ஒரு புராதனமான நாகரிகத்தின் தரிசனங்கள் ஆதிகால யாழ்ப்பாணம்: சமுதாயமும் பண்பாடும் -2026 (ஆங்கிலம்)

Share

நூல் விமர்சனம்

ஆக்கியோன்: பேராசிரியர் சி. பத்மநாதன்

ஒரு நூலைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு அதன் ஆசிரியரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இவர் 25க்கும் மேலான நூல்களின் ஆசிரியர். இவர் பல்கலைக்கழக வேந்தர் முதலான உயர் பதவிகளையும் சாகித்தியச் சக்கரவர்த்தி என்னும் கௌரவத்தையும் பெற்றவர்.

யாழ்ப்பாண இராச்சியம் (1978) என்னும் அரிய நூலின் ஆசிரியர். முன்பு அதனை எழுதியதால் லண்டன் பல்கலைக் கழகத்திலிருந்து கலாநிதிப் பட்டம் Ph.D பெற்றவர் (1969). பிராகிருதம், பாளி, சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலே மிகுந்த தேர்ச்சி பெற்றவர். வரலாற்று ஆவணங்களை புலமை நோக்கில் ஆராய்ந்து விளக்குவதில் இணையிலாத ஆற்றல் கொண்டவர். தெரிந்தவற்றை தயக்கமின்றித் துணிந்து சொல்வதில் முன்னுதாரணம் ஆனவர். பன்னாட்டு அறிஞரின் பாராட்டுகளைப் பெற்றவர். இந்த வினோதமான நூல் அவரின் அரிய சாதனைகளின் சிகரமாகின்றது.

இந்நூலை பெருஞ் செலவில் வெளியிடும் இந்திரஜித் அருளம்பலம் பேராசிரியர் எழுதிய எல்லா நூல்களையும் ஆர்வத்தோடு படித்தவர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பே அவரின் அபிமானியாகியவர். இப்பொழுது இலங்கைத் தமிழரின் ஆதியான, உன்னதமான வரலாற்றை உலகோர் அறியும் வண்ணமாக ஆர்வ மிகுதியோடு இதனை வெளியிடுகின்றார். இந்நூலை உருவாக்குவதற்கு றொபின் கொனிங்ஹாம் (Robin Coningham) வெளியிட்ட கருத்துகளே உந்துசக்தியானவை என்பது பேராசிரியர் பத்மநாதனின் ஒப்புதலாகும். றொபின் மேதாவிலாசமான ஆய்வாளர். அவரின் பெயர் பன்னாட்டு விலாசமானது. அன்னார் யாழ்ப்பாணத்தின் மிகப் புராதனமான வரலாறு பற்றிச் சொன்னவை மிகவும் பெருமைக்குரியவை.

யாழ்ப்பாணத்தின் ஆதிகால வரலாறு பற்றிய முதனூல் பொன்னம்பலம் இரகுபதி எழுதிய தொல்லியல் நோக்கில் யாழ்ப்பாணத்து ஆதியான குடியிருப்புகள் (1987) என்பதாகும். இதனைப் பற்றிய மங்களமான வசனங்களோடு பேராசிரியரின் நூல் நகர்ந்து செல்கின்றது. இரகுபதி கட்டமைத்த அடித்தளத்தின் மேல் விசாலமான, உறுதியான, கவர்ச்சியான கட்டுமானமாக இந்நூல் அமைந்துள்ளது.

இது பெரும்பாலும் பேராசிரியர் தனது கள ஆய்வுகளினாலே தேடிய விபரங்களையும் அருங்காட்சியகங்களில் உள்ள தொல்பொருட் சின்னங்களையும் ஆதாரமாகக் கொண்டது. அவற்றுக்கு மேலாகப் பேராசிரியர் கிருஷ்ணராசா வசமுள்ள இரு வகையான பண்பாட்டுச் சின்னங்களையும் ஸ்ரீ காந்தலக்ஷ்மியின் கிடைத்தற்கரிய தேடல்களையும் ஆய்வு செய்தமையின் மூலம் இந்நூல் உருவாகியுள்ளது. இவற்றை ஒருங்கிணைத்து எவராலும் முன்பு விவரங்களைத் தொகுத்துக் கொள்ள முடியவில்லை. இந்நூல் தமிழ்ப் பிராமி வழியாக வந்த நூல். சென்ற நூற்றாண்டிலே சிலர் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் அமைந்த பானையோடுகளை எடுத்தனர்.

ஆனால், கல்லிலும் உலோகப் பொருட்களிலும் தமிழ்ச் சொற்கள் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் மட்டுமே அடையாளம் காணப்பட்டன. இந்நூலாசிரியரின் முயற்சிகளின் பயனாகவே அந்த முன்னேற்றம்.

