கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 2026 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26 ஆம் திகதி நடந்த பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாக சபையினர் தெரிவு செய்யப்பட்டனர். அடுத்து வரும் இரண்டு ஆண்டுகள் புதிய நிர்வாக அங்கத்தவர்கள் பணியாற்றுவார்கள்.
முன்னாள் தலைவர் ரவி கனகசபை அவர்களது தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், புதிய தலைவராக முனைவர் வாசுகி நகுலராஜா அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். நாகேஸ்வரி ஸ்ரீ குமரகுரு அவர்கள் செயலாளராகவும், ரவி கனகசபை அவர்கள் பொருளாளராகவும், துணைத் தலைவராக ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களும், துணைச் செயலாளராக குரு அரவிந்தன் அவர்களும், உள்ளக கணக்காளராக . இராச்குமார் குணரட்ணம் அவர்களும் தெரிவானார்கள்.
இவர்களோடு செயற்குழுவிற்காக திரு. அகணி சுரேஸ்;, திரு. சோதி செல்லா, திருமதி ராஜினி சுபாகரன், திருமதி. கமலவதனா சுந்தா, திருமதி சிவஜோதி ஜெயக்குமார், திருமதி சசிகலா ஜீவானந்தன், திருமதி வாணிஸ்ரீ சிவபாதசுந்தரம் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர். மொத்தத்தில் இதுவரை 11 ஆக இருந்த நிர்வாகசபை அங்கத்தவர்களின் எண்ணிக்கை சபையின் அனுமதியோடு 13 ஆக உயர்த்தப்பட்டது.
எழுத்தாளர் இணையத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களை காப்பாளர்களில் ஒருவராக இணைத்துக்கொள்ளும் பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்ட நிலையில், அது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஏற்கனவே காப்பாளர்களாக இருக்கும் சிந்தனைப்பூக்கள் திரு. பத்மநாதன், திரு. சிவபாலு ஆசிரியர் ஆகியோரோடு பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களும் காப்பாளர்களில் ஒருவராக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் கடந்த 33 வருடங்களாகக் கனடாவில் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது. ஆண்டு தோறும் தமிழ் புத்தகக் காட்சியை நடத்திவரும் இணையம் இதுவரை கனடா தமிழ் எழுத்துத் துறையில் பணியாற்றுபவர்கள் மற்றும் கலைஞர்கள் என எழுத்தாளர் அரங்கத்தின் மூலம் சுமார் 50 பேரை மெய்நிகர் வழியாக அறிமுகம் செய்து வைத்திருக்கின்றது. இதைவிட ஆண்டு தோறும் சிறந்த படைப்பாளிகளைத் தேர்ந்தெடுத்து வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை காலமும் எழுத்தாளர் இணையத்தின் தலைவர்களாக திரு. தெ.சண்முகராசா, திரு. திருமாவளவன், திரு. வி.கந்தவனம், திரு. சின்னையா சிவநேசன், திரு. ஆர்.என்.லோகேந்திரலிங்கம், திரு. சிவபாலு தங்கராசா, திரு. சி .சிவநாயகமூர்த்தி பேராசிரியர் இ. பாலசுந்தரம், திரு. குரு அரவிந்தன், திரு. அகணி சுரேஸ், திரு. கனகசபை ராவீந்திரநாதன் ஆகியோர் பணியாற்றி இருந்தனர். இணையத்தின் ஆரம்பகால உறுப்பினர்களான ஊடகவியலாளர் திரு. ஆர். என். லோகேந்திரலிங்கம், எழுத்தாளர் திரு. குரு அரவிந்தன், பாஸ்டர் திரு. ஜெயானந்தசோதி ஆகியோர் ஏகமனதாக புதிய செயற்குழுவிற்குத் தெரிவாகியுள்ளனர். அங்கத்தவர்களின் விருப்பத்திற்கிணங்க இம்முறை அதிக பெண் எழுத்தாளர்கள் புதிய செயற்குழுவில் இடம் பெற்றிருக்கின்றனர்.