கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் ‘கல்முனை பிராந்திய இணையம்’ அமைப்பினர் பல நற்பணிகளும் கலை மற்றும் விளையாட்டு போன்ற துறைகளிலும் தங்கள் சேவைகளை விரிவுபடுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் கடந்த18-04-2026 அன்று காலை 10.00 மணி தொடக்கம் மிசிகாசா மாநகரசபையோடு இணைந்து மெக்கன்சி பூங்காவில் (McKenzie Park, 575 Mississauga Valley Blvd ) நடத்திய மரநடுகை விழா சிறப்பாகவும் சேவைநோக்கத்தின் உச்சத்தைத் தொட்ட ஒன்றாகவும் இடம்பெற்றது என்றால் அது மிகையாகாது.
அன்றைய தினம் மிசிசாகா மாநகரசபையின் பூங்காக்கள் மற்றும் பொழுது போக்கு பிரிவின் மேற்பார்வையில் இந்த நற்பணி அரங்கேற்றப்பெற்றது.
கனடா- ‘கல்முனை பிராந்திய இணையம்’ அமைப்பின் தற்போதைய தலைவர் விசுவலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் வழிநடத்தலில் நூற்றுக்கணக்கான அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அங்கு சேவை நோக்குடன் இணைந்து அத்துடன் தங்கள் குடும்பத்தினரையும் இணைத்துக்கொண்ட வண்ணம் கலந்து கொண்டனர்.
அங்கு ஊடகவியலாளர்கள் மற்றும் கனடா இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.