400,000 சதுர அடி பரப்பளவில், அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய ஒன்ராறியோ அறிவியல் மையக் கட்டுமானத்திற்கான ஒப்பந்தத்தை ஒன்ராறியோ அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை 2029ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புது மெருகூட்டப்பட்ட ‘ஒன்ராறியோ பிளேஸ்’இன் முக்கிய அங்கமாக, ஊடாடும் (Interactive) கண்காட்சிகள், இணைக்கப்பட்ட வளாகங்கள் மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட திரைக்கூரை ஆகியவற்றைக் கொண்டு, முன்னரை விடவும் அதிகமான நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாக இது அமையவுள்ளது. மிகப்பெரும் அளவிலான இம்மறுசீரமைப்புத் திட்டம் 5,700 வேலைகளை உருவாக்குவதுடன், கட்டுமானக் கட்டத்தில் மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 420 மில்லியன் டொலர் வரையிலான பங்களிப்பை வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கார்பரோ மற்றும் ரொறன்ரோ ஆகிய நகரங்களில் வாழும் மக்களுக்கு அருகில் , ஏரிக்கரையை அண்டிய இவ்விடமாற்றம், புதிய ‘ஒன்ராறியோ வழித்தடம்’ (Ontario Line) மற்றும் கண்காட்சி நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட ‘கோ’ (GO) போக்குவரத்து இணைப்புகள் மூலம் அங்கு பயணிப்பவர்களின் பயணங்களை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்புதிய வளாகத்தின் நீண்டகால தொலைநோக்குப் பார்வை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஒன்றாரியோ இணை அமைச்சர் விஜய் தணிகாசலம் அவர்கள், “ஒன்ராறியோ மக்கள் நீண்டகால நினைவுகளையும் வாழ்நாள் முழுமைக்கும் நீடிக்கும் அனுபவங்களையும் பெறக்கூடிய ஒரு இடத்தை நாம் உருவாக்கி வருகிறோம்” என்றார். ஏரிக்கரைப் பகுதியை குடும்பங்கள் பொழுதுபோக்க ஏற்ற முதன்மையான இடமாக மாற்றுவதன் மூலம், மாநிலம் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியைப் பெறுவதுடன், சுற்றுலாத்துறையையும் ஊக்குவித்து ஆண்டுதோறும் ஆறு மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கும் எனவும் இதனால் ஒன்றாரியோ மாகாணத்தின் வருமானம் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.