யுத்த்தகாலத்தய ‘கலக்கம்’ ஒரு படிப்பினையா அன்றி ‘வர்த்தக நோக்கமா”?
2026 பிப்ரவரி 28 ஆம் தேதி, ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவினதும் வான் படைகள் இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர்(Supreme Leader) அலி காமனேய் கொல்லப்பட்டதாக தகவல்கள் பரவிய பின்னர், அடுத்த நாள் ஈரானில் மட்டுமன்றி மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் பதற்றமான சூழ்நிலை உருவானது.
இந்த செய்தி பரவியதன் பின்னர், யாழ்ப்பாணத்தில் பல மோட்டார் சைக்கிள்களும், வாகனங்களும் பெட்ரோல் நிலையங்களின் முன் நீண்ட வரிசைகளில் நிற்கும் நிலை ஏற்பட்டது. உலகில் எங்குமே மக்கள் கூடாத நிலையில் ஈரானில் வீசப்பட்ட குண்டின் வெப்பம் தணிய முன்னமே யாழ்பாணத்தவர்கள் நீண்ட வரிசை கொண்டனர்.
இதனை அடிப்படையாகக் கொண்டு பல யூடியூபர்கள் மற்றும் ஊடகங்கள் பல்வேறு கருத்துகளையும் விளக்கங்களையும் வெளியிட்டு சித்தரித்தனர்.
அதே நேரத்தில், சிலர் இதனை நகைச்சுவை மற்றும் நையாண்டியாகவும் எடுத்துரைத்தனர். “ஈரானுக்கே இன்னும் முழுமையாகத் தெரியாத விஷயத்தை யாழ்ப்பாணத்தில் இவ்வளவு முன்னதாகவே எப்படி அறிந்து இவ்வாறு செய்கிறார்கள்?” என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன. மேலும், எங்கு எந்தச் சம்பவம் நடந்தாலும் உடனே வாகனங்களுடன் பெட்ரோல் நிலையங்களுக்கு சென்று வரிசையில் நிற்பது யாழ்ப்பாண மக்களின் வழக்கமாகிவிட்டது என்ற விமர்சனங்களும் நையாண்டிகளும் சமூக வலைத்தளங்களில் பரவின.
இதற்கிடையில், சிலர் இது யாழ்ப்பாண மக்களின் இயல்பான சமூகப் பழக்கமாக இருந்தாலும், அதன் பின்னால் வேறு காரணங்களும் இருக்கக்கூடும் என்ற கருத்துகளையும் முன்வைத்தனர்.
இந்த பின்னணியில், நையாண்டி மற்றும் விமர்சனங்களை ஒரு புறம் விட்டு வைத்து, சில முக்கியமான கேள்விகள் எழுகின்றன. யாழ்ப்பாணத்திற்கு மட்டும் QR முறையை கொண்டு வர முடியாதா? யாழ்ப்பாணத்தை விட்டு முறிகண்டி அல்லது அதனை தாண்டிய ஏனைய பகுதிகளுக்கு சென்றால் எதுவும் இல்லாத வெறிச்சோடிய நிலை காணப்படுகிறது. அப்படியிருக்க, ஏன் இவ்வாறு பெட்ரோலை பதுக்குகின்றனர்? ஏன் இவ்வாறு திடீரென அதிகளவு பெட்ரோல் தேவைப்படுகிறது? மூன்று நாட்களில் 30 கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பெட்ரோலை வாங்க வேண்டிய நிலை ஏன் உருவாகிறது?
இவ்வாறான கேள்விகளும் நையாண்டிகளும் சமூகத்தில் பரவி வருகின்றன. ஆனால், இந்த விவாதங்களின் மத்தியில் ஒரு முக்கியமான அம்சம் கவனிக்கப்பட வேண்டியுள்ளது.
உலக அரசியலில் நடைபெறும் மாற்றங்களை யாழ்ப்பாணத் தமிழர்கள் எவ்வாறு புரிந்து கொண்டு, முன்னறிவிப்புகளுடன் செயல்படுகின்றனர் என்பதையும் இந்த நிகழ்வு ஒரு அளவிற்கு வெளிப்படுத்துகிறது. அந்த கோணத்தில் இந்த பதிவை நுணுக்கமாகவும் மேலோட்டமாகவும் ஆய்வு செய்து பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
மார்ச் 10, 2026 அன்று அதிகாலை நிலவரப்படி, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக 100 அமெரிக்க டொலரை கடந்துள்ளது. தற்போதைய கணிப்பின்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை சுமார் 110 -120அமெரிக்க டாலராக உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த நிலை உலக நாடுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படியே போனால் பீபாய் எண்ணை விலை 150-200 டொலர் வரை உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கணிக்கின்றனர்.
ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு பதிலடியாக, ஈரான் பழிவாங்கும் நோக்கில் அமெரிக்காவுடன் தொடர்புடைய தளங்கள் அமைந்துள்ள அண்டை நாடுகளின் பகுதிகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலைகளை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் சிலவும் கடுமையாக சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனுடன், ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்மூஸ் நீரிணை (Strait of Hormuz) ஈரான் மூடியுள்ளது.அதே நேரத்தில், ஈரானுக்கு ஆதரவு தெரிவித்த சீனாவுக்காக மட்டும் அந்த நீரிணையை திறந்து விடப்படும் என அறிவித்தது..
இந்த சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்ப் ஹார்மூஸ் நீரிணை வழியாக அனைத்து நாடுகளின் கப்பல்களும் சுதந்திரமாகச் செல்ல முடியும் என்றும், அவற்றுக்கு அமெரிக்கா பாதுகாப்பு வழங்கும் என்று அறிவித்தார். எனினும், ஹார்மோய் நீரிணை ஊடாக 11.03.2026 பயணித்த தாய்லாந்து கொடி பறந்த எண்ணை கப்பல் மற்றும் ஈராக் கப்பல்கள் ஈரானின் கடல் கண்ணிவெடிகள் மூலம் தகர்க்கப்பட்சிருக்கின்றன, அமெரிக்காவிற்கு இது மேலும் சவாலையும் பின்னடைவையும் கொடுத்திருக்கிறது. அதைவிட பல நாட்டு கப்பல்கள் ஈரானின் கடல் கண்ணிவெடிகளுக்கு பயந்து பல கடல் மைல்களுக்கு அப்பால் கடலில் தேங்கி நிற்கின்றன.
அதனூடாக பயணிக்கும் கப்பல்களுக்கு இன்சூரன்ஸ் தொடர்பில் காப்பீடு நிறுவனங்கள் கைவிரிக்கின்றன. அதைவிட அமெரிக்க கப்பல் படையோ ஹார்மோஸ் நீரிணை ஊடாக்க பயணிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க மாட்டோம் என தெரிவித்தமை நீரானின் தாக்குதல்களை உறுதிப்படுத்தி நிற்கின்றன.
இதனால் ஹார்மூஸ் நீரிணை வழியாக உலக நாடுகளுக்குச் செல்லும் எண்ணெய், எரிவாயு மற்றும் பிற எரிசக்தி வளங்களின் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் எண்ணெய் விநியோகத்தில் பெரும் ஆபத்து உருவாகியுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தனது நாட்டில் அவசரகால நிலைமைகளில் பயன்படுத்தக்கூடிய கோடிக்கணக்கான பீப்பாய் எண்ணெய் கையிருப்பில் இருப்பதாகவும், அதனால் உடனடி அச்சம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.அதாவது, அமெரிக்கா தன்னுடைய நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு உறுதியாக உள்ளது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.ஆனால் அமெரிக்காவில் எண்ணை விகை சடுதியாக உயர்ந்து மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
இதற்கிடையில், இந்தியாவுக்கு தேவையானதை விட அதிகளவிலான கச்சா எண்ணெயை வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அதேபோல், சீனாவும் ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தி மற்றும் கையிருப்புகளை பகிர்ந்து வழங்கும் வாய்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்மூஸ் நீரிணை மூடப்பட்டதாலும், ஈரானில் உள்ள எண்ணெய் வசதிகள் தாக்கப்பட்டதாலும், மேலும் அதற்கு பதிலடியாக ஈரான் அண்டை நாடுகளில் உள்ள எண்ணெய் வசதிகளை தாக்கியதாக கூறப்படுவதாலும், உலகளவில் எண்ணெய் தேவையும் பதற்றமும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 110 அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது.
இதன் தாக்கமாக பல உலக பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்திய பங்குச் சந்தையும், துபாய் பங்குச் சந்தையும் வீழ்ச்சியடைந்துள்ளன.உலகளவில் உயர்வாக இயங்கிய பல பங்குச் சந்தைகளும் தற்போது சரிவை சந்தித்து வருகின்றன.
மேலும், தங்கத்தின் விலைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உலகளாவிய முதலீட்டாளர்கள் இந்த நிலைமையை கவனத்துடன் நோக்கி வருகின்றனர். பல உற்பத்தி நிறுவனங்களுக்கு கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் சில தொழிற்சாலைகள் செயல்பாட்டை குறைக்கவோ அல்லது தற்காலிகமாக மூடவோ நேரிடும் நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது.
