கனடாவில் தைப்பொங்கல்

Share

கடுங்குளிர் கொண்ட கனடா நாட்டில்
காலை எட்டரைக்குக் கண்விழித்தே!
சுடுநீரில் சாம்பு தேய்த்து நீராடி
சூடான கோப்பியைச் சுவைத்தோம்
பச்சை மாவிலை பிளாஸ்டிக் தோரணம்
பவிசாக வாசலில் கட்டினோம்
பசும்பாற் பையை பிறிஜ்ஜில் எடுத்தே!
பத்திரமாய்ப் பானையில் விட்டோமே!

மின்சார அடுப்பில் மெதுவாய் வைத்தே!
மகிழ்வொடு பொங்கலைத் தொடங்கினோம்
அன்பொடு அகத்தாளும் நானும் சேர்ந்தே!
அருமையாய்ப் பொங்கல் செய்யவெண்ணி
வன்னி அரிசியென்று வடிவாய்ப் பொதிசெய்து
வரிசையாய் அடுக்கி இருந்ததில்
பொன்போல் பெற்று வந்த பச்சரிசியை
பயறுடன் பானையில் இட்டோமே!

தேங்காய்த் துருவலும் தித்திக்கும் சர்க்கரையும்
தேனும் திராட்சை வற்றலும்
பாங்காய்ப் பசுநெய்; பதமாய் விட்டே!
பேரீச்சம் பழமும் சேர்த்தோம்
கற்கண்டும் முந்திரியும் கச்சிதமாய்க் கலந்தே!
காற்பலம் ஏலமும் இட்டோம்
பற்றொடு பொங்கிய சத்தான பொங்கலை
பக்குவமாய் இறக்கி வைத்தோமே!

பட்டாசு வெடியுமின்றி பக்திப் பாட்டுமின்றி
பகலவனின்; பார்வை அற்று
முட்டான குளோசெற்றில் மூச்சடங்கி நிற்கும்
முதல்வனுக்குப் படைத்து வைத்தோம்
வட்டமாய்க் கூடியே வணக்கம் செலுத்தி
வரிசையாய் இருந்து உண்டோம்
இட்டமாய் இயன்றவரை இனத்தவர்க்கும் கொடுத்தே!
இனிமையாய்த் திருநாளைக் களித்தோமே!

என்ன விலையைக் கொடுத்தே என்றாலும்
எம்மின வருங்காலச் சந்ததிக்கு
இன்பப் பொங்கல் விழாவின் இனிமையை
இளையோர்க்கு சொல்லி வைப்போம்
தொன்மைப் பரம்பரை விழுமியம் தொலைந்திடா
தன்மையாய்ச் சிறார்க்குச் சொல்லுவோம்
உன்;னத நாளாம் உழவர் திருநாளை
உலகெலாம் அறியச் செய்வோமே!

ஆக்கம் —— மார்க்கம் சந்திரன்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>