உயிரிழப்புக்களை வைத்து மோசமான அரசியல் செய்யாதீர்கள் என அமைச்சர் பிமல் எதிர்க்கட்சியினரிடம் வேண்டுகோள்!

Share

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தை எதிர்க்கட்சியினர் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றும், உயிரிழப்புகளைக் கூட அரசியல் இலாபத்துக்காக அவர்கள் கையாள்கின்றனர் என்றும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க குற்றம் சுமத்தினார்.

நாடாளுமன்றத்தில் 8ம் திகதி புதன்கிழமை உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது:-

“நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம் தொடர்பில் நீதி அமைச்சர் ஏற்கனவே விரிவான விளக்கங்களை அளித்து, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும், எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாகப் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை எதிர்க்கட்சியினர் ஏதோ மகிழ்ச்சியுடன் பேசுவதைப் போல் உணர்கின்றேன். இத்தகைய உயிரிழப்புகளைக் கூட குறுகிய அரசியல் இலாபத்துக்காகப் பயன்படுத்துவது முற்றிலும் தவறானதாகும்.” – என்றார்.

இதன்போது, நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் முன்வைத்த கருத்துகளுக்கும் அமைச்சர் பதிலளித்தார்.

“ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்று உறுப்பினர் மரிக்கார் குறிப்பிடுகின்றார். 2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், 2026 ஆம் ஆண்டளவில் இலங்கை பொருளாதாரம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இது சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகள் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலக வங்கியும் இலங்கையை நடுத்தர வருமானம் பெறும் நாடு என அறிவித்துள்ளது. இவ்வாறான யதார்த்தங்களை மறைத்து, பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.” – என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>