உலகத் தமிழறிஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ள “செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” என்னும் அனைத்துலகத் தமிழர் மாநாடு – 2026

Share

கனடாவில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டிற்காக இதுவரை 497 ஆய்வுச் சுருக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை நம்பிக்கை தரும் தகவல் அல்லவா?!

கனடா வாழ் செயற்பாட்டாளர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தலைமையில் இயங்கிவரும் அனைத்துலகத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் “செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” என்ற தலைப்பின் கீழ் அனைத்துலகத் தமிழர் மாநாடு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கனடாவின் ரொறன்ரோ மாநகரில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டை முன்னிட்டு 5 தலைப்புகளின் கீழ் உலகம் முழுவதுமுள்ள தமிழறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆய்வாளர்களிடமிருந்து ஆய்வுக் கட்டுரைகள் கோரப்பெற்றிருந்தன. அதற்கான ஆய்வுச் சுருக்கங்களை கடந்த யூன் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு அறிவிக்கப்பெற்றிருந்த நிலையில், உலகிலுள்ள பல நாடுகளிலிருந்தும் மொத்தமாக 497 ஆய்வுச்சுருக்கங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அதிலும் , இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து அதிகளவிலான ஆய்வுச்சுருக்கங்கள் எமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவற்றுள் “மெய்ப்பொருளியலும் பண்பாடும்” மற்றும் “தமிழர் வரலாறும் வாழ்வியலும்” ஆகிய தலைப்புகளின் கீழ் அதிக எண்ணிக்கையிலான ஆய்வுச் சுருக்கங்கள் கிடைத்துள்ளன. மேலும் “தமிழும் செய்யறிவும்”, “பொருளியல் சிந்தனையும் வாழ்வியலும்”, “இலங்கை வடகிழக்குப் பொருண்மிய மேம்பாடு” ஆகிய தலைப்புகளின் கீழும் குறிப்பிடத்தக்க அளவில் ஆய்வுச்சுருக்கங்கள் கிடைத்துள்ளன.

மாநாட்டில் பங்கேற்கும் ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்காக உலகின் பல நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களை உள்ளடக்கி ஐந்து தலைப்புகளுக்குமான வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பெற்றுள்ளன.

இக்குழுக்களின் பரிந்துரைகளுக்கேற்ப தேர்வுசெய்யப்பெறவுள்ள ஆய்வாளர்களுக்கு ஆய்வுச்சுருக்கத் தேர்வு பற்றி எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத் தொடக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அனுப்பி வைக்கப்படும்.

இந்த மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கு பல நாடுகளில் இருந்தும் ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பெற்றுள்ளனர்.

மாநாட்டிற்காக தங்களது ஆய்வுச் சுருக்கங்களை அனுப்பியுள்ள உலகத் தமிழறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அனைவருக்கும் அனைத்துலகத் தமிழர் பேரவை தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அனைத்துலகத் தமிழர் மாநாடு – 2026 இனது ஆய்வரங்கக் குழுத் தலைவரும் சென்னைப் பல்கலைக்கழகச் சைவ சித்தாந்தத் துறைப் பேராசிரியருமான
நல்லூர் சா. சரவணன் அவர்கள் பத்திரிகைகளுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>