ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நேரடியாகவோ அல்லது பிற நாடுகள் வழியாகவோ டெல்லி வரும் பயணிகள் அனைவருக்கும் தீவிர தெர்மல் ஸ்கிரீனிங் மற்றும் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, இன்று டெல்லி விமான நிலையத்தில் இந்த அவசர வழிகாட்டுதல் வெளியிடப்பட்டது. விமான நிலைய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி காய்ச்சல், உடல் பலவீனம், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் உடலில் காரணமின்றி ஏற்படும் ரத்தக்கசிவு போன்றவற்றிற்கான அறிகுறிகள் இருக்கும் பயணிகள் குடியேற்ற பிரிவிற்கு செல்லும் முன்பே தங்களை பற்றிய முழு விவரங்களை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் சென்று, எபோலா நோயாளிகளின் இரத்தம் அல்லது உடல் திரவங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டவர்களும் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், டில்லி வந்திறங்கிய பிறகு 21 நாட்களுக்குள் மேலிருந்த அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், உடனடியாக அருகிலுள்ள சுகாதார சேவை மையத்தை அணுகி தங்களது பயணத்தை பற்றி தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது எபோலா வைரஸின் பாதிப்புகள் இல்லை என்றும் பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை என்றும் மத்திய சுகாதார துறை தெளிவுபடுத்தியுள்ளது. கோவிட்-19 போல எபோலா காற்றில் பரவும் நோய் அல்ல என்பதால், முறையான விமான நிலையக் கண்காணிப்பு மூலமே இதனை எளிதாகத் தடுத்துவிட முடியும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.