எமது விடுதலை கொள்கைவழியிலானது என்பதை உணர்த்தியவர் பொன் சிவகுமாரன்

Share

முன்னாள் தவிசாளர் நிரோஸ்

தமிழ் மக்களின் விடுதலை இலட்சியபூர்வமானது. அவ் விடுதலை என்பது கொள்கை வழியில் அடையப்படவேண்டியது என்பதை தமிழ்த் தேசிய மாணவர் சக்தியாக உணர்த்தியவர் தியாகி பொன் சிவகுமாரன் அவர்கள் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

பொன் சிவகுமாரனின் 51 வது ஆண்டு நினைவு தினத்தில் உரும்பிராயில் உள்ள பொன் சிவகுமாரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்பு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், தமிழ் மக்களின் இலட்சியபூர்வ விடுதலைப் பயணத்தின் வழி உறுதியுடன் நின்று மாணவ தலைவனாக பெரும் அரசியல் தலைவர்களுக்கு உணர்த்தியவர் சிவகுமாரன் அவர்கள். அடக்கு முறைகளுக்கு எதிராக தமிழ் இனம் இலட்சியபூர்வமாக எவ்வாறாக உச்சபட்ச தியாகத்தினை எமது இனத்திற்காக மேற்கொள்ள முடியும் என்பதை கற்பித்து முதல் வித்தாகிய மாவீரனே பொன் சிவகுமாரன் அவர்கள்.

தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் இளைஞர்களின் தியாகம் என்பது அளவிடப்பட முடியாதது. எதிரியிடம் உயிருடன் பிடிபட்டு விடக்கூடாது என்பதற்காக சயனட்டினை உட்கொண்டே சிவகுமாரன் அவர்கள் தன்னுயினை ஆகுதியாக்கினார். மாணவர் சக்தி மாபெரும் சக்தி என்பதை பேரினவாதத்திற்கும் உலகிற்கும் எடுத்துக்காட்டிய இனத்தின் வழிகாட்டி பொன் சிவகுமாரன் அவர்கள்.

தமிழ் மாணவர் மீது பௌத்த சிங்கள பேரினவாதச் சிந்தனையுடன் அரசு கொண்டு வந்த தரப்படுத்தல் முறைமைக்கு எதிராக போராடியவர் சிவகுமாரன் அவர்கள். தரப்படுத்தலை எதிர்த்து போராடிய மாணவர் பேரவையில் தன்னை முழுமையாக இணைத்துச் செயற்பட்டார். இக் காலத்தில் சிறிமா அரசாங்கத்தில் அங்கம் வகித்த சோமவீர அமைச்சரின் வாகனத்திற்குக் குண்டு வைத்தார் எனக் கைதுசெய்யப்பட்டார்.

அதுபோன்று அரசாங்கத்தில் சலுகைகளுக்காக சேர்ந்திருந்த அல்பிரட் துரையப்பா உள்ளிட்டவர்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டார். துரையப்பாவின் வாகனம் வெடித்துச் சிதறிய நிலையில் துரையப்பா மயிரிழையில் உயிர் தப்பினார். உலகத்தமிழாராட்சி மாநாட்டு படுகொலைகளை மேற்கொண்டவார்களை தண்டிப்பதற்காக திடனாக உழைத்தார். அரச பேரினவாதம் எம்மீது ஆயுத வன்முறையைத் திணித்த போது அதற்கு எதிராக மீண்டும் ஆயுதவழியில் பதிலளித்த தியாகி சிவகுமாரன் அவர்களின் இலட்சியத்தினை நினைவுகூர்ந்து இன்றும் அனுஸ்டிக்கின்றோம் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>