ந.லோகதயாளன்.
ஒக்டோபர் 6 முதல் 8 வரை ஐ.நா மனிதஉரிமைப் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையில் தமிழர் தரப்பின் வகி பாகம் என்ன என்ற கேள்வி முன் வைக்கப்படுகின்றது.
ஐ.நா மனிதஉரிமைப் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் நாளை செப்ரெப்பர் 8 ஆம் திகதி ஆரம்பித்து ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதிலே இம் முறையும் இலங்கை தொடர்பான விடயம் வாக்கெடுப்பிற்கு வரவுள்ளது. அதற்கான பிரேரணையை இலங்கை தொடர்பான தீர்மானங்களை கொண்டு வரும் பிரித்தானியா தலைமையிலான கோ குறூப் எனப்படும் அணி தயார் செய்து வருகின்றது.
இதற்கு ஆதரவு சேர்க்கும் வகையில் இலங்கையில் இருந்து அரசியல் கட்சிகள் ஐ.நா.மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம் எழுதினோம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வைத்து கையெழுத்து திரட்டினோம் என அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் செயல்பட்டாலும் அங்கே ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அல்லது கோ குறூப் என்பன தனித்து முடிவெடுக்க முடியுமா என்ற விடயத்தை தெளிவுபடுத்த மறந்து விட்டனர்.
அதாவது ஆணையாளரின் பணி ஒரு நாட்டை அல்லது விடயத்தை திரட்டி தனது பரிந்துரையை வழங்க மட்டுமே முடியும் அவர் ஓர் நடு நிலையாளர் என்பதனால் ஒரு நாட்டிற்கு ஆதரவாகவோ எதிராகவோ தீர்மானத்தை கொண்டு வர முடியாது. இதனைக்கூட தெரியாத பலர் இன்றும் ஆணையாளருக்கு கடிதம் அல்லது கோரிக்கை அனுப்புகின்றனர்.
இங்கே ஐ.நா ஒன்றும் யாழ்ப்பாணம் மாநகர சபை அல்ல. யாழ்பாணம. மாநகர சபையிலேயே 45 உறுப்பினர்கள் என்றால் குறைந்தபட்சம் 23 உறுப்பினரகள் ஆதரிக்க வேண்டும் என்பதை வெளிப்படையாக கூற வேண்டும். அதே போன்று ஐ.நா அமைப்பிலே ஆண்டு தோறும் 47 நாடுகள் வாக்குரிமை கொண்டிருக்கும் என்பது வெளிப்படையான விடயம் இந்த 47 நாடுகளில் 24 நாடுகள் ஆதரவாக வாக்ளித்தால் மட்டுமே ஓர் பிரேரணை வெற்றியடைய முடியும்.
அவ்வாறானால் அந்த 47 நாடுகளில் இருந்து ஆதரவைப் பெறுவதற்கு இந்த அரசியல் கட்சிகள் முயல வேண்டும். இதனை எத்தனை கட்சிகள் மேற்கொண்டனர் எனத் தேடினால் அதற்கான விடையை கண்டு பிடிப்பது கடினமாகவே இருக்கும். ஏனெனில் பல கட்சிகளிற்கு இம்முறை வாக்களிக்கத் தகுதியான நாடுகளின் பட்டியலில் உள்ள நாட்டில் எவரையுமே தெரியாது என்பதோடு இவற்றில் அதிக நாடுகளிற்கு இலங்கையிலும் தூதரகம் கிடையாது.
இருக்கும் ஒரு மாத கால இடைவெளியில் இனி எந்தவொரு அரசயல் கட்சியும் இப் பணியை நிறைவேற்றி முடிக்கவும் முடியாது மாறாக தூதரகங்களிற்கு வெறுமனே கடிதம் அனுப்பினால் வாக்களிக்க அவர்கள் ஒன்றும் மாமன் மச்சானும் கிடையாது. இவ்வாறான சூழலில் தமிழ்க் கட்சிகள் எடுக்கும் முன் நகர்வுகள் தமிழ்த் தரப்புக்களை வேண்டுமானால் ஈர்க்க முடியுமே அன்றி வாக்களிக்கத் தகுதியான 47 நாடுகளை ஈர்க்க மாட்டாது.
வாக்களிக்கும் உரிமைகொண்ட ஆசியவில் உள்ள இலங்கை அரசிற்கு சார்பான முடிவை எடுக்கும் நாடுகள் எதிர்பார்க்கும் பங்களதேஸ், யப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளைக்கூட சந்தித்ததாக எந்தச் செய்திகளும் கிடையாது.
இதேநேரம் ஜ.நாவின் 60 ஆவது கூட்டத்தொடரில் மேற்குலகம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்து அது இலங்கை அரசிற்கு கடும் அழுத்தமாக அல்லது பெரும் தாக்கமாக இருக்கும் என எதிர்பார்த்தால் அந்த முடிவும் தவறானது என ஐ.நாவை தொடர்ந்து கண்காணிக்கும் தரப்புக்கள் உறுதி செய்கின்றனர் அதற்கு ஆதாரமாக மேற்குலக நாடுகளின் பட்டியலில் 13 நாடுகள் மட்டுமே உள்ளதான அதிர்ச்சித் தகவலும் உள்ளது. மிகுதி நாடுகள் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் என்பதோடு அதிக நாடுகள் மேற்குலக நாடுகளிற்கு எதிரான நாடுகள் என்பதை பலர் அறியவில்லை.
இதன் காரணமாக தொடர்ச்சியாக நிகழ்ச்சி நிரலில் தக்க வைக்கும் நோக்கில் இலங்கை அரசிற்கு மேலும் இரண்டு ஆண்டு காலம் கால நீடிப்பையே இந்தப் பிரேரணையும் வழங்கப் போகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.