இந்த உலகளாவிய சூழ்நிலையின் பின்னணியில், 2026 பிப்ரவரி 28 அன்று ஈரான் தொடர்பான தாக்குதல் சம்பவம் நிகழ்ந்ததும், அதன் மறுநாளே யாழ்ப்பாணத்தில் பலர் நீண்ட வரிசைகளில் நின்று பெட்ரோல் மற்றும் எரிபொருட்களை வாங்கி வீட்டில் சேமித்துக் கொண்ட சம்பவம் நினைவுக்கு வருகிறது.
இந்த நிகழ்வை சிலர் விமர்சனமாகவும் நையாண்டியாகவும் எடுத்துரைத்திருந்தாலும், உலக அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட்ட ஒரு முன்னறிவிப்பாக இதைப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
இது வெறும் பாராட்டுக்குரிய விடயம் மட்டுமல்ல. ஒரு சிறிய ஆய்வாகவும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். இன்றைய நிலையில் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் பற்றாக்குறை நிலை உருவாகியுள்ளது. பெரிய வல்லாதிக்க நாடுகளுக்கே எரிசக்தி தொடர்பான அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு கூடுதலாக எண்ணெய் வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இலங்கை போன்ற நாடுகள் அந்த வளங்களை நேரடியாகப் பெற முடியாத நிலை உள்ளது. இந்தியா போன்ற நாடுகளிடமிருந்து பகிர்ந்தளிப்பு கிடைத்தால்தான் இலங்கைக்கு அவை கிடைக்கும் என்ற நிலைமையே தற்போது காணப்படுகிறது.
இந்நிலையிலேயே, இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பெற்றோலிய விலைகளை அதிகரித்துள்ளது.
உலகளவில் எண்ணெய் விநியோகத்தில் சிக்கல்கள் உருவாகி வருகின்றன. எண்ணெய் களஞ்சியங்கள் தாக்கப்பட்டிருப்பது,போக்குவரத்து பாதைகள் பாதிக்கப்பட்டிருப்பது, மேலும் பிராந்திய அரசியல் பதற்றம் அதிகரித்திருப்பது போன்ற காரணங்களால், எண்ணெய் வழங்கல் குறையக்கூடும் என்ற எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலைமைகள் தொடர்ந்தால் இலங்கையிலும் பெட்ரோல் தட்டுப்பாடு உருவாகக்கூடிய சாத்தியம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது சில அளவுக்கு கையிருப்புகள் இருக்கலாம். ஆனால் அந்த கையிருப்புகள் முடிந்த பின்னர் என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது. இந்த சூழ்நிலையிலேயே எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மேலும் உயர வாய்ப்புள்ளது.
இந்தப் பின்னணியில், யாழ்ப்பாண மக்களின் செயல்பாட்டை சிலர் விமர்சித்தாலும், அது ஒரு முன்னறிவிப்பு அல்லது அனுபவத்தின் அடிப்படையில் உருவான நடவடிக்கையாகும். நீண்ட கால உள்நாட்டு போராட்ட அனுபவங்களால் உருவான வாழ்வியல் நடைமுறை பழக்கமாக இதைப் பார்க்கலாம்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலான போராட்ட காலத்தில், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருட்களைப் பெற மக்கள் நீண்ட வரிசைகளில் நின்ற அனுபவம் வடக்கில் பலருக்கும் உள்ளது.
சங்கக் கடைகளில் எண்ணை பங்கீட்டுக்காக நீண்ட வரிசையில் நின்று, சிறிய அளவிலான மண்ணெண்ணெயை பெற்றுக் கொண்டு வீட்டில் படிப்பதற்காகவும், விவசாய இயந்திரங்களை இயக்குவதற்காகவும் அல்லது பிற தேவைகளுக்காகவும் பயன்படுத்திய அனுபவங்கள் அங்கு வாழ்ந்த மக்களுக்கு நன்கு தெரியும்.
அந்த காலகட்டத்தில் பெட்ரோலில் இயங்கும் சில இயந்திரங்களை மண்ணெண்ணெயில் இயங்குமாறு மாற்றிக் கொண்டு பயன்படுத்தும் முறைகளையும் வடக்கு பகுதிகளில் உள்ள மக்கள் கற்றுக் கொண்டனர்.
