எழுத்தாளர் ரவி கனகசபை அவர்களை தலைவராகக் கொண்டு இயங்கும் தற்போதைய கனடா எழுத்தாளர் இணையத்தின் இயக்குனர் சபையின் முழுமையான ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பெற்ற இவ்வருடத்திற்குரிய நூல்களின் சங்கமம்’ கண்காட்சி கடந்த 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று ஒன்றாரியோ தமிழிசைக் கலாமன் கலா மண்டபத்தில் நடைபெற்ற போது ஆரம்ப நிகழ்ச்சிகள் கலந்து கொண்டவர்கள் அனைவரும் பாராட்டும் வகையில் அமைந்தன.
அவ்வாறாக காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து மாலை 6.00 மணிக்கு நிறைவுற்ற வேளையில் அன்றைய நூல்கண்காட்சியானது நூல்களின் காட்சிக் கூடமாக மட்டும் அல்ல. ஆர்வம் கொண்ட வாசகர்களின் அற்புதமான ஒன்று கூடலாகவும் திகழ்ந்தது!
36 எழுத்தாளர்களின் புத்தகச் சாவடிகளால் நிறைந்திருந்த அந்த மண்டபத்தில் பாரதியார் குறிப்பிட்டது போன்று “ஆடுதல், பாடுதல், சித்திரம் – கவி யாதி யினைய கலைகளில் உள்ளம் ஈடுபட் டென்றும் நடப்பவர் . பிறர் ஈன நிலைகண்டு துள்ளுவார் அவர் நாடும் பொருள்கள் அனைத்தையும் – சில நாளினில் எய்தப் பெறுகுவார்” என்ற கவி வரிகளுக்கு இணங்க இயல்-இசை- நாடகம் ஆகிய துறைகளில் பற்றுக் கொண்ட பலர் அன்றைய கண்காட்சியில் நடந்தும் அமர்ந்தும் உரையாடியும் நகைச்சுவைகளைப் பகிர்ந்தும் உலாவிய ஒரு இலக்கிய உற்சவமாக விளங்கியது என்றால் மிகையாகாது.
இன்னொரு பார்வையில் பேராசிரியர்கள், தமிழாசிரியர்,கவிஞர்கள், நாடகர்கள், சஞ்சிகை வெளியீட்டாளர்கள், எழுத்தாளர்கள், விரிவுரையாளர்கள் என்ற வகையினரோடு இளைய தலைமுறையைச் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் கல்வியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்கள் மற்றும் சமூக நோக்கம் கொண்டவர்கள் என அவர்களும் அன்றை நூல் க ண்பாட்சி வெற்றிபெறுவதற்கு பல வழிகளிலும் உதவிகள் புரிபவர்களாக காணப்பட்டார்கள்.
பல எழுத்தாளர்களின் நூல்கள் அன்றைய மேடையில் வெளியிடப்பெற்ற அதே வேளையில் அவை பற்றிய விமர்சனங்கள் மற்றும் ஆய்வுகள் துறைசார்ந்த திறமை கொண்டவர்களினால் ஆற்றப்பெற்றன என்பது சிறப்புக்குரிய அம்சமாகப் பார்க்கலாம்.
விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் பங்களித்த மூன்றுக்கு மேற்பட்ட சகோதரிகள் தங்கள் பணிகளை நேர்த்தியாகச் செய்தார்கள்.
இந்த வருடத்தின் ‘நூல்களின் சங்கமம்’ மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு முழுநாள் விழாவாகவும் காட்சி ஊடகங்களால் காட்டப்பெற்றமையும் எழுத்தாளர் இணையத்திற்கு கிட்டிய வெற்றி என்றே கூறலாம்.