கனடாவில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பெற்ற ‘தைப்பொங்கல்’ நூல் வெளியீடு

Share

சுலோச்சனா அருண்

சென்ற ஞாயிற்றுக்கிழமை 18-1-2026 அன்று கனடா எத்தோபிகோவில் உள்ள திஸ்டில் நகரமண்டபத்தில் கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் தைப்பொங்கல், மரபுத்திங்கள், மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் இடம் பெற்றன.
மங்கள விளக்கேற்றி, தமிழ்தாய் வாழ்த்து, கனடா தேசியப்பண் ஆகியன இசைக்கப்பெற்றன. அமைதி வணக்கத்தைத் தொடர்ந்து கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் அமைப்பின் பாடலுக்கு, நடன ஆசிரியர் திருமதி தயாளினி ஜீனராஜின் மாணவிகளின் நடனம் இடம் பெற்றது. இந்தப் பாடலை அகணி சுரேஸ் எழுத, சி. சுதர்சன் இசையமைக்க, மயூரதி தேவதாஸ் பாடியிருந்தார். அடுத்து திருமதி கலைமகள் புஸ்பநாதனின் வரவேற்பு உரை இடம் பெற்றது.
நூல் வெளியீட்டு நிகழ்வில் கனடாவில் இருந்து வெளிவரும் இளையதலை முறையினருக்கான, எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களை முதன்மை ஆசிரியராகக் கொண்ட ‘வதனம்’ எட்டாவது இதழும், திருமதி கமலவதனா சுந்தா எழுதிய சிறுவர்களுக்கான ‘தைப்பொங்கல்’ நூலும் வெளியிட்டு வைக்கப்பெற்றன.

தைப்பொங்கல் சிறுவர் நூல் வெளியீட்டு நிகழ்வில் அறிமுக உரையைக் குடும்ப பல்வைத்தியர் திருமதி சுமதி செல்வா அவர்களும், ஆய்வுரையை கனடா, அண்ணாமலைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் முனைவர் வாசுகி நகுலராஜா அவர்களும், ஏற்புரையை நூல் ஆசிரியர் கமலவதனா சுந்தா அவர்களும் நிகழ்த்தினார்கள். தைப்பொங்கல் பற்றிய சிறுவர்களுக்கு ஏற்ற அழகிய வண்ணப்படங்களுடன் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த நூல் வெளியிடப் பெற்றது. மரபுத் திங்கள் மாதம் என்பதால், எமது கலாச்சாரத்தை ஏனைய இனத்தவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழியும் இந்த நூலில் இடம் பெற்றது. இதற்கான வண்ணப்படங்களை ஓவியர் பிரவாகினி தர்மலிங்கம் வரைந்திருந்தார். ஜே.ஜே பிரின்ரேஸ் அச்சடித்த இந்த நூலின் வடிவமைப்பை நவீனி இராசையா மற்றும் பிரவீனி இராசையா செய்திருந்தனர்.

வதனம் இதழ் வெளியீட்டின் போது அறிமுக உரையை கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பின் நிறுவுனர் கமலவதனா சுந்தா அவர்களும், ஆய்வுரையை விரிவுரையாளர் நாகேஸ்வரி ஸ்ரீகுமரகுரு அவர்களும், வெளியீட்டுரையை குரு அரவிந்தன் அவர்களும் நிகழ்த்தினார்கள்.

குரு அரவிந்தன் அவர்கள் தனது உரையில் ‘மூன்றாவது ஆண்டில் இளைய தலைமுறையினருக்கான வதனம் இதழ் கால்பதிக்கிறது என்றும், 50 கனடா தமிழ் பெண்கள் ஒன்று சேர்ந்து தாங்கள் வாழ்ந்த ஊர்பற்றி எழுதிய தொகுப்பு மார்ச் மாதம் கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் அமைப்பினரால் வெளியிட இருப்பதாகவும், இது ஒரு சாதனை படைக்கும் நூலாக வெளிவர இருப்பதாகவும்’ குறிப்பிட்டார்.

இளைய தலைமுறையினரின் ஆக்கங்கள் தமிழில் இடம் பெற்ற இந்த வதனம் மலரின் இணை ஆசிரியராக பூமிகா அன்புதாசன் பணியாற்றினார். புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ் மொழி நிலைத்து நிற்க வேண்டுமானால், இளையதலைமுறையினருக்கு ஊடகத்துறையில் பயிற்சி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இதுவரை எட்டு இணை ஆசிரியர்கள் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களால் பயிற்றப்பட்டிருந்தனர். இந்த நிகழ்வின் போது கவிநயா விஜயதர்சன், தருண் செல்வம், அர்ச்சயா மோகன்குமார், நஸ்வியா சற்குணராசா, ஆகாஸ் ஞானவேலு, அபிராம் பிரதீபன், கீசன் தயாளன், பூமிகா அன்புதாசன் ஆகிய இணையாசிரியர்கள் அனைவரும் சபையோருக்கு அறிமுகம் செய்யப்பட்டுப் பூச்செண்டு கொடுக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டனர். இவர்களில் இருவர் இம்முறை பல்கலைக்கழக அனுமதி பெற்று பல்கலைக் கழகம் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அங்கு பொங்கல் பற்றிய சிறுவர் பாடல், காவடி ஆட்டம், நடனம், பேச்சு, கராட்டி போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன. காப்பாளர் நவா கருணரட்ணராஜா, கவிஞர் அகணி சுரேஸ் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து மேரி தயாளனின் நன்றியுரை இடம் பெற்றது. இளைய தலைமுறையினரான கவிநயா விஜயதர்சன், தருண் செல்வன் ஆகியோர் நிகழ்ச்சியைச் சிறப்பாகக் கொண்டு நடத்தினார்கள்.

கனடா கிராமத்துவதனம் பெண்கள் அமைப்பினர், கனடா தமிழ் எழுத்தாளர் இணைய அங்கத்தவர்கள், கனடா கவிஞர் கழக அங்கத்தவர்கள், ரொறன்ரோ கல்விச்சபை, அறிவக ஆசிரியர்கள் மற்று பெற்றோர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். பார்வையார்களுக்கு இனிபுப் பொங்கலும், சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>