ஈரானில் ரஷ்யா மற்றும் சீன வகிபாகம் !

Share

– ஐங்கரன் விக்கினேஸ்வரா

(மத்திய கிழக்கின் வரலாற்று பகைமையாக கருதப்படும் இஸ்ரேல்- ஈரான் இடையேயான தொடரும் போரினால் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இப்போரின் நிலை எதிர்வரும் நாட்களில் மாறினாலும், எண்ணெய் வளத்தை நோக்கிய மேற்குலக பொருளாதார ஆதிக்கம் தொடரவே உள்ளது)

ஈரானை நிபந்தனையின்றி சரணடையுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்த போதிலும், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பரஸ்பரம் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த போரில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படும் வகையில் அமெரிக்கா நேரடியாக தலையிட சாத்தியம் உள்ளது.

டிரம்ப் ஈரானை தாக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் முதலில் அளித்துள்ள போதிலும், இந்நிலையில் இருந்து பின்வாங்கியுள்ளார். தற்போது ஈரான் நாட்டைத் தாக்கலாமா வேண்டாமா என்பது குறித்து இறுதியான தீர்க்கமான முடிவை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் எடுப்பேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஏவுகணை மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

மத்திய கிழக்கில் ரஷ்யாவின் இழப்பு:

ஈரான் இஸ்ரேலுடனான மோதலால் மத்திய கிழக்கில் மற்றொரு அரசியல்- பொருளாதார இழப்பு ரஷ்யாவுக்கு ஏற்படும் என்று கருதுகிறது. இஸ்ரேல் ஆபரேஷன் ரைசிங் லயனைத் தொடங்கிய போது, ரஷ்யா வெறுமனே மத்திய கிழக்கு ஆபத்தான போரை நோக்கி செல்கிறது என்று மட்டுமே விவரித்தது.

நீண்ட கால ஈரானுடனான தனது அரசியல்- இராணுவ உறவு முடிவுக்கு வருகிறதோ என மாஸ்கோ கருத வேண்டிய அவசியமும் உள்ளது. இப் போரில் உடனடியாக மாஸ்கோ அரசு ஈரானுக்கு இராணுவ உதவி செய்ய வரவில்லை. இருப்பினும், ரஷ்ய ஊடகங்கள் மாஸ்கோ அரசின் உதவியின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றன.

இருப்பினும் மோதலில் மத்தியஸ்தம் செய்ய கிரெம்ளினின் முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட சாத்தியங்கள் குறைவாகவே உள்ளன. உக்ரைனில் போர் நடவடிக்கைகள் தொடர்கின்ற போதிலும், ரஷ்யா மத்திய கிழக்கில் ஒரு முக்கிய பங்காளியாகவும், அமைதியை நிலைநாட்டுபவராகவும் தன்னைக் காட்டிக் கொள்ள முடிவதாக மேற்குலக நாடுகள் கருதுகின்றன.

எவ்வாறாயினும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை நீண்ட காலம் நீடிக்கும் போது, தற்போதைய நிகழ்வுகளிலிருந்து ரஷ்யா நிறைய இழக்க நேரிடும் என்பதை மறுக்க முடியாது.

ரஷ்ய-ஈரானிய இராணுவ உறவு ?

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனும் கடந்த ஜனவரி 17, 2025 அன்று மாஸ்கோவில் உள்ள கிரெம்ளினில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மூலோபாய நல்லுறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ரஷ்ய-ஈரானிய மூலோபாய கூட்டாண்மை ஒப்பந்தம் ஆனது இராணுவ உறவை வலுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்த ஒப்பந்தம் “பிராந்திய மற்றும் உலக மட்டங்களில் அமைதி மற்றும் பாதுகாப்பின் நலன்களுக்காக ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கும், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த மாஸ்கோ மற்றும் தெஹ்ரானின் நெருக்கமான ஒத்துழைப்புக்கான விருப்பத்திற்கும் சிறப்பு கவனம் செலுத்தியது என்று தெரிவித்தார்.

ஐந்து மாதங்களுக்கு முன்பு ஒரு விரிவான மூலோபாய கூட்டாண்மையில் கையெழுத்திட்ட ஒரு நாட்டின் மீது இஸ்ரேல் நடத்திய ஒரு பெரிய தாக்குதலை ரஷ்யாவால் தடுக்க முடியவில்லை என்பது உண்மைதான். இந்த விஷயத்தில் ரஷ்யாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் இஸ்ரேலைக் கண்டிக்கும் அரசியல் அறிக்கைகளுக்கு அப்பால் செல்ல மாஸ்கோ தயாராக இல்லை என்பது தெளிவாகிறது. உண்மையில் உடனடியாக ஈரானுக்கு இராணுவ உதவி வழங்க ரஷ்யா தயாராக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

சீனாவின் மத்திய கிழக்கு இராஜதந்திரம்:

இஸ்ரேல்-ஈரான் போர் தொடங்க முன், பெய்ஜிங்கின் மத்திய கிழக்கு இராஜதந்திரம் இது வரையில் திடமாகவே இருந்தது.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் 2023 இல் அப்போதைய ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை பெய்ஜிங்கிற்கு வரவேற்று, சீனா ஈரானுடனான தனது உறவை வளர்க்க முயன்றார்.