இலங்கையிலுள்ள பெருங்கற் பண்பாட்டுக் காலத்து ஈம கல்லறைகளிலுள்ள கல்வெட்டுக்களை அடையாளங் கண்டு விளக்கிய சிறப்பும் இந்நூலாசிரியருக்கு உரியதாகும். அக்கல்வெட்டுக்கள் தமிழ் மொழியில் எழுதியவை; நாகரைப் பற்றியவை. எனவே, நாகர், பெருங்கற்காலப் பண்பாடு தமிழ் மொழி ஆகியவற்றுக்கிடையிலான பிணைப்பு பிரிக்கமுடியாத ஒன்றென்பது நிரூபணமாகிவிட்டது. இலிங்க வழிபாடும் நாக வழிபாடும் நாகர் வழியாகவே பரவியவை என்பது உறுதியாகிவிட்டது.

இந்நூலில் ஐந்து பகுதிகளில் 18 கட்டுரைகள் அடங்கியுள்ளன. அவை ஆதிகாலத்தில் ணாகதீவு என வழங்கிய யாழ்ப்பாண தேசம் பற்றியவை; அதன் ஆதிக்குடிகளான நாகரைப் பற்றியவை. அவர்கள் தமிழ் பேசியவர்கள் என்பது இந்நூலின் மூலமாக உறுதியாகின்றது. தொல்பொருட் சின்னங்கள் அனைத்திலும் தமிழ்ச் சொற்களையே பதிவு செய்துள்ளனர்.

அவை அனைத்தும் உற்பத்திமுறை பற்றியவை; நாளாந்த வாழ்க்கை தொடர்பானவை. சமூக-பண்பாட்டு நிலைகளை வெளிப்படுத்தும் இயல்புடையவை. வீட்டுப் பாவனைப் பொருட்கள், வழிபாட்டுச் சின்னங்கள், பொதுப் பாவனைக்கு உரியவையென அவற்றை நூலாசிரியர் வகைப் படுத்தியுள்ளார். அந்தப் பகுப்பாட்டிற்கு ஏற்பவே கட்டுரைகள் இங்கு எழுதப்பட்டுள்ளன.

வீட்டுப் பாவனைப் பொருட்களில் ஒரு வகையானவை சட்டி, பானை, முட்டி, குடம் என்பன. இவற்றுள் வணிகர் கொண்டு வந்த வடஇந்திய உற்பத்தியான மெருகூட்டிய நரை நிறமான கலன்களும் ஒளிரும் வண்ணமான கரும் மட்கலன்களும் அடங்கும். உரோமரின் உற்பத்திகளான அறிற்றைன், ஒம்ஃபேலஸ் முதலான உண் கலன்களும் மதுச் சாடிகளும் அரிதானவை. கூடுதலான மட்கலன்கள் பெருங்கற்காலப் பண்பாட்டின் அடையாளமான கரும்-செம் மட்கலன்கள், செம்மட்கலங்கள் என்னும் வகைக்குரியவை.

கல்லில் அமைந்த அம்மி, குளவி, உரல் ஆட்டுக்கல் ஆகியவை கந்தரோடை அகழ்வாய்வுகளிற் கிடைத்தவை. கொள்கலன்களான நீர்த்தொட்டிகள், கஞ்சித் தொட்டிகள் பொதுப்பாவனைக்கு உரியவை. கேணி, ஆவுரஞ்சி சுமைதாங்கி செக்கு போன்றவை வேறொரு வகையானவை செப்புச்சிவலிங்கம், வேல், நாகக்கல், புத்தர் பாதம், புத்தர் படிமம் போன்றவை நாகரின் வழிபாட்டுச் சின்னங்களில் அடங்கும். அனைத்துப் பொருட்களிலும் நாகர் பற்றிய சொற்கள் காணப்படும். நாகர் வழங்கிய நாணயங்கள் பல வகையானவை. அவற்றைப் பற்றிய தெளிவான விளக்கம் இங்கு காணப்படும் நாகபந்தம், வேல்நாகன் பொலம் என்பன அவற்றின் அடையாளங்கள்.

உறுதியான அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்நூல் யாழ்ப்பாணச் சமுதாயத்தின் உற்பத்தி பற்றியது. அதன் பாரம்பரியத்தின் களஞ்சியமானது. ஆய்வுகளுக்கு முன்னுதாரணமானது. எல்லோரும் ஆர்வத்தோாடு படிக்க வேண்டிய நூல். அது இலங்கைத் தமிழரின் சுயநிர்ணயம் பற்றிய சிந்தனைக் கருவூலம்.

விமர்சனம்: கலாநிதி இரத்தினம் நித்தியானந்தன் Ph.D. London.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>