ஒன்ராறியோ மாநிலமும் கறுப்பு ஜூலையின் 43ஆம் ஆண்டை நினைவுகூர்கிறது என்கிறார் மாநில இணைஅமைச்சர் விஜய் தணிகாசலம்

Share

ஒன்ராறியோவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் கறுப்பு ஜூலையின் 43ஆம் ஆண்டு நினைவை இன்று கனத்த இதயத்துடன் நினைவுகூர்கின்றனர்.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம், இலங்கை அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டு அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடர்ச்சியான வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன.

இத்தாக்குதல்களின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், படுகாயமடைந்தும், இடம்பெயர்ந்தும் பாதிக்கப்பட்டனர். அத்துடன் தமிழர்களின் வீடுகள், வணிகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டன. குடும்பங்கள் பிரிக்கப்பட்டு, முழுச் சமூகங்களும் பேரழிவிற்குள்ளாகியதால், எண்ணற்ற தமிழர்கள் பாதுகாப்புத் தேடித் தமது தாயகத்தைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர்.

கறுப்பு ஜூலையின் கொடூரங்களில் இருந்து தப்பிப்பிழைத்த பலர் பின்னர் கனடாவில் தமது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பினர். இன்று அவர்கள் எமது அயலவர்களாகவும், சமூகத் தலைவர்களாகவும், வணிக உரிமையாளர்களாகவும், பெற்றோர்களாகவும் விளங்குகின்றனர்.

இந்தத் துயரத்தின் வடுவையும், அதை எதிர்கொள்ள நிறைவேற்றப்பட்ட சட்டத்தையும் நினைவுகூர்ந்து அமைச்சர் விஜய் தணிகாசலம் அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார்:
“கொடூரமான இவ்வினப்படுகொலையால், தமிழர்கள் அளப்பரிய துன்பங்களைச் சுமந்து தமது தாயகத்தைவிட்டுப் புலம்பெயர்ந்தனர். தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இக்கொடுமைகளை உலகிற்கு எடுத்துரைக்கவும், அவர்களின் பாதிப்புகள் என்றும் மறக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவும் தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரச் சட்டம் 104 நிறைவேற்றப்பட்டது.”

இவ்வனுபவங்கள் வெறும் கடந்த காலக் கதைகள் அல்ல; அவை தப்பிப்பிழைத்தவர்களால் சுமக்கப்பட்டு, அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படும் வாழும் நினைவுகளாகும் என்று வலியுறுத்தினார். தமிழ் இன அழிப்பின் வரலாறு ஒன்ராறியோ மாநிலம் முழுவதும் என்றும் நினைவுகூரப்படுவதையும் கற்றுக்கொடுக்கப்படுவதையும் உறுதிசெய்யும் வகையில் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் சட்டம்மூலம் 104 நிறைவேற்றப்பட்டது.

43 ஆண்டுகள் கடந்த பின்னரும், சமூகத்தினரும் மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். கல்வியூட்டல், குரல்கொடுத்தல் மற்றும் நினைவுகூருதல் ஆகியவற்றின் மூலம் ஒன்ராறியோ மாநிலம் பறிக்கப்பட்ட ஒவ்வொரு உயிரையும் கௌரவிப்பதுடன், தப்பிப்பிழைத்தவர்களின் துயரங்கள் என்றும் மறைக்கப்படாது என்பதை உறுதிசெய்கிறது. என்றும் விஜய் தணிகாசலம் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>