ஆடிப் போனார்கள்’.
அன்றைய சூழ்நிலையில் இளைஞர்களின் எழுச்சியை வரவேற்பது போலவும் அறிக்கைகளை வெளியிட்டும் உண்மையான ஆதரவைக் காட்டுவது போல செயற்பட்டாலும் எமது தமிழர் தலைவர்களுக்கோ அன்றி மாவை சேனாதிராஜா போன்ற ‘பாராளுமன்ற விரும்பிகளுக்கோ’ ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சியை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு அவர்களின் மனநிலை இருக்கவில்லை. அதனால் அவர்கள் தங்கள் குடும்பத்தோடு தமிழ்நாட்டுக்குச் சென்று தஞ்சமடைந்தார்கள். அவர்கள்மீது அனுதாபம் கொண்ட தமிழகத் தலைவர்களான கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் நெடுமாறன் போன்றவர்கள் ஆதரவாகச் செயற்பட்டார்கள். அத்துடன் சலுகைளையும் வழங்கினார்கள். இதனால் மாவை சேனாதிராஜா மற்றும் காசி ஆனந்தன் போன்றவர்களின் குடும்பங்கள் தமிழ்நாட்டில் தங்களுக்கான சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களாக தற்போது உள்ளார்கள்
எனினும் ஒரு பக்கம் இளைஞர் இயக்கங்களின் தீவிரவாதப் போராட்டம் பல்வேறு நெருக்கடிகளுக்குள் வளர்ந்து செல்ல எமது பாராளுமன்ற விரும்பிகள் அதை விரும்பாவிட்டாலும். தங்கள் விடயத்தில் கவனமாக இருந்தார்கள். இறுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ பலமும் அவர்களது இருப்பும் உலகநாடுகளின் உதவியோடு தகர்க்கப்படும் வரையில் பாராளுமன்ற அரசியல் செய்த தலைவர்கள் ‘காத்திருந்தார்கள்’. 2009இல் வன்னியில் மக்கள் கொல்லப்பட்ட போதும் முகாம்களில் மக்கள் அடைக்கப்பட்டிருந்த போதும் ஆயிரக்கணக்கான விடுதலைப் புலி போராளிகள் கொல்லப்பட்டும் சிறை பிடிக்கப்பட்டும் விடுதலைப் போராட்டம் பூச்சியத்திற்கு சென்ற பின்னர் எவ்விதமான தயக்கமும் கவலையுமின்றி மீண்டும் தென்னிலங்கை அரசியல்வாதிகளோடு சமரசங்களைச் செய்து கொண்டு தங்கள் பாராளுமன்றப் பதவிகள் மூலம் நிம்மதியான வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள்.
இவ்வாறான அரசியல் ஓட்டத்தில். இறுதியாக எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற எமது சம்பந்தர் ஐயா கூட அந்தப் பதவியை இழந்த பின்னரும் அரச மாளிகையில் வாழ்வதற்கு மகிந்தா-கோட்டாபாய மற்றும் ரணில் ஆகியோரால் அனுமதிக்கப்பெற்றார்.
அதற்கு காரணம் பல தடவைகள் மேற்படி தலைவர்கள் மீது பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்களின் போது அவர்களைத் தப்பிக்க வைக்க பலருக்கு ‘சன்மானங்கள்’ வழங்கப்பெற்றன. இவ்வாறு சம்பந்தர் ஐயாவின் வழிகாட்டலில் வாக்களித்த ஏனைய தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களகளது பொருளாதார நிலை உயர்ந்து அவர்களும் செல்வந்தர்கள் என்ற வளமிக்க வகுப்பினராக மாறிவிட்டார்கள்.
இவ்வாறு அடுக்கிக் கொண்டே சென்றால் பலரது உண்மையான முகங்கள்; வெளியே காட்டப்பட வேண்டிய நிலை தோன்றும்.
தற்போது பல தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது முன் வைக்கப்படும் ‘மதுபான நிலைய லைசன்ஸ்’ விவகாரம் என்பது சுமார் 60 வருடங்களுக்கு முன்னரே எமது அன்றைய அரசியல்வாதிகளால் கையாளப்பட்ட விடயமாகும். அவர்கள் தங்கள் உறவினர்களுக்கும் பணம் தரக்கூடிய நண்பர்களுக்கும் அவ்வாறான லைசன்களைப் பெற்றுக் கொடுத்தார்கள். அந்த வியாபாரங்கள் தற்போது பரம்பரைபரம்பரையாகத் தொடர்கின்றன.
இதே போன்று அண்மையில் இலங்கைக்கான புதிய கனடியத் தூதுவரை தம்மிச்சையாகச் சந்தித்த சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள் தற்கால அரசியலில் பல குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களாக அறியப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் ‘ஆடாமலும் அசையாமலும்’ தங்கள் காய்களை நகர்த்திச் செல்ல முயலுகின்றார்கள். இவ்வாறானவர்களையும் இன்னும் இவர்கள் போன்ற இன்னும் பலரையும் வடக்கு கிழக்கு அரசியலிருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்வது நியாயத்தைத் தேடும் ஊடகங்களினதும் தனி நபர்களினதும் முக்கிய பணி என்பதை நாம் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகின்றோம்.! அதே போன்று மலையகத்தில் திகாம்பரம் மற்றும் ராதாகிருஸ்ணன் போன்றவர்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளில் ரவுப் ஹக்கீம் போன்றவர்களும் மேலும் பலரும் ‘பிழைக்கத் தெரிந்தவர்களாக’ பாராளுமன்ற அரசியலையும் மாகாணசபை அரசியலையும் தங்களுக்காகவும் அடுத்ததாக உள்ள உள்ளாட்சி மன்றங்களின் அரசியல் பதவிகளை தங்கள் சகாக்களுக்கு வழங்கும் வகையிலான தந்திரமான அரசியலை தொடர்வதில் கண்ணும் கருத்துமாக உள்ளார்கள். இவ்வாறானவர்களுக்கு அனைத்து இனங்கள் சார்ந்த மக்களும் அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி கல்வித் தகைமை கொண்ட இளைஞர்களிலிருந்து சமூக அக்கறை கொண்டவர்களை ஒரு ‘சேவை அரசியலுக்குள்’ உள்வாங்க முனையவேண்டும். அதற்காக இயக்கமாக இணைந்து செயலாற்ற வேண்டும்.!
யாழ்ப்பாணத்திலிருந்து விசாகன்