கனடா-இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தின் 13வது ஆண்டு விழாவில் தனக்குரிய வர்த்தக மேம்பாட்டு விருதினைப் பெற்றுக்கொண்ட பின்னர் உரையாற்றுகையில் கனடியத் தமிழர் வர்த்தக முன்னோடி கணேசன் சுகுமார் தெரிவிப்பு!
“இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தைப் போன்ற ஓரு பல நோக்கங்கள் கொண்ட அமைப்பை ஆரம்பிப்பதிலும் பார்க்க அதை உறுதியுடனும் நம்பிக்கைகளுடன் தொடர்ந்து இயக்குவதே பாராட்டுக்குரியது. பல அமைப்புக்களின் கடந்த பல வருடங்களாக இணைந்து பணியாற்றி வருகின்றவன் என்ற வகையில் எனது நம்பிக்கை எதுவென்றால் சங்கம் ஒன்றின் அங்கத்தவர்கள் மற்றும் நிர்வாக சபையினருக்கு இடையில் எப்போதும் உறவுகள் சீராக இருப்பது நிச்சயமான ஒன்றல்ல. எனினும் அவர்களுக்கிடையே ஏற்படும் உள்ளக முரண்பாடுகள், நிதி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் ஏனைய முறைப்பாடுகள் என்பவற்றை கலந்துரையாடி சுயவிமர்சனம் செய்து தீர்த்து வைத்து பின்னர் சங்கத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு உழைப்பதே எமது கடமையாகும். இவற்றை நோக்கும் போது உங்களது இந்த “இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தின்’ வளர்ச்சியையும் ஆற்றும் பணிகளையும் பார்க்கும் போது நான் பூரண திருப்தியடைகின்றேன். எனவே தான் எனக்கு அளிக்கப்பெற்ற கௌரவத்தை பெறுவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
மேலும். உங்கள் வர்த்தகர்கள் சங்கமான இனிவரும் காலங்களில் எமது தமிழ் சமூகத்தின் இளையவர்களை உள்வாங்கி அவர்களுக்கு உங்களது வர்த்தக அனுபவங்கள் மற்றும் வெற்றிகளைப் போதித்து அவர்களை உயரத்திற்கு கொண்டு சென்றால்தான் எமது சமூகமும் வளர்ச்சியடையும். இதைக் கருத்தில் கொண்டு தங்களது எதிர்காலப் பணிகள் தொடர வேண்டும் என வாழ்த்தியும் நன்றி கூறியும் விடைபெறுகின்றேன்”
இவ்வாறு கடந்த சனிக்கிழமை 27-12-2025 அன்று கனடா ஸ்காபுறோ கொன்வென்சன் விழா மண்டபத்தில் நடைபெற்ற சங்கத்தின் 13வது ஆண்டு விழாவும் விருதுகள் வழங்கும் வைபவத்திலும் உரையாற்றிய விருதாளர்களில் ஒருவரும் பல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளருமான கணேசன் சுகுமார் தெரிவித்தார்.
முன்னர் குறிப்பிட்டது போன்று கனடா இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கம் தனது 13வது ஆண்டு விழாவை மிகச் சிறப்பாகஅன்று ஏற்பாடு செய்திருந்ததை கலந்து கொண்ட அனைவரும் பாராட்டிச் சென்றனர். அத்துடன் முக்கிய விருதுகளை தமதாக்கிக் கொண்டு புளாங்கிதம் அடைந்த விருதாளர்கள் எழுவரும் மன நிறைவுடன் அங்கு காணப்பெற்றனர் என்றால; அது மிகையாகாது.
விழாவிற்கு சங்கத்தின் தற்போதைய தலைவரான சோம. சச்சிதானந்தம் அவர்கள் தலைமை தாங்க பிரதம விருந்தினராக கல்வியாளரும் வர்த்தக சமூகத்தைச் சார்ந்தவருமான சி. கனகலிங்கம் அவர்கள் அழைக்கப்பெற்றிருந்தார்.
