தனது நண்பர்களோடு இணைந்து வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் கனடா ‘தமிழ் மிறர் சார்ள்ஸ் தேவசகாயம் அவர்கள்
தாய்க்கிழவி என்று இங்கு நான் விழித்தது என் மனைவியை. அவள் எனது இரண்டு பிள்ளைகளுக்கும் தாயாக இருந்தது மட்டும் அல்ல எனது தாயாருக்கும் கூட தாயாக இருந்ததை தான் குறிப்பிடுகிறேன்.
எனது தந்தை இறந்த பிறகு எனது தாயை நான் கனடாவுக்கு வரவழைத்த போது அவருக்கு 74 வயது. தள்ளாத வயது என்பதால் நான்கு சக்கர வண்டியில் தான் வந்திறங்கினார். இந்த கிழவியை ஏன் இந்த வயதில் இங்கு வரவழைக்கிறீர்கள் என என்னுடன் மல்லுக்கட்டிடவில்லை.
என்னிடமும் என் தயாரிடமும் சமையல் கற்றுக்கொண்டு சோறு கறி சமைத்து தந்தாள். பிட்டில், இருந்து நண்டு கறி வரை தன்னால் முடிந்ததை சமைத்து தாயாரையும் என்னையும் பிள்ளைகளையும் பார்த்துக்கொண்டாள்.
கலை விழாக்கள் அன்று வொபேர்ண் கல்லூரி போன்ற கலையரங்குகளில் நடை பெற்ற போது எனது தாயை அழைத்து கொண்டு சென்று, மொழி தெரியாத போதும் பல மணித்தியாலங்கள் இருந்து மீண்டும் வீடு அழைத்து வருவாள்.
ஒவ்வொரு கோடை காலத்திலும் நான் குடும்பத்தினரை மாகாண மற்றும் நாடு ரீதியாக அழைத்து சென்ற போதும் கூட வலு கவனமாக எனது தாயை கவனித்து கொண்டாள். நானும் பிள்ளைகளும் விரைவாக முன்னாள் சென்றாலும் என் மனைவி சற்று ஆறுதலாக என் தாயின் கையை பிடித்து கவனமாக கொண்டு வந்தது இன்னும் கண் முன்னே வந்து செல்கிறது.
இது பல குடும்பங்கிளில் நடந்திருக்கலாம். ஆனால் ஒரு தென் ஆசியா கிழவியை இன்னோர் கிழக்காசிய இளம் பெண் இவ்வாறு செய்யும் போது பலரும் திரும்பி பார்ப்பார்கள் என தெரிந்தும் எந்த கவலையும் படாமல், மேலும் நான் கேட்காமல் செய்த இந்த சிறு சிறு செயல்கள் நன்றி உணர்வை தெளித்த வண்ணம் இன்றும் உள்ளன.
மேலும் இந்த படத்தில் இருக்கும் வெள்ளை நிற நாய்க்குட்டி மாயாவினை உங்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். அது எனது மனைவியின் பேத்தி. எனது பிள்ளைகளுக்காக குட்டி நாயொன்றினை
கொண்டு வரப்போகின்றேன் என கூறிய போது, நாய் குட்டி வந்தால் நான் வீட்டை விட்டு வெளியில் போய் விடுவேன் என மிரட்டிய என் மனைவி சில கிழமைகளிலேயே மாயாவை மிக ஆழமாக நேசிக்க தொடங்கிளாள். அது வழமையாக நடக்கிற ஒன்று என நான் கேள்வி பட்டிருக்கிறேன்.
ஆனால் கடையில் வாங்கும் நாய்களுக்கான சாப்பாட்டில் இரசாயனம் கலந்திருக்குறது என்று, நாள் தோறும் இறைச்சியும் மரக்கறியும் கொஞ்சம் சோறும் சமைத்து கொடுப்பது என்பது சற்று வித்தியாசமானது என நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.
அதனால் தானோ என்னவோ மாயாவுக்கு வயது பத்துக்கு மேலாக ( 13 yrs ) இருந்தாலும் இன்னும் எங்களோடு ( மகளோடு ) இருக்கிறாள்.
எனவே தான் பேத்தியின் நலனில் இருந்து என் தாயாரின் நலன் வரை அக்கறை கொண்ட எனது தாய்க்கிழவி என கூறியிருந்தேன்.
எனது தாயாரை 15 ஆண்டுகள் வீட்டில் வைத்து தனது தாயை போல பார்த்தது அன்றி 2 ஆண்டுகள் நீண்ட கால பராமரிப்பு நிலையத்தில் இருந்த போதும் கிரமமாக பிள்ளைகளையும் கூட்டி சென்று நலம் விசாரித்தமையும் மறக்க முடியாதது.
நன்றி மறப்பது நன்றன்று என்ற தமிழ் மரபுக்கிணங்க இந்த அன்னையர் தினத்தன்று இதனை பதிவாக்குகின்றேன்.
பி.கு. எனது மனைவியும், தாயாரும் ஒரு நாளும் முரண்பட்டுக்கொண்டதில்லை என்ற குறிப்பினையும் இங்கு பதிவாக்க வேண்டும். அந்த வரத்தினை எனக்கு அளித்த ஆண்டவனுக்கு இத்தருணத்தில் நன்றி சொல்ல வேண்டும்.