புதிய விசாரணையை வலியுறுத்துகின்றார் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற சங்கிரில்லா ஹோட்டலில், தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிம் தங்கியிருந்த 116ஆம் இலக்க அறையில் அவருக்கு முன்னர் தங்கியிருந்தவர்களின் விவரங்கள் மாத்திரம் மறைக்கப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் குறித்து தற்போதைய அரசு தீவிரமாகத் தேடிப் பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற தினத்துக்கு முன்தினமான 2019 ஏப்ரல் 20ஆம் திகதி இரவில், சஹ்ரானும் அவருடன் இருந்த மற்றொரு நபரும் கொழும்பு சங்கிரில்லா ஹோட்டலின் 116ஆம் இலக்க அறைக்கு வந்து தங்கியுள்ளனர். மறுநாள் ஏப்ரல் 21ஆம் திகதி காலையிலேயே அவர்கள் இந்தக் கொடூர தாக்குதலை நடத்தியிருந்தார்கள்.
இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து, பாதுகாப்புத் தரப்பினரால் சங்கிரில்லா ஹோட்டல் அறைகளில் அதற்கு முந்தைய இரண்டு வார காலப்பகுதியில் தங்கியிருந்த அனைத்துப் பயணிகளினதும் விவரங்கள் மற்றும் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.
இருப்பினும், சஹ்ரான் தங்கியிருந்த 116ஆம் இலக்க அறையில், அவருக்கு முன்னர் தங்கியிருந்தவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் மாத்திரம் எங்கும் பதியப்படவில்லை. எந்தவொரு விவரப் பதிவுகளும் இல்லாமல் ஒரு சர்வதேச ஹோட்டலில் யாருக்கு அவ்வாறு அறைகள் வழங்கப்பட முடியும்? மிகவும் செல்வாக்குமிக்க முக்கிய பிரமுகர்களுக்கு மாத்திரமே அவ்வாறான சலுகைகள் வழங்கப்பட முடியும்.
அப்படியானால், சஹ்ரான் வருவதற்கு முன்னர் அந்த அறையில் தங்கியிருந்த அந்த முக்கிய பிரமுகர்கள் யார்? இந்த விவரங்கள் அனைத்தும் ஏற்கனவே நீதிமன்ற வழக்கு விசாரணைகளின் போது வெளிவந்த உண்மைகளாகும்.
அத்துடன், சஹ்ரான் இருந்த அறையின் கதவைத் திறப்பதற்கு டிஜிட்டல் இலத்திரனியல் அட்டை ஒன்று விநியோகிக்கப்பட்டுள்ளதும், அதனைப் பயன்படுத்தி கதவு திறக்கப்பட்டுள்ளதும் தரவுகளில் பதிவாகி இருக்கின்றன. ஆனால், அந்த அறையில் அதற்கு முன் தங்கியிருந்த நபர் யார் என்பது விடுபட்டுள்ளது.
உலகில் ஹோட்டல் பதிவுகள் ஏதுமின்றி தங்கும் சலுகை மிக முக்கியமான சில உயர்மட்டப் பிரமுகர்களுக்கு மட்டுமே காணப்படுகின்றது. எனவே, அங்கு தங்கியிருந்தவர்கள் யார் என்பதை இந்த அரசு உடனடியாகத் தேடிப் பார்க்க வேண்டும். இவ்வாறான பல மறைக்கப்பட்ட உண்மைகள் தற்போதைய புதிய விசாரணைகளின் மூலம் வெளிவரும் என நாங்கள் எதிர்பார்க்கினறோம்.” – என்றார்.