ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்றவர்கள் நாடாளுமன்றத்துக்கு வந்து பொருளாதார ஆலோசனை கூறுவது வேடிக்கையானது!

Share

– நாமல் ராஜபக்ச என்னும் ஊழல்வாதியை விளாசித் தள்ளிய ஆளுங்கட்சி எம்.பி. சந்தருவன்

மக்களின் வரிப்பணத்தை இலஞ்சமாகப் பெற்றுச் சுகபோக வாழ்க்கையை அனுபவித்தவர்களாகிய சிறையில் உள்ளவர்கள் இன்று நாடாளுமன்றத்துக்கு வந்து அரசுக்குப் பொருளாதார மேம்பாடு பற்றி ஆலோசனை வழங்குவது வேடிக்கையாக உள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தருவன் மதரசிங்ஹ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் 8ம் திகதி அன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மோட்டார் வாகனக் கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“ஊரில் உள்ளவர்கள் ஏதாவது குற்றச்செயலுக்காகச் சிறைக்குச் சென்றால் வெட்கத்தால் வெளியில் வரமாட்டார்கள். பிறருடன் கதைக்கக்கூட மாட்டார்கள். ஆனால், நாடாளுமன்றத்தில் அவ்வாறான நிலைமையைக் காண முடியவில்லை.

ஊழல், மோசடிச் சம்பவங்களுக்காகச் சிறைக்குச் சென்றவர்கள் இன்று நாடாளுமன்றத்துக்குள் வந்து பொருளாதார மேம்பாடு பற்றிக் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். விவசாயிகளுக்கு உரம் இல்லை என்று கூறும் நாமல் ராஜபக்ஷதான், அன்று கழிவு உரத்தை இறக்குமதி செய்து நாட்டின் விவசாயத்தை அழிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாகக் கையுயர்த்தினார்.

அரசியல் பழிவாங்கலுக்காகவே நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார் என்று எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிடுகின்றார்.

எயார்பஸ் கொள்வனவு விவகாரத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போதெல்லாம் அவர்களின் உடல்நலம் குறித்து வெளிநாட்டு மருத்துவமனைகளே அறிக்கை சமர்ப்பிக்கின்றன. நாட்டில் உள்ள அரச மருத்துவக் கட்டமைப்பை வினைத்திறனாக்கும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கும்போது இவர்கள் அதற்கு எதிராகச் செயற்படுகின்றார்கள்.” – என்றார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>