2023 ஆம் ஆண்டில் பிராந்திய எதிரிகளான ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையே நல்லிணக்கத்தை வெற்றிகரமாக மத்தியஸ்தம் செய்தது. தற்போது இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் அதிகரித்து வரும் மோதலில் அமைதியை ஏற்படுத்தத் தயாராக இருப்பதாகவும் பெய்ஜிங் கூறியுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் வெடித்தன் காரணமாக பெய்ஜிங்கின் ராஜதந்திர நிலைப்பாடு ஈரான் சார்பாகவே இருந்திருக்க வேண்டும். பொருளாதார இராணுவ ரீதியிலான உறுவுகளை பேணும் வகையில் ஈரான் அரசுக்கு சீனாவின் ஆதரவு தேவை உள்ளது. ஆனால் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் விரைவில் மோதலைத் தணிக்க அழைப்பு விடுத்தார்.

சீனாவின் மூலோபாய பங்காளியான ஈரான்:

பெய்ஜிங் பொருளாதார ரீதியாக தெஹ்ரானுக்கு மிக நெருக்கமான உறவில் உள்ளது. முக்கியமாக ஈரானின் எரிசக்தி வளங்கள் காரணமாக, சீனாவின் மூலோபாய பங்காளியாக ஈரான் விளங்குகிறது.

சீனா இதுவரை ஈரானிய எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாகும். ஈரான் உட்பட வளைகுடா நாடுகளின் பெரும்பாலான எண்ணெய் ஏற்றுமதிகள், ஹார்முஸ் ஜலசந்தியின் வழியாகவே செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜலசந்தி மூடப்பட்டால், அது சீனாவில் பெரிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியங்கள் உள்ளன.

அண்மைக் காலங்களில் சர்வதேச அரங்கில் இராஜதந்திர செல்வாக்குடன் கூடிய வல்லரசாக சீனா தன்னைக் காட்டிக் கொள்ள விரும்புகிறது. அமெரிக்காவிற்கு மாற்றாக ஒரு மத்தியஸ்தராகச் செயல்படும் திறன் கொண்டதாக சீனா முயல்கிறது. ஆனால் தற்போதைய மோதல் அதன் சர்வதேச செல்வாக்கின் வரம்புகளை மீறி வர முடியாது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பெண்டகன் போருக்கு தயார் ?

ஈரானில் தொடரும் போர் சிலவேளைகளில் பெரும் போராக உருவெடுத்து பல நாடுகளுக்கும் பரவி செல்லவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. காரணம் ஈரானை காப்பாற்ற துருக்கி,ரஷ்யா,சீனா உள்ளிட்ட நாடுகள் அரை மனதோடு நிற்கிறார்கள். இந்த நாடுகளின் கொள்கை மாறினால் போர் சர்வதேச அளவில் வளர்கின்ற நிலைக்கு ஏற்படும்.

டிரம்ப் முதலில் ஈரானை தாக்க ஒப்புதல் வழங்க தயங்கினாலும், ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைத்து தாக்கத் தயார் என கூறியுள்ளார். பெண்டகன் போருக்கு தயாராகிறது என்பது தெளிவாக தெரிகிறது. அதனாலேயே ஈரான் நிபந்தனை இல்லாமல் சரணடைய வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு ஈரான் உயர் தலைவரான அயத்துல்லா காமேனி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, “பதிலளிக்க முடியாத விளைவுகள் ஏற்படும்” என எச்சரிக்கை விடுத்தார். ஈரானில் இதுவரை 450 பேர் இஸ்ரேல் வான்வீச்சில் உயிரிழந்துள்ளனர். 24 இஸ்ரேலியர்கள் பதிலடி தாக்குதல்களில் பலியாகியுள்ளனர். போரின் விளிம்பில் உலகம் முழுவதும் தள்ளப்பட்டு உள்ளது.

இரு வாரத்தில் முடிவு !

டிரம்ப் ஈரானை தாக்கும் திட்டங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தாலும், ஈரான் நாட்டைத் தாக்கலாமா வேண்டாமா என்பது குறித்து இறுதி முடிவை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிட ஒப்புக்கொண்டால் அமெரிக்க ஜனாதிபதி தாக்குதல்களைத் தொடங்குவதைத் தவிர்த்து வந்ததாக மூத்த உளவுத்துறை தெரிவித்தார்.

தற்போது ஈரானில் உள்ள நிலத்தடி யுரேனியம் செறிவூட்டல் நிலையமான ஃபோர்டோ மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது குறித்து டிரம்ப் பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மத்திய கிழக்கின் வரலாற்று பகைமையாக கருதப்படும் இஸ்ரேல்- ஈரான் இடையேயான தொடரும் போரினால் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இப்போரின் நிலை எதிர்வரும் நாட்களில் மாறினாலும், எண்ணெய் வளத்தை நோக்கிய மேற்குலக பொருளாதார ஆதிக்கம் தொடரவே உள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>