இந்த அனுபவங்களின் அடிப்படையில் உருவான வாழ்வியல் பழக்கங்கள் காரணமாகவே, எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடிய சூழ்நிலைகளில் முன்கூட்டியே எச்சரிக்கையுடன் செயல்படுவது போன்ற நடைமுறைகள் உருவாகியுள்ளன என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இந்த வகையில், கடுமையான பொருளாதார சிக்கல்களும் பொருளாதாரத் தடைகளும் நிலவிய ஒரு மூடிய சூழலில் வாழ்ந்த அனுபவம் வடக்கு தமிழர்களுக்கு உள்ளது. அந்த அனுபவத்தின் மூலம் என்ன நிகழலாம், சூழ்நிலை எவ்வாறு மாறலாம் என்பதை அவர்கள் முன்கூட்டியே கணிக்கும் மனப்பாங்கு உருவாகியுள்ளது.
அதன் காரணமாகவே, ஈரானின் உச்சத் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதாக தகவல் வெளியானதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் பல பெட்ரோல் நிலையங்களின் முன் பல கிலோமீட்டர் நீளமான வரிசைகளில் மக்கள் காத்திருந்தனர். இதை சிலர் நகைச்சுவையாகவும் விமர்சனமாகவும் எடுத்துரைத்திருந்தாலும், அதன் பின்னால் இருக்கும் முன்னறிவிப்பு மனப்பாங்கை கவனிக்க வேண்டியது அவசியமாகும்.
உலக சந்தையில் என்ன மாற்றங்கள் ஏற்படும், எரிசக்தி விநியோகம் எவ்வாறு பாதிக்கப்படும், பொருளாதாரத்தில் எந்தளவு வீழ்ச்சி உருவாகும் என்பதைக் குறித்து அவர்கள் துல்லியமாக கணிக்கும் பழக்கம் அவர்களது போராட்ட வாழ்க்கை முறைக்குள் இருந்து கற்றுக்கொண்டது. இது தலைமுறைகளாக அனுபவத்தின் மூலம் உருவான பழக்கமாக இருக்கலாம்.
மேலும், தற்போதைய நிலையில் யாழ்ப்பாணத்தில் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள் மற்றும் பிற வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளதால், எரிபொருள் தேவையும் உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில், சிலர் அதிகமாக எரிபொருள் சேமித்து பின்னர் கருப்பு சந்தையில் விற்பனை செய்வதற்காகவும் இதனை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, கொரோனா காலகட்டத்தில் இப்படிப்பட்ட அனுபவங்கள் சிலரிடம் உருவாகியதாகவும் கூறப்படுகிறது. எனினும், இது அனைவருக்கும் பொருந்தும் நிலைமையல்ல.
எவ்வாறாயினும், யாழ்ப்பாணத்தில் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்ற சம்பவம், உலகளாவிய எண்ணெய் விலை உயர்வும் பொருளாதார மாற்றங்களும் இடையே ஒரு தொடர்பு இருப்பதை சுட்டிக்காட்டுவதாக சிலர் கருதுகின்றனர்.
போர் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் நிறைந்த சூழலில் வாழ்ந்தவர்களுக்கு, எரிபொருள் போன்ற அத்தியாவசிய வளங்களின் முக்கியத்துவம் மிகவும் தெளிவாகப் புரியும். இன்று உலக நாடுகள் எண்ணெய் பற்றாக்குறை குறித்து கவலைப்படும் நிலையில், யாழ்ப்பாண மக்கள் தங்களுக்கு தேவையான அளவு எரிபொருளை முன்கூட்டியே வாங்கி சேமித்து வைத்துள்ளனர் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இந்த சேமிப்பு பழக்கம் தமிழர்களின் வாழ்வியல் பண்பாகவும் பார்க்கப்படுகிறது. அவர்கள் தங்கமாகவோ, தானியங்களாகவோ அல்லது தேவையான பிற வளங்களாகவோ சேமித்து வைக்கும் பழக்கம் கொண்டவர்கள்.காலத்திற்கேற்ற தேவைகளை முன்கூட்டியே உணர்ந்து சேமித்து வைப்பது அவர்களின் வாழ்வியல் நடைமுறையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
அதனால், இந்த நிகழ்வை வெறும் நகைச்சுவை அல்லது நையாண்டி எனப் பார்க்காமல், போரையும் பொருளாதார சிக்கல்களையும் எதிர்கொண்ட ஒரு சமூகத்தின் பாரம்பரிய அனுபவத்தின் வெளிப்பாடாகவும் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
கு.மதுசுதன்
B.Sc(Hons),M.Sc