புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் மீண்டும் ஆய்வு மேற்கொண்டேன். கடந்த 04.01.2025 அன்று இம்மருத்துவமனையில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டபோது, அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை, பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள கட்டடங்கள், 3-பேஸ் மின்சார இணைப்பில் 2-பேஸ் மட்டுமே செயல்படும் நிலை, கழிவு நீர் வெளியேற்றப் பாதை சரியாக இல்லாததால் பிணவறை மற்றும் கழிவறைகள் செயல்பாட்டுக்கு வராத நிலை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, இதனால் அடிப்படை மருத்துவ சேவைகளைக் கூட திறம்பட செய்ய முடியாத சூழல் நிலவுவதாகவும், மருத்துவமனையை விரிவுபடுத்த முடியாத நிலை இருப்பதாகவும் அன்றைய சுகாதார துறை சார்ந்த அமைச்சரிடம் தெரிவித்தேன். அதன் பிறகு நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்ட டிஷா கூட்டத்திலும் விரிவாக விளக்கி கோரிக்கை வைத்தேன். இந்நிலையில், இதுவரை கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையை எடுத்துரைத்து, இனியும் காலம் தாழ்த்தாமல் ஏழை எளிய கிராமப்புற மக்கள் பயன்படுத்தும் இம்மருத்துவமனையைப் புதிய கட்டடங்களுடன் முழுமையாக மறுசீரமைக்க வேண்டும் எனக் கோரி, கடந்த 04.06.2026 அன்று முதல்-அமைச்சர் அன்புச் சகோதரர் ச. ஜோசப் விஜய்யை சந்தித்து கோரிக்கை வைத்தேன். அதன் அடிப்படையில், அடுத்த நாளான 05.06.2026 அன்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் எனது நாடாளுமன்ற அலுவலகத்தை தொடர்பு கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, நேற்று மீண்டும் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டேன். முன்பை விட மோசமான நிலையில் இருக்கும் மருத்துவமனைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், அதிகாரிகள் கொண்டு வந்த வரைபடத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியும், தேவையான மாற்றங்களுக்கான ஆலோசனைகளையும் வழங்கினேன்.
இந்த அரசின் துரித நடவடிக்கைகளால், விரைவில் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு, தரமான சிகிச்சை வசதிகள் மக்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.