மேலும் இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களான திருவாளர்கள் செ. கிருஸ்ணகோபால்- கேதா நடராஜா-அருண் குலசிங்கம்-மு. அரியராஜா- இ. விஜயகுமாரன்- கருணாகரன் மற்றும் பாஸ்டர் சோதி செல்லா உட்பட பலர் இவ்வருட விழா வெற்றிகரமாக நடைபெற தங்கள் பங்களிப்பை வழங்கியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வருடத்தின் விழாவிற்கு பிரதான அனுசரணையாளர்களாக ஸ்காபுறோ விஜயா யுவல்லறி ஸ்தாபனத்தார் விளங்கினார்கள்.அத்துடன் நிறுவனத்தின் சார்பில் பலர் அழகிய சீருடைகளுடன் கலந்து கொண்டவை சிறப்புக்குரியதாகும்.
இவ்வருடத்தின் விழா வர்த்தகச் சாதனைகளையும் சமூக அக்கறையையும் ஒன்றிணைத்த ஒரு நிகழ்வாக அமைந்திருந்தது.
வர்த்தகத்துறையில் சாதனை படைத்த ஏழு பேருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தனர். தனிநபர் வெற்றியை சமூக மதிப்பாக மாற்றும் முயற்சியாக இந்த விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
விருதுகள் வழங்கல் என்ற நோக்கத்திற்கு அப்பால் மேலும் சில முக்கிய அம்சங்களும் இந்த விழாவில் அடங்கியிருந்தமை பாராட்டுக்குரியது ஆகும். இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் 10 குடும்பங்களுக்கு அவர்களது வாழ்க்கையை ஒரளவு வசதியாகக் கொண்டு செல்ல உதவும் திட்டத்தின் அடிப்படையில் மேலும் ஏழு அன்பர்கள் தாமாக முன்வந்து பங்களத்த காரணத்தால் மேடையில் கௌரவிக்கப்பெற்றனர்
இவ்வருடத்தின் இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கம் கனடா நடத்திய தனது 13 வது ஆண்டு விழாவினூடாக சமூக நோக்கம் கொண்ட தனது பாதையில் தொடர்ந்தும் செயற்படுவதை கண்கூடாக காண முடிந்தது என்ற திருப்தியும் விழாவில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் தோன்றியது.
இவ்வருடத்தின விருதுகளைப் பெற்றுக் கொண்டவர்கள் அனைவரும் கனடிய தமிழர் சமூகத்தால் நன்கு அறியப்பெற்றவர்களாக தெரிந்தார்கள். வர்த்தகமும் சமூக சேவையும் கணிப்பிட்டு வழங்கப்பெற்ற வாழ்நாள் சாதனையாளர் விருது கணேசன் சுகுமார் அவர்களுக்கும் அவர்களும் சிறந்த சமூக உறவிற்கான விருது அருண் குலசிங்கம் அவர்களுக்கும் இசைத்துறை சார்ந்த வெற்றியாளர் விருது அரவிந்தன் மகேசன் அவர்களுக்கும் கணக்கியல் துறை மற்றும் வருமான வரி ஆலோசனை விருது வேல்.புருசோத்தமன் அவர்களுக்கும் சிறந்த சமூக சேவையாளர் விருது ஜோதி பிரபாகரன் அவர்களுக்கும் கணக்கியல் மற்றும் நிதி மேலான்மை ச விருது சின்னத்துரை மகேந்திரநாதன் அவர்களுக்கும் சிறந்த தொழில் வழங்குவோர்க்கான விருது பொன்னையா வில்வரத்தினம் அவர்களுக்கும் வழங்கப்பெற்றன.
அத்துடன் கனடாவில் மிகவிரைவில் அமையவுள்ள ‘தமிழ்ச் சமூக மையம்’ நிறுவப்பெறுவதற்கான நிதியை மேலும் பெற்றுக்கொள்ளும் வகையில் அங்கு உரையாற்றிய சாந்தா பஞ்சலிங்கம் அவர்கள் அவசியமான விடயங்களை சபையோரிடம் அன்பாக எடுத்துக் கூ றினார்.
விழாவை ஆரம்பத்திலிருந்து திருவாளர்கள் கென் கிருபா மற்றும் ஜஸ்ரின் போல் ஆகியோர் நேர்த்தியாகத் தொகுத்து வழங்கினார்கள்.