சாட்சியங்களின்படியே அடுத்தகட்ட டசட்ட நடவடிக்கை என்கின்றது அநுர அரசு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவுள்ளார் என்று சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் வதந்தியானவை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். எவரையும் கைது செய்யும் நடவடிக்கை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் திரட்டும் முறையான சாட்சியங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் 16ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்படவுள்ளார் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாவதுடன், தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது. எனினும், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுடன் அவருக்கு இருக்கும் தொடர்புகள் குறித்த விவரங்கள் தற்போதைக்கு என்னிடம் இல்லை.
ஒரு குற்றவியல் விசாரணை முறையான திசையில் நகரும் போது, அந்த உண்மைகள் தங்களை நோக்கி வந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே சிலர் இவ்வாறு பதற்றமடைந்து நீதிமன்றத்தை நாடக்கூடும். தற்போதைய அரசு எவ்வித அரசியல் பழிவாங்கல்களையும் செய்யாது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் திரட்டும் சாட்சியங்களின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் அமையும்.” – என்றார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காலத்தில் காத்தான்குடி மற்றும் சாய்ந்தமருது போன்ற பகுதிகளுக்கு வெடிபொருள்களை ஏற்றிச் சென்ற லொறி ஓட்டுநர், தற்போது விசாரணைகள் தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில் தனக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறியுள்ளமை மற்றும் தனக்கு உரிய சாட்சிப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என முன்வைத்துள்ள குற்றச்சாட்டு குறித்தும் இதன்போது அமைச்சரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், முக்கிய சாட்சிகளைப் பாதுகாப்பதில் நாட்டின் பாதுகாப்புப் பிரிவினர் எப்போதும் தீவிர அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார். மேற்படி நபரால் ஊடகங்கள் வாயிலாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் விவரங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளின் கவனத்துக்குத் தான் உடனடியாகக் கொண்டு செல்லவுள்ளார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.